இலங்கை நீதிபதியால் பிஜியின் முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை விதிப்பு.
பிஜியின் முன்னாள் பிரதமர் லைசேனியா கராசேவுக்கு ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அந்நாட்டு மேல் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிஜி மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதியான பிரியந்த பெர்னாண்டோ இத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
71 வயதான கராசே, 2000 ஆம் ஆண்டு பிஜியின் பிரதமராக பதவியேற்றறார். 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கொண்டர் பிராங் பெய்னிமாராமா தலைமையிலான இராணுவத்தினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
பின்னர், கராசே மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் சிறுபான்மை இந்திய வம்சாவளியினருக்கு எதிராக சுதேச பிஜி இனத்தவர்களுக்கு சாதகமாக செயற்பட்டதன் மூலம் இனமோதலை தூண்டியமை, தன்னைத்தானே பிரதமராக நியமித்துக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கராசேயின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், தனது கட்சிக்காரரின் வயது மற்றும் மோசமான ஆரோக்கிய நிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சிறையிலடைக்கபடாதவாறான தண்டனை விதிக்குமாறு கோரினார்.
பதவியை துஷ்பிரயோகம் செய்தமை, கம்பனியொன்றின் இயக்குநராகவும் பிஜி விவகார சபை மற்றும் முன்னாள் பிரதானிகளின் சபையின் ஆலோசகர் ஆகிய பதவிகளையும் வகித்தபேது ஊழலில் ஈடுபட்டமை போன்றவற்றில் கராசே குற்றவாளியென நீதிபதி பெர்னாண்டோ தீர்ப்பளித்தார்.
பிஜி நீதிமன்றங்களில் அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து நீதிபதிகள் பணியாற்றுவது பாரம்பரியமாகும். எனினும் இந்நீதிதிமன்றங்கள் சுதந்திரமானவையாக இல்லையெனக்கூறி மேற்படி நீதிபதிகள் பணியாற்ற மறுப்புத் தெரிவித்திருந்தால் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோவை மேல் நீதிமன்ற நீதிபதியாக பிஜி இராணுவ அரசாங்கம் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment