Thursday, March 1, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தொடரப்பட்டிருந்த போர்க்குற்ற வழக்கு தள்ளுபடி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது போர்க்குற்றம் சுமத்தி அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தினால் நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு ஒன்றின் ஜனாதிபதி என்பதாலும் அதனால் அவருக்கே உரிய சிறப்புரிமை மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கம் அறிவுறுத்தியதையடுத்தே மேற்படி வழக்கினை விசாரணைக்கு உட்படுத்தாத வகையில் தள்ளுபடி செய்வதாக அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி கொலீன் கொலர் கொடலி தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தனிநபரும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள்இ மற்றும் தவறான மரணங்களுக்கு எதிராக இழப்பீடு கோர முடியும் என்று 1992ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சித்திரவதைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு புலம்பெயர் தமிழர்களால் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வழக்கின் நேற்றைய பரிசீலனையின் போது வாதிகளின் தரப்பில், 'எந்தவொரு தனிநபரும்' என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் அரச தலைவராக இருந்தாலும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராஜதந்திர விலக்குரிமை பொருந்தாது என்று வாதிடப்பட்டது.

இருப்பினும், அரசதலைவர்களுக்கு விலக்குரிமை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விதந்துரை செய்யும் பட்டசத்தில், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியும் என அமெரிக்க காங்கிரஸின் ஆவணங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய மேற்படி மாவட்ட நீதிமன்ற நீதிபதி கொலீன் கொலர் கொடலி தெளிவுப்படுத்தியதுடன் குறித்த வழக்கினைத் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com