Wednesday, February 29, 2012

மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் உட்பட நால்வருக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோ உட்பட சந்தேக நபர்கள் நால்வரை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி அமரசிங்க இன்று (29) உத்தரவிடார்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை வர்த்கர் ஒருவரிடமிருந்து மோசடியான முறையில் ஏமாற்றி பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் சட்டத்தரணியூடாக பொலிஸாரிடம் சரணடைந்தார்.

பின்னர் சந்தேக நபர்கள் நால்வரும் நீதிமன்ற உத்தரவில்

விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே நால்வரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வழக்கின் முறைப்பாட்டாளரான அப்துல் சலாம் முகம்மத் அஜ்வாத் என்ற வர்த்தகரிடம் பொலிஸார் போன்று நடித்து அவரிடமிருந்த 3500 யூரோ பணத்தை அபகரித்துள்ளனர்.

கட்டுநாயக்க – வேபட பிரதேசத்தில் குறித்த வர்த்தகர் தங்கியுள்ள வீட்டில் இந்த சம்பவம் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. இதனை அடுத்து குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவுக்கும் இந்த சம்பவத்ததுடன் தொடர்பு இருப்பதாக பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்ததுள்ளதன் அடிப்படையிலேயே எதிர்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை பூர்த்தி அடையவில்லை என்பதால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு தாங்கள் ஆட்சேபம் தெரிவிப்பதாக கட்டுநாயக்க பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com