Friday, January 13, 2012

ஜே.வி.பி. மாற்றுக் குழுவினர் புலிகளுடன் இணைந்து குழப்பங்களை ஏற்படுத்த திட்டம்- சம்பிக்க

இலங்கையிலிருந்து தப்பித்துச் சென்று சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற மாற்றுக் குழுவினர் சர்வதேச நாடுகளிலுள்ள புலி உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு நாட்டில் குழப்பங்களையும் பாரிய போராட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். எனவே இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியுள்ளதுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்திற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துசெயற்படுவதாக ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு ஒப்புக் கொண்டுள்ளது.

வட மாகாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் முன்னாள் புலி போராளிகள் இணைந்து கொண்டுள்ளதாக கிளர்ச்சிக்குழு உறுப்பினர் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் சுமார் 900 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 500 கைதிகளுடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலிப் போராளிகள் தம்முடன் இணைந்து கொண்டுள்ளதனை மறுக்கவேண்டியதில்லை எனவும் , எந்தவொரு பிரிவினைவாத அமைப்புடனும் இணைந்து தாம் அரசியல்நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com