ஜ.நாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள்
ஐக்கிய நாடுகள், மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலியான குற்றச்சாட்டுக்களை கண்டித்து, நாட்டின் நாலா பாகங்களிலும் பல்வேறு கண்டன பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.
30 ஆண்டுகால பயங்கரவாதத்தினால் நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும், இன்னல்களுக்கு முகங்கொடுத்த போதிலும், குறிப்பாக வட மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள், மிக மோசமாக பாதிக்கப்பட்டனர்.
தமது அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்ததுடன், பிள்ளைகளின் கல்வி, பாதிக்கப்பட்டு, அவர்கள் வேலைவாய்ப்பின்றி, சொந்த இடங்களை விட்டு வெளியேறி, அகதி முகாம்களில் அல்லல்பட்டனர்.
இந்த கொடிய யுத்தத்திற்கு முடிவு கொண்டு வரும் நோக்கில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர், மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு, வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டிலும், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தினார்.
வடக்கில் வாழ்ந்த மக்கள், தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பினர். தாம் அனுபவித்த இன்னல்கள் நீங்கி, இன்று வட மாகாணம் அபிவிருத்திப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
வட மாகாண அபிவிருத்திப் பணிகளுக்கு, அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவிற்கும் கூடுதலான தொகையை ஒதுக்கி, அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வடக்கிற்கான ரயில் சேவை உட்பட ஏனைய போக்குவரத்து வசதிகளை, மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள், இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ் நகரம் உட்பட பிரதான நகரங்களில் மக்கள் இன்று தமது அன்றாட நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதை, அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், மீண்டும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள், தங்களது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இலங்கை மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இலங்கை அரசையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், நாட்டின் பாதுகாப்பு படையினரையும் சிரமத்திற்குட்படுத்தும் தோல்விகரமான ஒரு முயற்சியில், மேற்கு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதனை கண்டித்து, கடந்த 27 ஆம் திகதி முதல், வடக்கில் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தாம் பெற்ற அமைதியை மீண்டும்சீர்குலைக்காதே, மேற்கு நாடுகள் இலங்கையின் அந்தரங்க விடயங்களில் தலையிடாதே? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த உண்மையான சுதந்திரத்தில் தலையிடாதே என்று, அம்மக்கள் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இலங்கையின் சுதந்திரத்தில் வீணாக தலையிட முயற்சிப்பதை கண்டித்து, அந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, என பல இடங்களில், பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment