வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளில் 60%க்கு அதிகமானவற்றிற்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது
மூன்று தசாப்தகாலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை மீளக் கட்டியெழுப்பி வருவதாகவும், அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் 60 வீதத்திற்கும் அதிகமானவற்றிற்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏனைய பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜப்பானின் பிரதிப் பிரதமர் கத்சுயா ஒகடாவை கண்டியிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டின் சகல மாகாணங்களிலும் வாழ்கின்ற மக்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அபிவிருத்தி செயற்பாடுகளின் ஊடாக அந்த மக்களை மேம்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு 60 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள ஜப்பானிய பிரதிப் பிரதமர், ஜப்பானில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பாத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாம் விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் தனக்கேற்படுகின்ற அனுபவங்களை ஜப்பான் பாராளுமன்றத்திற்கு எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவித்த ஜப்பானிய பிரதிப் பிரதமர், இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்புக்களை பெற்றுத்தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment