Wednesday, February 29, 2012

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடியும். சம்பந்தன் முன்னிலையில் ஜனாதிபதி

எமது நாட்டின் பிரச்சினையை எம்மால் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டு அழுத்தங்கள் தேவையில்லை இல்லை எனவும் அதற்கு நாங்கள் அடிபணியவும் மாட்டோம் எனவும் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அணிதிரள்வோம் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ராவய பத்திரிகையின் வெள்ளிவிழா ஆண்டு பூர்த்தியை முன்னி;ட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற பைவத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பெரியோர் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்து பேசுகையில்.
 
அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் அவதானம் செலுத்த வேண்டுமென்பதே எமது கருத்தாகும்.  ஆகவே அனைவரும் மதித்து கௌரவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவதில் தற்போது மிகவும் இன்றியமையாத விடயமாக மாறியுள்ளது. பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டும் எமது பணியல்ல.  எதிர்காலத்தில் ஆயுதம் மோதல் ஒன்று உருவாகாமல் இலங்கையை பாதுகாப்பதும் எமது கடமையாகும். இனவாதத்தை தூண்டி இனவாதம் தொடர்பாக பேசி நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னிற்கவில்லை. ஒரே நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எம்மை அர்ப்பணிப்பதற்கு இதுவோ சிறந்த தருணம், அதனை நாட்டின் தலைவரால் மட்டும் மேற்கொள்ள முடியாது. சமய தலைவர்கள் ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் , அதாவது நாட்டை நேசிக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.

நமது நாட்டில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு வெளிநாடுகளின் பங்களிப்பு  தேவையில்லை. வெளிச்சக்திகள்  நமது நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த வருகிறோம், என்று தெரிவித்தால் அது நடைமுறைசாத்தியமற்றதாகும். அதனை நான் நம்புவதில்லை. இலங்கையின் இறைமையையும் ஆட்புலத்தையும் பாதுகாப்பு ஒரே இலங்கையர்கள் என்ற நாட்;டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் இணைந்து  பாடுபட வேண்டும். இதனை நாம் செய்யாவிட்டால் எதிர்கால சமுதாயம் எம்மை சபிக்கும். அதனை அரசியல்வாதிகளால் மாத்திரம் செய்ய முடியாது. ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் மத தலைவர்கள்,   உள்ளிட்ட அனைவரும் அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற முடியாமல் போய்விடும்.
 
இலங்கையின் தீர்வு திட்டங்களே இலங்கைக்கு பொருத்தமானதாகும். வேறு தரப்புகளால் திணிக்கப்படும் தீர்வுகள் ஒரு போதும் பொருத்தமாக அமையாதென எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வைபவத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு அடிபணியாமல் இருப்பது இலங்கையின் தனிப்பnரும் கௌரவம் எனவும் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு ராவய உள்ளிட்ட ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார்.

ஜனநாயக விழுமியங்களை போன்று சிறந்த வாழ்க்கை கட்டமைப்பொன்றை ஜனநாயகத்தின் மூலம் உருவாக்க முடியும் என்பதை நாம்  நிருபிக்க வேண்டும். தென்பகுதி மக்களும் வடபகுதி மக்களும் பிரச்சினையை தீர்க்க முடியுமென நம்புகின்றனர்.  அதற்கு நாம் நடைமுறை சாத்தியமான தீர்வொன்றை காண வேண்டும். இலங்கையில்  எட்டப்படும்; இந்நாட்டின் தீர்வே இந்நாட்டுக்கு பொருத்தமானதாகும்.

ராவய பத்திரிகையின் 25 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 14 பேருக்கு கௌரவ சின்னங்களையும் வழங்கினார். தமி;ழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நிஸாம் காரியப்பர், ஆகியோரும் இங்கு உரையாற்றினர். மகா சங்கத்தினர், சர்வமத தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏராளமான வாசகர்களும் இதில் கலந்து கொண்டனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com