Thursday, January 12, 2012

ஜெயலலிதா தொடர்பாக அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் மன்னிப்பு கோர உத்தரவு.

முதல்வர் ஜெயலலிதா குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தான் கைதாவதைத் தவிர்க்க அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று கோபாலுக்கும் மற்றவர்களுக்கும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக நக்கீரன் வெளியிட்ட செய்திக்கு எதிராக கோபால், காமராஜ் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதில், எனவே என்னைப் பற்றி செய்தி எழுத, வெளியிட, விற்பனை செய்ய நக்கீரன் பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் வேண்டும் என்றே அவமதித்ததற்காக நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் பி.டி. பெருமாள், முதல்வரைப் பற்றி வெளியான செய்தியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், அதற்கான மன்னிப்பு அறிவிப்பை பத்திரிகையின் முக்கிய பகுதியில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

அதற்கு முதல்வர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், முதல்வரைப் பற்றி நக்கீரன் பத்திரிகை முதல் பக்கத்தில் தான் செய்தி வெளியிட்டது. எனவே மன்னிப்பையும் முதல் பக்கத்தில்தான் வெளியிடவேண்டும் என்றார்.

அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, இந்த மன்னிப்பை வரும் நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றார்.

உடனே நக்கீரன் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே வரும் இதழுக்கான அச்சடிக்கும் பணி முடிந்து விட்டது என்றார்.

குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மின்சார இணைப்பு இல்லை என்றீர்கள். எப்படி அச்சடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு இருந்தாலும் அதை மாற்றி விட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதை முதல் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோர் மீது ஜாம்பஜார் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் கைதாவதைத் தவிர்க்க, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நக்கீரன் கோபால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நக்கீரன் கோபாலுக்கு நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கினார். அவர் 4 வாரத்துக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com