Friday, January 13, 2012

ஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்: ஆய்வு தகவல்

ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில், இந்தியாவுக்கு 9.21 வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளன.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால் 9.21 புள்ளிகள் பெற்று இந்தியா கடைசியில் உள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம் அதாவது அதிகாரிகள் திறமை குறைந்தவர்களாக உள்ளனர். இவர்கள் மீது, ஊழல் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான புகார்கள் கூறப்படுகின்றன. இது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக, இந்திய அதிகார முறைமையில், போதுமான உட்கட்டமைப்பு வசதி இல்லாதது, ஊழல், அதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்படுவது போன்றவை பெரும் பிரச்னைகளாக உள்ளன. நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம், தங்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன.

மேலும், இந்தியாவில், தாறுமாறான மற்றும் கடும் சுமையை ஏற்படுத்தக் கூடிய வரிகள், சுற்றுச் சூழல் மற்றும் பிற கட்டுப்பாடுகள் ஆகியவை, அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. இதனால் அந்நிறுவனங்களுக்குப் பெருமளவில் செலவு ஏற்படுகிறது. இந்திய கோர்ட்டுகளுடன் மல்லுக்கட்டுவதை விட அவற்றைத் தவிர்ப்பதையே நிறுவனங்கள் விரும்புகின்றன. தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது அதற்கு இந்திய அதிகாரிகள் பொறுப்பேற்பதே இல்லை. எப்போதாவதுதான் பொறுப்பு ஏற்கின்றனர். இதனாலேயே பெரும்பாலான அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com