Wednesday, November 30, 2011

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால "குறிக்கோள் விசா" (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.

இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com