Thursday, September 13, 2012

டக்ளஸ் மீதான பிடிவிறாந்தை ரத்துச்செய்ய தமிழக அரசு எதிர்ப்பு.

இந்தியாவில் கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளகியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனக்கு விடுக்கப்பட்டுள்ள பிடிவிறாந்தை வாபஸ்பெற்கோரியும் தான் இலங்கையிலிருந்து இணையம் ஊடாக குறித்த வழக்கு விசாரணையில் பங்குபற்ற அனுமதி கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீதிபதி எஸ். ராஜகோபாலன் முன்னிலையில் இம்மனு தொடர்பான விசாரைண நேற்று நடைபெற்ற போது தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எம். பிரபாவதி பதில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், டக்ளஸ் தேவானந்தா மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அவர் தனது மனுவில் குறிப்பிடவில்லை. அவர் இலங்கையின் அமைச்சர் என்ற சட்டபூர்வமான பொறுப்பில் உள்ளார். ஆகவே அவர் சட்டத்தை மதிக்க வேண்டும். தனது மீதான கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கினை அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திக்க வேண்டும். மாறாக, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவர், கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்காமல் இருப்பது ஏன் என்பதற்கான சரியான காரணத்தை தனது மனுவில் கூறவில்லை.

மேலும், இப்போது தன் மீதான பிடியாணையை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறார். ஆனால், அதற்கான சரியான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. எனவே, அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 20-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா திருநாவுக்கரசு என்ற இளைஞரை சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்த அவர் இலங்கைக்கு தப்பி வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா தேடபடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதேநேரம் தன்மீது கொலைக்குற்றச்சாட்டு இல்லை எனவும் குறித்த இடத்தில்தான் ஆயுதத்துடன் நின்றதாகவே வழக்கு பதிவாகியுள்ளதாக குறிப்பிடும் டக்ளஸ் குறித்த ஆயுதம் இந்திய அரசாங்கத்தாலேயே தமக்கு வழங்கப்பட்டதாகவும் பந்தை திருப்பி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com