Wednesday, May 2, 2012

சம்பந்தன் தேசியக் கொடியை தாங்கி நிற்கும்போது, புலிக்கொடியுடன் ஓடியவர்கள் யார்?

நேற்று யாழ்பாணத்தில் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. குறிப்பிட்ட நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக இணைந்து ஒர் மேடையில் தோன்றினர். இம்மேடையிலே தமிழ் மக்களின் மூத்த தலைவர் என வர்ணிக்கப்படுகின்ற இரா சம்பந்தன் அவர்கள் இலங்கையின் தேசியக்கொடியை மிகவும் உயரப்பிடித்து நிமிர்ந்து நின்றதுடன், அதே நிகழ்வில் விஷமிகள் சிலர் புலிக்கொடியுடன் ஓடியும் ஒருவர் தனது மேல் உள்ளாடையில் தமிழீழம் பொறித்த ரீசேட் ஒன்றை அணிந்திருந்து அதை திறந்து காட்டியுமுள்ளார்.

இன்று இந்நிகழ்வு பலராலும் பலகோணங்களில் நோக்கப்படுகின்றது. இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதோர் விடயமென புலிகளின் தரப்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் புலிகளின் செயற்பாடுகளுக்கு இடமில்லை என்பதும், அங்குள்ள இளைஞர்கள் புலிகளுக்கு உதவ தயாரக இல்லை என்பதுவுமே இலங்கை புலனாய்வுத்துறையினரின் கருத்தாகவுள்ளபோது அக்கூற்றினை தோற்கடிக்ககூடிய மேற்படி செயலை அவர்கள் செய்வார்களா? என்பதும் அதனால் அவர்கள் அடையப்போகும் லாபம் என்ன என்பதுவுமே கேள்விகளாகும்.

எவ்வாறாயினும் மேற்படி சம்பவமானது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்டதோர் நிகழ்வாகும். இதன் பின்னணியில் உள்ளவர்களின் நோக்கம் வடக்கில் வாழுகின்ற மக்களின் நிம்மதியை குலைப்பதாகும். இலங்கையிலுள்ள மக்கள் எவ்வளவு இன்னல்களை நோக்குகின்றார்களோ அந்தளவு பயனை தாம் அடையமுடியும் என்பதே அன்றிருந்த புலித்தலைமையினதும் அவர்களின் பின்னால் நின்ற புலம்பெயர் புலிப்பினாமிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் வடக்கில் இவ்வாறானதோர் ஸ்திரமற்ற நிலையை தோற்றுவித்து குளிர்காய விரும்பும் புலிகளால் விலைக்கு வாங்கப்பட்ட விஷமிகளால் நிறைவேற்றப்பட்டதோர் செயலாகவே இது இருக்கமுடியும்.

குறிப்பிட்ட படங்களில் உள்ள விஷமிகள் சிங்களச் சிப்பாய்களாகவே இருக்கமுடியும் என புலிகளின் ஊடகங்கள் வாதிடுகின்றது. அவர்கள் சிங்களச்சிப்பாய்களாக இருந்தாலும் அவர்கள் ஜேவிபி மற்றும் அரசிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்துடிக்கின்ற புலம்பெயர் புலிகள் உட்பட இதர தரப்பினரின் கைக்கூலிகளாகவே இருக்க முடியும்.

இங்கு மிகவும் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் மேற்படி புலிப்புரளியினுள் முக்கியமானதோர் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு மறைந்து கிடக்கின்றது. அதாவது புலிகளின் ஆட்சியில் மேதினக் கொண்டாட்டங்கள் உட்பட அரச, பொது நிகழ்வுளில் புலிகளின் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டுவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது பூரண சுதந்திரத்துடன் செயற்பட்டு வருகின்றனர். நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இலங்கையின் தேசியக் கொடியை தூக்கிக்கொண்டு தள்ளாடும் வயதிலும் தளராமல் திடகாத்திரமாக நிற்கும் காட்சி , அண்மைக்காலங்களாக நான் இலங்கையன் இலங்கையனாகவே மரணிக்க விரும்புகின்றேன் என சம்பந்தன் அவர்கள் பறைசாற்றுவதை சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்துள்ளது.


1 comments :

Anonymous ,  May 3, 2012 at 3:26 PM  

Because of LTTE the TNA have missed the golden
opportunities to find a strong solution to the Tamils.
Ranil also missed the chance to be a President.
Now the Tamils start realizing the fact that,
Who is our real enemy.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com