Friday, July 6, 2012

யூரோப்பகுதியில் முன்னொருபோதும் இல்லாதளவு வேலையின்மை By Christoph Dreier

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மூன்று நாட்கள் முன்பு பிரஸ்ஸல்ஸில் தங்கள் உச்சிமாநாட்டில் கண்டம் முழுவதும் உழைக்கும் மக்கள் மீதான சமூகத் தாக்குதல்களை தீவிரப்படுத்த உடன்பட்டவுடன், யூரோஸ்டாட் -Eurostat- புள்ளிவிவர நிறுவனம் வேலையின்மை 17 நாடுகளைக் கொண்ட யூரோப்பகுதியில் மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது என தகவல் கொடுத்துள்ளது.

யூரோஸ்டாட் கூற்றின்படி, யூரோப்பகுதியில் வேலையின்மை மே மாதம் 11.1 சதவிகிதத்தை எட்டியது. இது ஏப்ரல் மாத 11.0 விகிதத்தைவிட அதிகம் ஆகும். இவ்வருட ஏப்ரல் புள்ளிவிவரமும் ஏப்ரல் 2010 விகிதத்தைவிட 1 சதவிகிதப்புள்ளி அதிகமாகும். வேலையின்மை விகிதம் யூரோப்பகுதியில் தொடர்ச்சியாக ஏப்ரல் 2008ல் இருந்து 6.8% இலிருந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.

எதிர்வரவிருக்கும் மாதங்களில் வேலையின்மை விகிதம் இன்னும் உயரக்கூடும். இந்தக் காலாண்டில் யூரோப்பகுதி உத்தியோகபூர்வமாக மந்தநிலைக்குச் சரிந்துவிட்டது என்று பரந்த முறையில் நம்பப்படுகிறது. மிகச் சமீபத்திய உற்பத்தித் தகவல்கள் பொதுவான தேக்கநிலையை காண்பிக்கின்றன. மேலும் ஐரோப்பியப் பொருளாதாரத்திலேயே வலுவானதும், கண்டத்தின் மிக அதிக ஏற்றுமதி செய்யும் நாடுமான ஜேர்மனியிலும் நேரடிச் சரிவைக் காட்டுகிறது.

ஐரோப்பாவில் கீழ்நோக்குச் சரிவு என்பது உலகப் போக்கின் ஒரு பகுதி ஆகும். The Institute of Supply Management திங்களன்று அமெரிக்காவில் உற்பத்தித்துறை செயற்பாடுகள் தீவிரமாக ஜூன் மாதம் சரிந்துவிட்டது எனக் கூறுகிறது. இது 2009ல் இருந்து இம்மாதத்தில் முதல் சுருக்கத்தை காட்டுகிறது. ஞாயிறன்று சீன அரசாங்கம் நாட்டின் ஜூன் மாத உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த நவம்பரில் இருந்து அதன் மிகமெதுவான வேக வளர்ச்சியைத்தான் அடைந்துள்ளது என கூறியுள்ளது.

ஐரோப்பாவில் இளைஞர் வேலையின்மை என்பது குறிப்பாக வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. மே 2011ல் 20.5 என்பதில் இருந்து கடந்த மாதம் அது 22.6 என உயர்ந்திருக்கிறது. இளைஞர்களின் மிக அதிக வேலையின்மை விகிதமான 52.1% கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் பதிவானது.

இதன் பொருள் இந்நாடுகளில் பல பெற்றோர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அல்லது ஊதிய வெட்டுக்களில் இருக்கும் நிலையில் மற்றும் கல்விமுறை திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்பட்டுள்ள நேரத்தில் பாதிக்கும் மேலான இளைஞர்கள் வேலையின்மையில் உள்ளனர். ஐரோப்பிய ஆணயத்தின் கருத்துப்படி கிரேக்க இளைஞர்களில் 68% தாங்கள் நாட்டை விட்டு நீங்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும், மொத்த வேலையின்மை விகிதங்கள் இப்பொழுது மிக அதிக அளவிலான முறையே 21.9%. 24.6% என்று உள்ளன. இரு நாடுகளிலும் கடந்த ஆண்டு வேலையின்மை தீவிரமாக உயர்ந்துள்ளது. மே 2011ல் வேலையின்மை விகிதம் ஸ்பெயினில் 20.9% என்றும் கிரேக்கத்தில் 15.7% என்றும் இருந்தன.

