Sunday, August 14, 2011

தமிழர்களின் நிறத்தை அவமதித்து பேசிய அமெரிக்க துணைத்தூதர். பெரும் கண்டனங்கள்

சென்னையில் உள்ள புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி மவுரீன் சவோ 20 வருடங்களுக்கு முன் தான் இந்தியாவில் படித்த போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது தமிழர்களது தோல் கருப்பானதும் அழுக்கானதும் என வர்ணித்து பேசினார். இவரின் இக்கூற்றுக்கு தமிழக அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன்
சம்பவத்துக்கு அமெரிக்க தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

'20 வருடங்களுக்கு முன் என் பல்கலைகழகத்தில் வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டிய வாய்ப்பு வந்த போது இந்தியாவின் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு படிக்க வந்தேன். டெல்லியிலிருந்து ஒரிஸாவுக்கு 24 மணி நேரத்தில் வரும் இரயிலில் நான் வந்தேன். ஆனால் கிட்டத்தட்ட 72 மணி நேரம் கழித்து ஒரிஸ்ஸா வந்ததால் என் தோல் முழுக்க தமிழர்களை போன்று கருப்பாகவும் அழுக்காகவும் ஆகி விட்டது' என தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் சவோவின் கருத்துகள் பொருத்தமற்றவை என்றும் அவரின் கருத்துகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் கோருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் 'தமிழர்களை அவமதித்ததற்காக அமெரிக்கத் துணைத் தூதர் மன்னிப்புக் கோர வேண்டும்' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

'அமெரிக்கத் துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். இந்தப் பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.

இன வெறி கொண்ட இந்தப் பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்தக் கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்தக் கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவைத் தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com