தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அறிக்கை
சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்கவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைக் கையாளும் விதம் மனித உரிமைக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.
முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமது மத சுதந்திரத்தைப் பயன்படுத்தி மஸ்ஜிதுல் ஹைரிய்யா என்ற பெயரில் ஒரு பள்ளிவாசலை நிறுவி கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பரிபாலித்து வருகின்றனர்.
தம்புள்ளை வாழ் மக்களுக்கோ ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி மிக அமைதியான முறையில் தமது மதக் கடமைகளை நிறைவேற்றி வந்துள்ளனர். தீவிரவாத சிந்தனை கொண்ட சிலரின் கோரிக்கையை ஏற்று தம்புள்ளைப் பள்ளிவாசலை அகற்றுவதற்கோ இடம் மாற்றுவதற்கோ முயற்சிப்பது இலங்கை வரலாற்றில் ஒரு பிழையான முன்னுதாரணத்துக்கு வழிவகுக்கும்.
இந்த நாட்டின் முன்னோர்கள் பல அர்ப்பணிப்புகள் செய்து கட்டிஎழுப்பிய ஆயிரம் வருட கால பௌத்த- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே இது வரலாற்றில் பதியப்படும்.
முப்பது வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இன. மத பேதங்களால் ஏற்பட்ட விளைவுகளால் நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதாகவே அமையும்.
இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அவர்கள் மிகச் சரியான முடிவை எடுத்து நாட்டு மக்களுக்கு அறிவித்து தம்புள்ளை நிகழ்வினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை மாற்றி இயல்பு நிலைக்குக் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது எமது நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதிக்கு பெற்றுத் தருவதுடன் சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.
உதவிப் பொதுச் செயலாளர்
எம்.எம்.எச். ஹஸன்
01.05.2012
0 comments :
Post a Comment