வவுனியா புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டது
இலங்கையின் வடக்கே வவுனியா பம்பைமடுவில் இயங்கி வந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் வியாழனன்று அறிவித்திருக்கின்றது. யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதிகள் உள்ளடங்கலான கட்டிடத் தொகுதியே, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் சார்பில் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, இவ்வாறு புனர்வாழ்வுப் பயிற்சி நிலையமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ராஜகுரு அவர்களினால் இந்த நிலையம் இன்று வைபவரீதியாக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் டி.பி.திசாநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான இறுதிச் சண்டைகளின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பதினோறாயிரம் பேர் வரையில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இவர்களின் புனர்வாழ்வுப் பயிற்சிக்கென 24 பயிற்சி நிலையங்கள் செயற்பட்டு வந்தன. அவற்றில் பம்பைமடு புனர்வாழ்வுப் பயிற்சி முகாம் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இங்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டது. பம்பைமடு புனர்வாழ்வு நிலையம் மூடப்படுவதையடுத்து, இங்கு பயற்சி பெற்று வந்தவர்கள் தற்போது கிழக்கு மாகாணத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தம் காரணமாகத் தமது கல்வியை இழந்துள்ள அவர்களில் ஒரு பகுதியினர் உயர்கல்வி அமைச்சின் விருப்பத்திற்கமைய சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் புதிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு கணினி பயிற்சியளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ராஜகுரு தெரிவித்திருக்கின்றார்.
நன்றி பிபிசி
0 comments :
Post a Comment