Wednesday, November 16, 2011

நோயாளிகளுடன் நல்ல முறையில் கதைத்து சேவையாற்ற வேண்டும்- நீர்கொழும்பு மேயர்

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுடன் அன்பாக கதைத்து அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும். நல்ல முறையில் நோயாளிகளுடன் கதைப்பதே முதலில் இடம்பெற வேண்டும் என்று நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையின் 35 கனிஸ்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து நடத்திய இரத்த தானம் வழங்கல் மற்றும் நினைவு பரிசு வழங்கல் நிகழ்வில் அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே மேயர் அன்ரனி ஜயவீர மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

கனிஸ்ட ஊழியர்களாக நியமனம் பெற்று ஒருவருட காலம் பூர்த்தியடைவதை முன்னிட்டும், தமக்கு தொழில் பெற்றுத் தந்த அரசியல் பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையிலும், வைத்தியசாலையின் 35 கனிஸ்ட ஊழியர்கள் இரத்த தான நிகழ்வையும் கௌரவிப்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேயர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எனது கண்களை பரிசோதிப்பதற்காக அண்மையில் நான் இந்த வைத்தியசாலைக்கு வந்திருந்தேன். வைத்தியசாலையின் உத்தியோகத்தர் ஒருவர் கண்கள் தொடர்பாக சிகிச்சையளிக்கும் வைத்தியரிடம் என்னை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார்.

நகரின் புதிய மேயர் இவர்தான் என்று அந்த உத்தியோகத்தர் வைத்தியரிடம் என்னை அறிமுகப்படுத்திய போதும் , வைத்தியர் ஏறெடுத்தும் என்னை பார்க்கவில்லை. நான் நீர்கொழும்பு நகரின் முதல் பிரஜை .இந்நிலையில் எனக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.

நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எம்மால் முடிந்த சேவைகளை செய்திருக்கிறோம். இன்று இந்த வைத்தியசாலையின் கனிஸ்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட விடயம் நல்ல ஒரு நிகழ்வாகும். தமக்கு தொழில் பெற்று தந்த அரசியல்வாதிகளை மறக்காமல் அவர்களை நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவித்திருப்பது நன்றி பாராட்டும் விடயமாகும்.இது நல்ல மனிதப் பண்பாகும்.

நாங்கள் எல்லோரும் மனிதர்கள். நாங்கள் வகிக்கக்கூடிய பதவிகள் உயர்வாக இருக்கலாம். வைத்தியர் ஒருவர் செய்யும் வேலையை என்னால் செய்ய முடியாது. அது போல் என்னால் செய்ய முடியுமான வேலையை வைத்தியர் ஒருவரினால் செய்ய முடியாது. இருந்த போதிலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் குறைந்தது புன்னகை புரிந்தாவது, அடுத்தவருக்கு சிறியதொரு கௌரவத்தையோ நல்லுறவையோ வெளிப்படுத்த வேண்டும். இதுவே சிறந்த மனிதாபிமானம் என்று நான் கருதுகிறேன் .நான் இந்த விடயங்களை குரோதத்துடன் குறிப்பிடவில்லை என்றார்.

செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com