Saturday, January 14, 2012

பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி அபாயம்

பாகிஸ்தானில் இராணுவத்திற்கும், கிலானி தலைமையிலான அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்ற நிலை காணப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் நயீம் கலீத் லோதியை பதவியிலிருந்து நீக்கினார். இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது.

பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பர்வேஸ் கயானி, உயர்மட்ட ராணுவத் தளபதிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டினார். அவசரமாகக் கூடிய உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் அரசாங்கமும் அவசரமாக நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டி தற்போதைய நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் யூசுப் ராஸா நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கும் கடமை பாகிஸ்தான் இராணுவத்திற்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

'நான் இந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். எனவே நம்பிக்கை வாக்கு கோரும் அவசியம் ஏதும் இல்லை.

எனது அரசு நாட்டின் எந்த ஒரு அமைப்புக்கும் எதிரானதல்ல. ஆனால் முதல்முறையாக இராணுவம், நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்க செய்யவைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இராணுவத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் ஆதரவை நான் கோரவில்லை' என்று அவர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com