Wednesday, May 9, 2012

காதலனுடன் ஓடிப்போகும் பெண்களை கொன்று போடுங்கள்- உ.பி. டி.ஐ.ஜி. ஆவேசம்!

ஒரு பெண் தனது காதலுடன் அல்லது பிடித்தவருடன் ஓடிச்சென்றால் அது தொடர்பாக முறைப்பாடு செய்யப் பட்டால் விடயத்தினை விசாரணை செய்வதே பொலிஸாருக்கு வழங்கப் பட்டுள்ள கடமை. அவ்வாறு பெண்ணொருவர் இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் ஓடிச்சென்ற சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டபோது இவ்வாறு செய்கின்ற பெண்களை கொன்று போடுங்கள் என உத்திர பிரதேச டிஐஜி ஒருவர் தெரிவித்துள்ளமை அங்கு பெரும் சர்ச்சையை கிழப்பி உள்ளது.

குடும்ப, சாதி, மத கவுரவத்திற்காக காதலனுடன் ஓடிப்போகும் பெண்களையோ அல்லது இருவரையுமோ கொன்று போடும் கொடூரத்திற்கு எதிராக இந்தியா முழுதும் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் உ.பி. மாநில டி.ஐ.ஜி. ஒருவர் ஓடிப்போனால் கொன்றுபோடுங்கள் என்று வெளிப்படையாக கேமரா முன்னால் கூறியுள்ளார்.

உ.பி.மாநில சகாரன்பூர் சரகத்தின் டி.ஐ.ஜி.சதீஷ் குமார் கேமரா முன்னிலையில் தன்னுடைய சகோதரி இது போன்று ஓடிப்போனால் ஒன்று கொலை செய்வேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தினசரி நடவடிக்கையாக காவல்நிலையங்களைப் பார்வையிடச் சென்ற சதிஷ் குமார் மாத்தூர் என்ற இந்த டி.ஐ.ஜி. ஷவ்கீன் மொகமட் என்ற நபரைச் சந்தித்துள்ளார்.

அவர் தனது மகள் காதலுடன் ஓடிப்போய்விட்டாள் என்று டி.ஐ.ஜி.யிடம் கூறியுள்ளார்.

இஷ்ரத் ஜஹன் என்ற தனது 14 வயது பெண் ஒன்றரை மாதத்திற்கு முன்பிருந்தே காணவில்லை என்று இவர் எதேச்சையாக டி.ஐ.ஜியிடம் கூறி, தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு வேண்டியுள்ளார்.

அதற்கு டி.ஐ.ஜி. கூறிய பதில்தான் அதிர்ச்சி தருவதாகும்: 'உங்கள் மகளை மீடுக் கொடுக்க என்னிடம் ஒன்றும் மகா சக்திகள் இல்லை. உங்கள் மகள் ஓடிப்போய்விட்டாள் என்றால் நீங்கள் வெட்கித் தலைகுனியவேண்டும், தற்கொலை செய்து கொள்ளுங்கள். என்ன்டைய சகோதரி இவ்வாறு செய்தால் நான் கொன்றுபோடுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.

இவரது போலீஸ் நிலைய வருகையை கவர் செய்து வந்த உள்ளூர் மீடியா கேமிராவில் இவரது இந்த பயங்கரப்பேச்சு பதிவானது.

இச்ரத் என்ற அந்தப் பெண்ணை இருவர் கடத்தியதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த இரண்டு நபர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிகிறது. ஆனால் ஒன்றரை மாதங்களாக காவல்துறையினால் இஷ்ரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடப்பட்டு வரும் இரண்டு நபர்கள் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் தனது மகள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த முஸ்லிம் நபர் அஞ்சியே டி.ஐ.ஜி.யிடம் புகார் கூறியுள்ளார்.

டி.ஐ.ஜி.யின் அராஜக பதிலை குறிப்பிட்டு கவுரவக்கொலைகள் ஒரு போலீஸ் அதிகாரியே ஆதரித்துப் பேசலாமா என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு அவர் பதில் கூறாமல் ஏய்த்துச் சென்றார்.

மகளைப் பறிகொடுத்த ஷவ்கீன் என்ற அந்த நபர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'என்னுடைய மகள் கடத்தப்பட்டபோது இதே டி.ஐ.ஜி. அவள் ஓடிப்போய்விட்டாள் என்றார். அவர் எங்கிருந்து இந்தத் தகவலைப் பெற்றார் என்று தெரியவில்லை. ஆனால் எனது மகளை கிராமத்தினர் அனைவரின் முன்னிலையிலும்தான் அந்த இருவர் கடத்திச் சென்றனர். மேலும் எனது மகள் ஒரு சிறுமி. எது தவறு எது சரி என்று தெரியாத வயது. அவள் ஓடிப்போனாள் என்ற அவரது கூற்று உண்மையாயினும் போலீஸின் கடமை அவளை மீட்டு வருவதே, அவளது வாழ்வையும் கவுரவத்தையும் காப்பற்ற வேண்டிய போலீஸ் அதிகாரியே கவுரவக்கொலையை தூண்டி விடுகிறார்.' என்றார்.

இந்த ஜனநாயக மகளிர் சங்கம் அந்த டி.ஐ.ஜி.யை பதவியை விட்டு தூக்கி எறி என்று கோரிக்கை வைத்துள்ளது.

போலீஸ் காரர் எந்த நிறம், எந்த வடிவத்தில் இருந்தாலும் அவர்களது சுயரூபம் இத்தான் என்ற அவநம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது இந்த டி.ஐ.ஜி.யின் செயல்பாடு!.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com