Wednesday, November 30, 2011

அமெரிக்கா, ஐ.நா. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அலட்சியம் செய்தன. By Wije Dias

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்த அ மெ ரிக்க விஜயம் தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் எழுத்தாளருமான விஜய டயஸ் கடந்த 11ம் திகதி சிங்கள நாளேடு ஒன்றுக்கு எழுத்திய ஆக்கத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கடந்த மாதக் கடைசியில் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம், தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் ஒரு தீர்க்கமான முன்னகர்வாக தமிழ் கட்சிகளாலும் ஊடகங்களாலும் பாராட்டப்பட்டன. ஆயினும், அமெரிக்க மற்றும் ஐ.நா.வின் சிரேஷ்ட அலுவலர்களின்அலட்சியங்களுடன் இந்தப் பயணம் அவமானமான முறையில் முடிவுக்கு வந்தமை, சலுகைகளை பெறுவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க பெரும் வல்லரசுகளுக்கு தமிழ் கூட்டமைப்பு விடுக்கும் வேண்டுகோள்களின் அற்பத்தனத்தை மீண்டும் காட்சிப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 23 அன்று, ஒரு போட்டி கூட்டணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை தமிழ்நெட் இணையம் வெளியிட்டிருந்தது. அது தமிழ் கூட்டமைப்பின் அமெரிக்காவுக்கான பயணத்தை உத்வேகத்துடன் பாராட்டியிருந்தது. இந்தப் பயணம் “முதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்”, இது “பல தசாப்தங்களாக பெரும்பான்மை ஜனநாயகத்துக்குள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தை மேம்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது” என அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் குறிக்கோள் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அமெரிக்க மற்றும் ஐ.நா. ஆதரவை வெற்றிகொள்வதல்ல. மாறாக, அது இலங்கையில் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்கள் தமது அரசியல் அங்கீகாரத்தை உயர்த்திக்கொள்வதற்கு உதவி கோரி மண்டியிட்டு விடுக்கும் வேண்டுகோள்களின் தொடர்ச்சியே ஆகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, 2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ள விரக்தியுடன் முயற்சிக்கின்றது.

இந்தப் பயணம் எதிர்பார்த்தவாறு வெற்றியளிக்கவில்லை. தமிழ் கூட்டமைப்பு, இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனையோ அல்லது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான இராஜாங்கத் துணைச் செயலாளர் ரொபர் ஓ. பிளைக்கையோ சந்திக்கவில்லை. செப்டெம்பர் மாதம் பிளேக் இலங்கை வந்த போது இராஜாங்கத் திணைக்களத்துக்கு வருமாறு தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு மேம்போக்கான அழைப்பை விடுத்துச் சென்றார். ஆனால், செப்டெம்பரில் இருந்து அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளராக செயற்பட்ட, ஒப்பீட்டளவில் ஒரு கணிஷ்ட அலுவலரான வென்டி ஷேர்மன் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேசும் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இராஜாங்கத் திணைக்களத்தில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ-மூனைச் சந்திக்க முயற்சித்த போதிலும், இன்னுமொரு அலட்சியத்தை சந்தித்தனர். தீர்மானிக்கப்பட்ட சந்திப்பு எந்தவொரு விளக்கமும் இன்றி கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதோடு, பானின் துணைச் செயலாளர்களில் ஒருவரான லைன் பாஸ்கோ தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு அனுப்பப்பட்டார்.

தமிழ் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது ஐ.நா.வும் சரி இதுபற்றி எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் விடுக்கவில்லை. எவ்வாறெனினும், கடந்த வெள்ளிக் கிழமை இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் ஒரு பகிரங்கப்படுத்தும் குறிப்புக்களை வெளியிட்டார். அவர் ஒரு வழமையான நிருபர்கள் மாநாட்டின் போது, அமெரிக்கா “இந்த மாதக் கடைசியில் வரவுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உயர்ந்த எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளது –அந்த அறிக்கை ஆகவும் உயர்ந்த தரத்திலானதாக இருப்பதோடு மட்டுமன்றி, இலங்கை அரசாங்கம் அதை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றது,” என்பதை வலியுறுத்துவதன் பேரில், வென்டி ஷேர்மன் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிகளை சந்தித்ததாக தெரிவித்தார்.