பிராந்திய பகிர்வு மற்றும் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் தொடர்பாக பார்க்கும்போது, இந்த எண்ணிக்கைகள் கணிசமானவையாகும். வேலையின்மையின் உண்மையான அதிகரிப்பை இவை பிரதிபலிக்கிவில்லை.

பல வேலையின்மையில் உள்ள மக்கள், புள்ளிவிவரங்களில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் நீண்ட காலமாக வேலையில் இல்லை. உண்மையான வேலையின்மை விகிதம் யூரோஸ்டாட் அறிவித்துள்ள 11.1 ஐ விட கணிசமான அளவு அதிகம் ஆகும்.

குறிப்பாக தெற்கு ஐரோப்பிய நாடுகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளின் விளைவுதான் இந்த மிக அதிக வேலையின்மை ஆகும். இந்த நடவடிக்கைகள் வங்கிகளின் கட்டளைகளில் வந்துள்ளன. அவை தொழிலாள வர்க்கம் இந்நாடுகளை முற்றிலும் திவால்நிலைக்கு தள்ளிய நிதிய உயரடுக்கிற்கான பிணையைடுப்புக்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியில் உள்ளன. கிரேக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையின் பேரில் உண்மை ஊதியங்கள் கிட்டத்தட்ட 66% குறைக்கப்பட்டு விட்டன. நுகர்வு வரிகள் தீவிரமாக உயர்த்தப்பட்டுள்ளன, ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டுவிட்டன, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பொதுத்துறையிலும், தனியார் துறையிலும் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டனர். இதேபோன்ற தாக்குதல்கள் ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து ஆகியவற்றிலும் சுமத்தப்பட்டுள்ளன.

சமூக நலன் திட்டங்கள் அகற்றப்படுகையில், தொழிலாளர்கள் அவர்கள் குடும்பங்கள் மீதான வேலையின்மை பாதிப்பு அதிகம் ஆகிறது. உதாரணமாக, கிரேக்கத்தில் வேலையற்றோரிற்கான உதவிநிதி ஓராண்டிற்கு மாதம் 360 யூரோ மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. ஓர் ஆண்டு முடிந்தபின் வேலையற்றோர் எதையும் பெறுவதில்லை.

ஐரோப்பிய ஆணையத்தின் மிகச் சமீபத்திய காலாண்டு அறிக்கை கிரேக்கத்தில் வீடில்லாத மக்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 25% அதிகரித்து 20,000 என ஆகியுள்ளது.

சிக்கனக் கொள்கை வெகுஜன வேலையின்மைக்கு வழிவகுத்துள்ளது என்பது மட்டுமின்றி, ஐரோப்பாவில் மந்த நிலையையும் ஆழமாக்கியுள்ளது. Center for Planning and Economic Research-KEPE- கூற்றுப்படி கிரேக்கம் இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் இன்னும் 9.1% சுருக்கம் அடையும். Fitch தர நிர்ணய நிறுவனம் ஸ்பெயினுக்குக் குறைந்தபட்சம் 2013 வரை நீடிக்கும் ஆழ்ந்த மந்தநிலையைக் கணித்துள்ளது.

இந்த நெருக்கடி ஐரோப்பாவில் வெளிப்புற நாடுகளில் மட்டும் நின்றுவிடவில்லை. ஜேர்மனி, பிரான்ஸ் இன்னும் பல வடக்கு ஐரோப்பிய நாடுகளும் தொழில்துறை உற்பத்தியில் சரிவை எதிர்கொள்கின்றன. இது வேலையின்மை, ஊதிய வெட்டுக்கள் ஆகியவற்றை மேலும் அதிகமாக்கும்.

