Sunday, September 11, 2011

இலங்கையின் கொலைக்களம் : 18 வது மனித உரிமை கூட்டத்தொடரில் வருமா?

நாளை பன்னிரெண்டாம் திகதி முதல் பத்தொன்பதாம் திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 18 வது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பாக பேசப்படுமா? அவ்வாறு பேசப்படுமாயின் அதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ராஜதந்திர மட்டங்களிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின்படி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசுவதாக நிகழ்சி நிரல்படுத்தப்படவில்லை எனவும் அதேநேரத்தில் ஐ.நா வின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை விடயம் சூசகமாக கொண்டுவரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நவநீதம்பிள்ளையின் தீவிர முயற்சியில் இவ்விடயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அவரிடம் துடுப்புச் சீட்டுக்களாகவுள்ள இரு விடயங்களில் ஒன்று தருஸ்மன் அறிக்கை இரண்டாவது சனல் 4 வின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம்.

இதில் சனல் 4 வின் கொலைக்களம் இலங்கை அரசினால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அது பொய்யான சித்தரிக்கப்பட்ட விடயங்கள் என நிரூபிப்பதற்கு தம்மிடம் போதிய ஆதாரங்கள் உண்டெனவும் அரசாங்கம் கூறுகின்றது. அத்துடன் மேற்படி குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள் என இலங்கையில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இப்படத்தில் பிரதான பாத்திரங்களாக புலிகளின் தலைமையின் தாங்கு தூண்களாக நின்ற தமிழ் செல்வன், சூசை ஆகியோரின் மனைவியருடன் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் உள்ளதுடன் அவர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்கள் யாவும் அப்பட்டமான பொய் எனவும் தாங்கள் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றவற்றை நேரடியாக அனுபவித்தவர்கள் எனவும் இதன் உண்மைகள் தங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது எனவும் கூறுகின்றனர்.

அத்துடன் தருஸ்மன் அறிக்கை வெறுமனே புலி ஆதரவு இணையத்தளங்கள் வழங்கிய தகவல்களையே கொண்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தரவுகளும் தகவல்களும் இலங்கை அரசின் உத்தியோக பூர்வ தரவுகளுடன் மாத்திரமல்ல ஐ.நா வின் உத்தியோகபூர்வ தரவுகளுடனும் முரண்படுவதாக விவாதிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கை அரசு சார்பாக இச்சபையில் கலந்து கொள்ளச் செல்லும் 21 பேர் அடங்கிய குழுவில் வன்னிப்பிராந்திய தரவுகளை உறுதிப்படுத்துவதற்காக சம்பவகாலப்பகுதியில் அப்பிரதேசத்தின் அரசாங்க அதிபராகவிருந்த எமில்டா சுகுமாரன் சென்றுள்ளார். அங்கு தருஸ்மன் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 40,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற விடயத்திற்கு எமில்டா சுகுமாரனே பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எமில்டாவின் வாதம் எவ்வாறு அமையப்போகின்றது எனப் பார்ப்போமாயின், அரசின் வெகுஜன மதிப்பீட்டு புள்ளிவிபர அடிப்படையில், வன்னியில் 2009 ம் ஆண்டின் சனத்தொகை மூன்று லட்சத்து மூவாயிரம் (303000.) 2009 மே இறுதி வரை இடைத்தங்கல் முகாம்களில் பதிவு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து தொண்ணூற்றி மூவாயிரத்து எண்ணூறு (293800) அவ்வாறாயின் இறந்தோர் அல்லது காணமல்போனோர் 9200 எனக்கொள்ளப்படும்.

அதேநேரம் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை படையினர் தரப்பில் 6,500 பேர் உயிரிழந்தும் 25000 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாகவும் தம்மிலும் அதிகமான புலிகள் மோதல்களில் உயிரிழந்தாகவும் படைத்தரப்பு தகவல்கள் கூறுகின்றன. அவ்வாறாயின் 9200 இற்கும் 6500 க்கும் இடையிலான வித்தியாசம் சிவிலியன்களாக இருக்காலம் என்பதே இங்கு இடம்பெறுகின்றவாதமாகும்.

மேற்படி எண்ணிக்கையை வன்னியிலே செயற்பட்ட ஐ.நா வின் அமைப்பு ஒன்று உறுதி செய்துள்ளது. குடும்பங்களை கண்டுபிடித்து மீள் இணைத்தல் (Family Tracing and Reunification Unit) எனும் அமைப்பு 2009 ஜூன் மாதத்திலிருந்து 2011 பெப்ரவரி மாதம் வரை திரட்டிய தகவல்கள் மற்றும் மீள் இணைப்பு பணிகளின்போது தமது குடும்ப அங்கத்தவர்களை இழந்தோர் இங்கு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இங்கு 2,564 பேர் காணமல் போனதாக மேற்படி அமைப்பு வன்னி மக்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டுள்ளது. இவர்களில் 1884 பேர் வயது வந்தோர் எனவும் 680 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் மேற்படி முறைப்பாட்டாளர்களில் 64 சதவீதமானோர் தமது முறைப்பாடுகளின்போது தமது பிள்ளைகளை புலிகள் பிடித்து சென்றிருந்ததாகவும் அன்றிலிருந்து தாம் தமது பிள்ளைகளை காணவில்ல எனவும் தெரிவித்துள்ளனர். மேற்படி தரவுகளை குறிப்பிட்ட ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக வெளியிட தயக்கம் காட்டி வருவதாகவும் அவ்வாறு இவ்வறிக்கை வெளியிடப்பட்டால் அது தருஸ்மன் அறிக்கையுடன் முற்றிலும் முரண்படும் என்பதுவே காரணம் என அறியமுடிகின்றது.

இவ்வாறு விடயங்கள் மிகவும் காரசாரமாக இருக்கின்றபோது புலிகள் தரப்பினரால் மீண்டுமோர் தெருக்கூத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூத்துக்கு பதில்கூத்தாக எதிர்தரப்பினராலும் கூத்தொன்று ஏற்பாடாகியுள்ளது. இக்கூத்துக்கள் மக்களுக்கோ அன்றில் அங்கு விவாதத்தில் ஈடுபடப்போகின்றவர்களுக்கோ எந்த ஆறுதலையோ அன்றில் உற்சாகத்தையோ கொடுக்கப்போவதில்லை. காரணம் இங்கு இக்கூத்துகளில் கூப்பாடுபோடுகின்றவர்கள் யார் என்பதை இப்படம் ஒன்று மட்டும் நிருபிக்கும். இவர்கள் பிரபாகரனின் 55 ஆவது பிறந்தநாளுக்கு அவனது கட்அவுட்டுக்கு கேக் தீத்திய மரமண்டைகள். எனவே இவர்கள் போடும் கூப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு இந்த மாநாட்டிலே கலந்து கொள்கின்றவர்கள் தயாரானவர்களாயின் அவர்கள் வன்னியிலே உக்கிர யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதும் இவ்வாறன கூப்பாடுகள் இடம்பெற்றிருந்தது. அப்போது செவி மடுக்காதவர்கள் இப்போது செவிமடுக்கபோகின்றனரா?







1 comments :

Anonymous ,  September 12, 2011 at 7:17 AM  

UN is a Marionette institution organized by the west for their main purposes.They do whatever they want.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com