Friday, July 6, 2012

சைபர் க்ரைம் - ஒரு பார்வை

1)சைபர் க்ரைம் - ஒரு பார்வை

இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

2) இணைய குற்றங்கள் (Cyber Crimes):

1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.குறிப்பிட்ட மெயில்களிலிந்து ஈமெயில் ஐடி யை பாதுகாக்க சில வழிகளை இங்கு தருகின்றோம்.

இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன்.

A. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உங்கள் தளங்களிலோ, அல்லது வேறு தளங்களிலோ பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம். உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மெயில் ஐடிக்களை சேகரிப்பதற்காகவே நிறைய சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை ஈமெயில் ஐடி என்பதை கணித்து சேகரிக்கும்.

B. சில தளங்களில் Newsletter-ல் சேருமாரும், அல்லது சில ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய இமெயில் ஐடியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானதுதானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.

C. Gmail, Yahoo போன்றவற்றை மொபைல்களில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற மொபைல்களுக்கான சாஃப்ட்வேர்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Password-ஐ கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள். சில சமயம் என் நண்பர்களிடமிருந்து தினமும் ஸ்பாம் மெயில்கள் (Spam Mails) வந்துக் கொண்டிருந்தன. அவர்களில் அதிகமானோர் Nimbuzz பயன்படுத்தியிருந்தார்கள்.

D. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான ஈமெயில்கள் நமக்கு வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மெயில் ஐடிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மெயில்கள் வரும். சில சமயம் ஆபாச மெயில்களும் வரும். அது போன்ற மெயில்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மெயில்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும். அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்! பிறகு நமது பணம் களவாடப்படும்.

E. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று இமெயில்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மெயில்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள்.


2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

3. பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு

1. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்

2. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].

3. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்

4. கடன் அட்டை எண் திருட்டு

5. வலைத்தள ஹேக்கிங்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com