வாஷிங்டனுக்கு எந்தவொரு, பெயரளவிலான உதவியைக் கூட வழங்கும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது என்பதை ஷேர்மனின் கருத்துக்கள் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு உடனடியாக தெளிவுபடுத்தியிருக்கும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை மூடி மறைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அர்த்தமற்ற முயற்சியாகும். அத்தகைய ஒரு கேலிக்கூத்தை நியாயப்பூர்வமானதாக அமெரிக்கா ஏற்றுக்கொள்கின்றது என்ற உண்மை, இலங்கை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அதன் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா தூர விலகியிருப்பதை சமிக்ஞை செய்கின்றது.

இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றி வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை எழுப்பியது, தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக அது இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதும அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையாக காணப்பட்டது. யுத்தத்தின் போது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்களவு நிதி மற்றும் இராணுவ ஆதரவை வழங்கிய சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதையிட்டு, யுத்தத்தின் கடைசி மாதங்களில் அமெரிக்கா கவலை கொண்டிருந்தது. பெய்ஜிங்கை கூடுதலாக நெருங்குவதையிட்டு இராஜபக்ஷவை எச்சரிப்பதற்காவே யுத்தக் குற்ற விசாரணை என்று கூறப்பட்ட அச்சுறுத்தலை ஒபாமா நிர்வாகம் பயன்படுத்தியது.

தமிழ் கூட்டமைப்பின் இராஜதந்திர பயணத்தின் தோல்வி, கொழும்பு ஊடகத்தில் வளர்ச்சி கண்ட அற்ப அகமகிழ்வுக்கு வழிவகுத்தது. பயணத்திற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கமும் ஊடகங்களும் தமிழ் கூட்டமைப்புடனான எந்தவொரு உயர்மட்ட சந்திப்புக்கும் எதிராக அமெரிக்காவையும் ஐ.நா.வையும் எச்சரித்தன. அக்டோபர் 30 அன்று சண்டே டைம்ஸ் வெளியிட்ட ஆசிரியர் குறிப்பு, “வாஷிங்டனில் தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் அமெரிக்க அரசாங்கம் தலையீடு செய்வதானது, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு மிகவும் சம்மானதாகும்,” என கசப்புடன் தெரிவித்தது. பயணத்தின் ஆரம்பத்தில், தமிழ் கூட்டமைப்பு விலை கொடுக்க நேரும் என எச்சரித்த வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், “தமிழ் கூட்டமைப்பு ஏனைய அரசாங்கங்களோடு போய் பேச்சுவார்த்தை நடத்துவது, இந்த நாட்டில் பொது மக்களின் கருத்துக்கு சேதத்தை ஏற்படுத்தப் போகின்றது,” எனத் தெரிவித்தார்.

“தமிழ் கூட்டமைப்பின் மேற்கத்தைய பயணமும் தமிழர்களின் தலைவிதியும்” என்று தலைப்பிட்டிருந்த அக்டோபர் 7ம் திகதி டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பு, தமிழ் கூட்டமைப்பை ஏளனஞ்செய்தது. “இந்தியாவின் ஆதரவுடன் தமிழர்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வை எதிர்பார்க்க வேண்டும்” என்று அமெரிக்கா யோசனை தெரிவித்ததோடு, “இலங்கை ஆயுதப் படைகளுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களையும் புதைத்துவிடுமாறு” அவர்களுக்கு அறிவுறுத்தி தமிழ் பிரதிநிதிகளை ஏய்த்துவிட்டதாக அது கூறிக்கொண்டது.

அது இந்தியாவின் பக்கம் திரும்பினால், தமிழ் கூட்டமைப்பு இதே போன்ற அலட்சியமான வரவேற்பையே சந்திக்கும். கூட்டமைப்பின் வாஷிங்டனுக்கான பயணம், ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடந்த சமகாலத்திலேயே நடந்தது. அந்தக் கூட்டத்தில், மனித உரிமை பிரச்சினையில் இலங்கையின் செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களை தணிப்பதற்காக இந்தியா முன்னணி பாத்திரம் ஆற்றியது. அடுத்த பொதுநலவாய கூட்டம் 2013ல் கொழும்பில் ஜனாதிபதி இராஜபக்ஷவின் தலைமையில் நடத்தப்படும் என ஏகமனதாக உடன்பட்ட அந்தக் கூட்டம், நிகழ்விடம் மாற்றப்படுவது பற்றிய யோசனைகளுக்கு இடமளிக்கவில்லை. கொழும்பு இந்த முடிவை அரசாங்கத்துக்கான ஒரு இராஜதந்திர துரும்புச் சீட்டாக தூக்கிப் பிடித்தது.

