Tuesday, April 17, 2012

இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு நேற்று இரவு இலங்கை வந்தது

இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேற்று திங்கட்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தது. புதுடில்லியிலிருந்து விசேட விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் நேற்று இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர்.

இத்தூதுக்குழுவில் இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய தூதுக்குழுவினரை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் வரவேற்றனர்.

ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு, வடக்கு, கிழக்கு, மலையகம் என பல பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளது.

இலங்கை தங்கியிருக்கும் காலத்தில் இந்தக் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்இ பிரதமர் டி.எம்.ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட முக்கியஸ்தர்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பாராளுமன்றக் குழு சபாநாயகர் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் சந்திக்கவுள்ளது.

இக்குழுவினர், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, களுத்துறை, டிக்கோயா, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குச் சென்று, தமிழர்கள் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகளைப் பார்வையிடவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com