வெளிநாட்டு புலிகள் நாட்டினுள் நுழைய த.தே.கூ வினரே பாலாமாகவுள்ளனர் என்கிறார் மைத்திரி
வெளிநாடுகளிலுள்ள புலிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க பாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சாடியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இதற்குத் துணை நிற்பதாகவும் இக்கட்சி புலிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு விருப்பம் தெரிவிப்பதை கடந்த மே தினத்தன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்தமை உறுதிசெய்துள்ளது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் உள்ள மஹாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் பேசும்போது, 'முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தற்போது வாழ்ந்திருப்பாராயின், நாங்கள் பாடுபட்டு உழைத்து உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியை ஏன் இப்படி அழிக்கிறாய் என ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டிருப்பார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தற்போது வாழ்ந்திருப்பாராயின் அவரது மகன் சஜித் பிரேமதாஸவின் காதைத்திருகி நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு கட்சியில் எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டேன், நாட்டில் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்தேன் என்பதை நீ மறந்து விட்டாயா என்றும் கேட்டிருப்பார்.' என்றார்
இன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் நிலை என்ன? அதனிடம் சரியான செயற்திட்டங்கள் இல்லை. கட்சிக்குள் பிளவுகள். இதனிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர்கள் கைகோர்க்கின்றனர். புலிகளை நாட்டிற்குள் கொண்டு வரும் முகமாகக் கைகோர்க்காமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அமர்ந்து இனங்களுக்கு இடையிலான இணக்கப்பாட்டு பிரச்சினை உட்பட நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கை கோர்த்தால் அது வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை சர்வதேச ரீதியில் பல நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது. எந்தவொரு எதிர்க்கட்சிகளும் ஒரு கொடியின் கீழ் நின்று நாட்டின் பலத்தை வலுப்படுத்த முடியாதுள்ளது. ஐ.தே. கட்சிக்குள் இரண்டு பிரிவுகளாக செயற்படுகின்ற அதேவேளை, ஜே.வி.பி. கட்சியும் இரண்டாக உடைந்து, இரண்டாவது பிரிவு மூன்றாக உடைந்து காணப்படுகிறது.
0 comments :
Post a Comment