Saturday, May 5, 2012

படைபலப் போட்டி: குழம்பிய ஆசியக் குட்டையில் மீன் பிடிக்கும் அமெரிக்கா

அமெரிக்கா தனது உலக வல்லாதிக்கத்தைப் பாதுக்காக்க தனது படை பலத்தைக் கூட்டுகின்ற அதேவேளை அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்க சீனா தனது படை பலத்தைப் பெருக்குகிறது. இன்நிலையில் சீனாவின் படை பலத்திற்கு ஈடு கொடுக்க இந்தியா தனது படைபலத்தைப் பெருக்கிறது. அத்துடன் இந்தியாவிற்கு ஈடு கொடுக்க பாக்கிஸ்த்தான் தனது படை பலத்தைப் பெருக்குகிறது. சீனாவின் படை பல அதிகரிப்பு ஒஸ்ரேலியா முதல் ஜப்பான ஈறாக மத்திய கிழக்கு நாடுகள் வரை ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. சின்னஞ்சிறு சிங்கப்பூரில் இருந்து பென்னம் பெரிய ஜப்பான் வரை படைக்கலன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதால் அமெரிக்கா இலாபமீட்டுகிறது. சிங்கப்பூர் உலகின் பத்தாவது பெரிய படைக்கலன் இறக்குமதி செய்யும் நாடு. வியட்னாம், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிக் குவிக்கின்றன.



தீர்க்கப்படாத ஆசியப்பிரச்சனைகள்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அத்துடன் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பதட்டம் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாகும். தென் கொரியாவை அழிக்க நினைக்கும் வட கொரியா ஜப்பானின் வர்த்தகக் கடற்போக்குவரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் சீனா. தென் சீனக் கடல் முழுவதும் (மற்ற நாட்டுக் கடற்படுக்கை உட்பட) தனது என அடம்பிடிக்கும் சீனா. இப்படி ஒரு கொதி நிலை ஆசியா எங்கும். ஏப்ரல் மாதம் வட கொரியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் நீண்ட தூர ஏவுகணைகளைச் பரீட்சித்துப் பார்த்தன.



இந்திய சீனப் போட்டி

சீனா தனது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், தனது தடங்கலற்ற கடல் வழி வழங்கற்பாதையை உறுதி செய்யவும், தனது பாது காப்ப்புச் செலவீனங்களை அதிகரித்தது. 2011இல் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஒஸ்ரேலியா தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையை மீளாய்வு செய்தது. மொத்த ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள வறியவர்களிலும் அதிக வறியவர்களைக் கொண்ட இந்தியா உலகின் மிகப்பெரிய படைக்கலன் இறக்குமதி நாடாகியது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா தனது அணுப் படைக்கலன்களை இரட்டிப்பாக்கியுள்ளது. பாக்கிஸ்த்தானிடம் இந்தியாவிலும் பார்க்க அதிகமான அளவு அணுப் படைக்கலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பாக்கிஸ்தானிடம் உள்ள அணுப்படைக்கலனகள் தீவிரவாதிகள் கைக்குப் போய்ச்சேரும் ஆபத்து உள்ளது. 2015இல் இந்தியாவின் பாதுகாப்புச் செலவீனம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்தியா நூற்றுக்கு மேற்பட்ட கடபடைக் கப்பல்களை தனது படைக்குச் சேர்க்கவிருக்கிறது. இந்தியா சீனாவிலும் பார்க்க கிட்டத்த்தட்ட இரு மடங்கு தனது கடற்படையை நவீன மயப்படுத்தச் செலவு செய்கிறது. சீனாவின் படை பலம் இந்தியாவிலும் இரண்டு மடங்கு என்று சொல்லலாம். சில அம்சங்களைப் பொறுத்தவரை மூன்று மடங்கு என்றும் சொல்லலாம். ஆனால் கடற்படை வலிமையில் சினாவிற்கு இந்தியா பெரும் சவாலாக இருக்கிறது. சீனப் பொருளாதாரம் இந்தியாவினதிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியது. சீனாவிற்கு படைக்கலன் அதிகரிப்புப் போட்டியில் இந்தியா ஈடாகமாட்டாது என்பது பலரது கருத்து.



சீனாவின் தாழ்வு மனப்பான்மை

நேட்டோப் படைகள் அடிக்கடி உலகின் பல பகுதிகளிலும் சென்று படை நடவடிக்கைக்களில் ஈடுபட்டு வருகின்றன. சீனா 1979இல் வியட்னாமில் மூக்குடை பட்டதன் பின்னர் வேறு எங்கும் போரில் ஈடுபட்டதில்லை. சீனாவின் கடற்படை ஒரு கடற் போரில் கூட ஈடுபட்டதாக சரித்திரம் இல்லை. தனது படையின அனுபவமற்றவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை சீனாவிற்கு உண்டு. சீனா தனது படை பலத்தைப் பரீட்சிக்கவும் கள அனுபவம் பெறவும் முயலுமா என்ற அச்சம் பலரிடம் உண்டு. சுவிட்சலாந்தின் நிலப்பரப்பிலும் முன்று மடங்கு நிலப்பரப்புக் கொண்ட இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தன்னுடையது என்கிறது சீனா. இந்தியாவின் எல்லைகளுக்குள் பல இடங்களில் சீனா புகுந்து படை நிலைகளை அமைத்துள்ளது.

ஆசியாவும் மக்களாட்சியும்

ஆசியர்கள் மக்கள் தொகையிலும் உழைப்பிலும் மூளைத் திறனிலும் ஐரோப்பா வாழ் ஐரோப்பியர்களையும் வட அமெரிக்கா வாழ் ஐரோப்பியர்களையும் மிஞ்சக் கூடியவர்கள். இவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதாலும் சரியான ஆட்சியாளர்களையோ சரியான ஆட்சி முறைமையையோ கொண்டிருக்காததால் பின் தங்கி விடுகிறார்கள். சீனாவில் அரச முதலாளித்துவம். இந்தியாவில் மக்களாட்சி முறைமை. ஆனால் மக்களாட்சி முறைமைக்குத் தேவையான அரசியல் கட்சிகளுக்குள் மக்களாட்சி முறைமை இல்லை. கட்சிகள் தனிப்பட்ட குடும்பங்கள் அல்லது தனிப்பட்ட குழுவினர்களின் பிடியில் இருக்கின்றன. கட்சிக்குள் மக்களாட்சி முறைமை சரியாக இல்லாவிடில் மக்களாட்சி முறமை வேலை செய்யாது. ஊழல் நாட்டில் தவிக்க முடியாத ஒரு அம்சமாகிவிட்டது.

ஊர் இரண்டுபடக் கொண்டாடுக் கூத்தாடியாக அமெரிக்கா

சீனா தனது படைத்துறையை அபரிமிதமாகப் பெருக்க ஆசிய-பசுபிக் நாடுகள் சீனாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலனகளை வாங்குவதுடன் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நாடுகின்றன. அமெரிக்க இந்த நாடுகளுடன் தனது வர்த்தகத்தை வளர்த்தும் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரித்தும் தனது உலக ஆதிக்கத்தைப் பெருக்குகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com