Saturday, May 5, 2012

ஓசாமாவின் உடல் இருக்கும் இடம் தெரியும் என பிரபல தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சீல் கடற்படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் பலியான சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 2ம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் நடந்த அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட ஒசாமாவின் உடலை கடலில் வீசியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பில் வாரன் என்பவர் அமெரிக்கா கடலில் வீசிய ஒசாமாவின் உடல் அடங்கிய பை எங்குள்ளது என தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளியிட்ட சில புகைப்படங்களில் இருந்து ஒசாமாவின் உடலை எங்கு வீசியிருப்பார்கள் என தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து மேற்கே அரபிக்கடலில் 320 கி.மீ., தூரத்தில் ஒசாமாவின் உடல் அடங்கிய பை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர் வரும் ஜூன் 1ம் திகதிக்கு முதல் இதற்கான பணியை தான் துவங்கவுள்ளதாகவும், இதற்கு ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை தேவைப்படும் எனவும் கூறியுள்ளார். ஒசாமாவின் உடலை தேடும் பணிக்காக 2 லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை செலவிட உள்ளதாகவும் வாரன் கூறியுள்ளார்.

தேசப்பற்று மிக்க அமெரிக்கரான தன் போன்றோருக்கு, ஒசாமா இறந்ததற்கான ஆதாரத்தை அளிக்க ஒபாமா நிர்வாகம் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர் தற்போது அஜர்பைஜானில் இருந்த தனது பணிகளை கவனித்து வருவதாகவும் ஒசாமா உடல் தேடும் பணிக்காக ரஷ்யாவிலிருந்து அகழ்வாராய்ச்சி கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது முயற்சியின் போது பின் லாடனின் உடலை வெளிக்கொண்டு வரப்போவதில்லை எனவும், தனது ஆய்வை முழுவதும் வீடியோ எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும், டி.என்.ஏ., டெஸ்ட் எடுப்பதற்காக பின் லாடனின் உடல் பாகங்களை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக வாரன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com