The Institute for Supply Management Purchasing Managers Index (ISM) யூரோப்பகுதியில் ஜூன் மாதம் 45.1 என்றே இருந்தது. இதே புள்ளிவிவரம்தான் மே மாதமும் பதிவாயிற்று. யூரோப் பிராந்தியத்தில் பொருட்களின் மொத்த உற்பத்தி கடந்த காலாண்டில் கிட்டத்தட்ட 1 சதவிகிதம் குறைந்துவிட்டது.

ஜேர்மனிக்கான ISM புள்ளிவிவரம் மே மாதம் 45.2ல் இருந்து ஜூனில் 45.0 எனக் குறைந்துதவிட்டது—2008 வோல் ஸ்ட்ரீட் நிதியச் சரிவைத் தொடர்ந்தபின் பதிவு செய்யப்பட்டதிலேயே இது மிகவும் குறைந்த தரம் ஆகும். பல ஜேர்மனிய நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் ஏராளமான பணிநீக்கங்கள் அறிவித்துள்ளன; திவாலான Schlecker மருந்துக்கடைகளும் இதில் அடங்கும். அது கிட்டத்தட்ட 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த வாரம் மூனிச் தளத்தைக் கொண்ட Ifo Institute, Hans-Werner Sinn ஆகியவை ஜேர்மன் பொருளாதாரம் குறைந்தபட்சம் இலையுதிர்காலம் வரை தேக்கத்தில் இருக்கும் என்று கணித்துள்ளன. The Institute for Macroeconomic Policy Institute (IMK) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜேர்மன் பொருளாதாரத்தில் பூஜ்ய வளர்ச்சிதான் இருக்கும் எனக் கணித்துள்ளது.

இந்த நெருக்கடிக்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பதில் கண்டம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்துவதுதான். கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், வங்கிகளுக்கு இன்னும் பிணையெடுப்புக்களுக்கு வசதிகள் பற்றிய உடன்பாடு இருந்தது. ஆனால் மோசமாகி வரும் மந்தநிலையை எதிர்க்க எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக, சிக்கனக் கொள்கை மீண்டும் உறுதியாக்கப்பட்டது. யூரோப்பகுதிக்கு ஒரு மத்தியமான வங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவுதல் ஏற்பட உள்ளது, நிதிய உடன்பாடு செயல்படுத்தப்பட உள்ளது. நிதிய உடன்பாடு ஒவ்வொரு நாடும் செலவுகளைக் குறைத்துத் தன் வரவு-செலவுத் திட்டங்களை சமச்சீர் செய்ய வேண்டும், அதன் வெளிக்கடன்களைக் குறைக்க வேண்டும் என உத்தரவாதம் கோருகிறது.

நிதிய உடன்பாட்டின்படி நடப்பதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் அதன் அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 25 பில்லியன் யூரோக்களைக் குறைக்க வேண்டும். திங்களன்று பிரான்ஸில் உத்தியோகப்பூர்வ கணக்கு நிறுவனம் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிடம் அவர் தற்போதைய வரவு-செலவுத் திட்டத்தில் 6-10 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களைக் கொண்டுவர வேணடும். அப்பொழுதுதான் நலிந்த பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்புக்கள் ஈடுசெய்யப்பட முடியும் என்று ஆலோசனை கூறியுள்ளது. நிறுவனம் இன்னும் 33 பில்லியன் யூரோக்கள் அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரேக்க அரசாங்கம், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் எனப்படும் முக்கூட்டு கோரும் அனைத்து வெட்டுக்களையும் அது செயல்படுத்தும் என உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொதுத்துறையில் இன்னும்150,000 பணி வெட்டுக்களும் அடங்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com