Thursday, January 12, 2012

45 வயதிலேயே தடுமாற்றம்! - ஆய்வுத்தகவல்

நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன் உள்ளிட்ட மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பேயேகூட குறைய ஆரம்பித்து விடுகின்றன என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது. இப்படியான .ஆற்றல்கள் குறைவதற்கு மேலும் வயதாகும் என இதுவரை கருதப்பட்டுவந்தது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ சஞ்சிகையில் தமது ஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ள பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மூளைத் திறன்களை நெடுங்காலத்துக்கு அவதானித்து, இந்த முடிவைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மூளையின் திறன்களைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துவரும் நிலையில், ஒருவர் வயதாகும்போது அவரது மூளையின் திறன்களில் ஏற்படக்கூடிய தாக்கங்களை விளங்கிக்கொள்வது என்பது இந்த நூற்றாண்டில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகின்றனர்.

45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு நடத்தப்பட்ட பத்து வருடங்களில் இவர்களில் எல்லா வயதுக்காரர்களுக்குமே நினைவுத்திறன், பகுத்தாய்வுத்திறன், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் போன்றவை குறைந்து போயிருந்தன.

அதிக வயது உடையவர்களிடையே இவ்வகையான திறன்கள் குறையும் வேகம் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆய்வில் தெரியவந்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 45 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம்கூட மூளையின் திறன்கள் குறைந்துபோவது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

மூன்று சதவீதத்துக்கும் அதிகமான ஒரு திறன் இழப்பு இந்த வயதுக்காரர்களிடம்கூட காணப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

மூளையின் திறன்கள் குறைந்துபோவது என்பது அறுபது வயதில்தான் ஆரம்பிகிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சின்ன அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.
ஆனால் அந்த முடிவுகளை பிழையாகக் காட்டுவதாக தற்போதைய ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.

முந்தைய ஆய்வுகளும் தற்போதைய ஆய்வும் உடன்படுகிற ஒரு விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் கொண்ட வாழ்க்கை முறைக்கும் டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகலுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.

சிறு வயது முதலே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்வதென்பது உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் மூளையின் திறன்களைப் பேணுவதற்கும் அவசியம் என இந்த ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com