தமிழ் கூட்டமைப்பை அலட்சியம் செய்வதற்கு அமெரிக்கா எடுத்த முடிவு, இலங்கை இராணுவத்தின் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விவகாரத்தை அது புதைத்துவிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. 2009 டிசம்பரில், “அமெரிக்கா இலங்கை கைநழுவிச் செல்ல இடமளிக்கக் கூடாது” என முடிவெடுத்த அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்ட போதே முதலில் இந்த முடிவின் அறிகுறி தென்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்கள் மற்றும் அமெரிக்க பூகோள-மூலோபாய நலன்களை சரியாக மதிப்பிடக் கூடிய, இலங்கை மீதான ஒரு பரந்த மற்றும் மிகவும் வலுவான அணுகுமுறையை” அது சிபாரிசு செய்தது. அது “குறுகியகால மனிதாபிமான அக்கறையின் மீது மெதுவாக நகர்வதல்லை” அது ஒரு “பல்வேறு அளவிலான அணுகுமுறையை” கொண்டிருக்க வேண்டும்.

இவற்றில் எதுவும் தமிழ் கூட்டமைப்பின் திசையமைவை மாற்றவில்லை. தமிழ் கூட்டமைப்பு “அரசியல் தீர்வுக்காக” இராஜபக்ஷ அரசாங்கத்திடம் மன்றாடுகின்ற நிலையில், அது சரிவுகள், அலட்சியங்கள் மற்றும் வாக்குறுதி மீறல்கள் இருந்த போதிலும், “சர்வதேச சமூகத்தின்” ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது. அத்தகைய கொடுக்கல் வாங்கல், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதன் பாகமாக, தமது சிங்கள சமதரப்பினருடன் இணைந்த வகையில் தமிழர்களை பொலிஸ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தீவின் தமிழ் முதலாதளித்துவத் தட்டுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரத்தை வழங்கும்

தமிழ் கூட்டமைப்பின் கோழைத்தனமான அடிமை நிலை, தமிழ் முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதி என்ற அதன் பாத்திரத்தில் இருந்தே நேரடியாக ஊற்றெடுக்கின்றது. புலிகளைப் போலவே, கூட்டமைப்பும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக உறுதியான போராட்டத்தை முன்னெக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றது. எந்தவொரு வெகுஜன இயக்கத்தாலும் தமது சிறப்புரிமை நிலைமைகளுக்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ என திகிலடைந்துள்ள தமிழ் கூட்டமைப்பு, ஒரு சிறய பங்கு அரசியல் அதிகாரத்துக்காக கொழும்பு அரசாங்கத்துக்கும் பெரும் வல்லரசுகளுக்கும் தொடர்ந்தும் பயனற்ற வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டிருக்கின்றது.

அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தீவை நாசமாக்கிய உள்நாட்டு யுத்தத்துக்கு சிங்களப் பேரினவாதத்தையும் தமிழர் விரோத பாரபட்சங்களையும் தூண்டிவிட்ட ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களே பொறுப்பு. ஆயினும், தொழிலாள வர்க்கத்தை பிளவு படுத்தி வைத்ததாலும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான சவாலை தடுத்ததாலும், புலிகளதும் தமிழ் கூட்டமைப்பினதும் இனவாத அரசியலும் இந்த அழிவுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்துள்ளது.

தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும் அவர்களுக்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்குமான போராட்டத்தின் பாகமாக மட்டுமே அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோ.ச.க. விடுக்கும் அழைப்பின் அடிப்படை இதுவே. இது தெற்காசியாவில் ஐக்கிய சோசலிச குடியரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் பிரிக்கமுடியாத பாகமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com