Thursday, January 12, 2012

யாழ் சென்று உண்மையான நிலைமைகள் அறிந்து கொண்டோம் என்கின்றனர் கனடிய எம்பிக்கள்

கனடா சென்றதும் புலம்பெயர் தமிழரிடம் திரட்டிய பணத்திற்கு என்ன நடந்தது எனக் கேட்கவுள்ளோம்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வடபகுதிக்கு இருநாள் விஜயத்தினை மேற்கொண்டு அங்கு பலதரப்பட்ட தரப்பினரையும் சந்தித்து திரும்பியுள்ளது. தமது யாழ் பயணம் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தமது வடபகுதிக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம், இலங்கையின் உண்மையான நிலைமைகளையும் புலம்பெயர் தமிழர்களின் பொய்யான தகவல்களையும், அறிந்து கொண்டோமென, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் தமிழர்கள், இலங்கை தொடர்பாக முற்றிலும் பொய்யான தகவல்களை வழங்கி, தம்மை ஏமாற்றியதாக, கனேடிய பாராளுமன்ற குழுவை சேர்ந்த ஜோ. டேனியல் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எமக்கு இலங்கை தொடர்பாக கனடாவில் ஒரு தரப்பினரின் கருத்துகளை மாத்திரமே, அறிந்து கொள்ள முடிந்தது. அது, புலம்பெயர் தமிழர்களின் கருத்தாகும். இதனால், உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கே, நாம் இலங்கைக்கு வருகை தந்தோம். இப்போது, உண்மை நிலை எமக்கு புரிந்துவிட்டது. வடபகுதியின் நிலைமைகள், மிக வரவேற்கத்தக்கதாகவுள்ளது. வட பகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறுகின்றன. அம்மக்களின் வாழ்க்கை நிலை சிறந்த மட்டத்தில் காணப்படுகின்றது. முதலீடுகளுக்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் உகந்த சூழல், வடபகுதியில் நிலவுகின்றது. இலங்கையின் உண்மையான நிலைமை தொடர்பாக, கனேடிய அரசாங்கத்தை மட்டுமன்றி, முழு உலகையும் அறிவுறுத்த, நாம் நடவடிக்கை எடுப்போம். அதுமட்டுமன்றி, கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, நாம் கூறவுள்ளோம் என்றார்.  

கனேடிய பாராளுமன்ற குழுவின் விசேட உதவியாளர் மாரின் கெலியோவும், கருத்து கூறுகையில் , புலம்பெயர் தமிழர்கள், கனடாவில் பாரிய அளவில் நிதி திரட்டுகின்றனர். அந்த நிதி, வடபகுதி தமிழ் மக்களின் நலன்புரி விடயங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக, அவர்கள் கூறுகின்றனர். எனினும் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தில், அம்மக்களுடன் நாம் உரையாடிய போது, இவ்வாறு திரட்டப்படும் பணம், வடபகுதி மக்களுக்க கிடைக்கவில்லையென்பதை, எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நாம் கனடா திரும்பியவுடன், புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம், அவ்வாறு திரட்டிய பணத்திற்கு என்ன நடந்தது என்பதை, கேட்கவுள்ளோம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com