Saturday, August 27, 2011

அவசரகாலச் சட்ட நீக்கியமை தொடர்பில் சர்வதேச நாடுகளின் கருத்துக்கள்

நீண்ட காலமாக அமுலில் இருந்த அவசரகாலச்சட்டத்தினை நீக்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதை அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல நாடுகள் வரவேற்றுள்ளன.

அமெரிக்கா
வாஷிங்டனில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலன்ட் கருத்துத் தெரிவிக்கையில் அவசர காலச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இதனை அமெரிக்கா வரவேற்கிறது.

இலங்கையிலுள்ள மக்களுக்கு இது சாதகமாக அமையும். சர்வதேச மனித உரிமைச்சட்டத்தை அனுசரித்து செல்லுமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இவ்வாறான அமெரிக்காவின் கோரிக்கையினை நிறைவேற்றத் தவறினால் சர்வதேச சமுகம் அதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டியிருக்கும் என்றார்.

பிரித்தானியா
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இருவருட காலத்தின் பின்னர், அவசர காலச்சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை வரவேற்கிறோம். இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பலப்படுத்துவதற்குமான நடவடிக்கையில் இது குறிப்பிடத்தக்கதொரு முன்நகர்வாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

அவுஸ்திரேலியா
கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி பாராழுமன்றத்தில் அறிவித்ததை நாம் வரவேற்கிறோம். பல வருடகால இனமுரண்பாடுகளின் பின்னரான நல்லிணக்கம், இயல்பு வாழ்க்கை என்பவற்றை ஏற்படுத்தும் விடயத்தில் இந்த தீர்மானம்
முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டள்ளது.

இந்தியா
அவசரகாலச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளமையை வரவேற்றுள்ள இந்தியா போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்திய பாராழுமன்றத்தில் இலங்கையில் இலங்கையில் தமிழர்களின் நிலை தொடர்பான குறுகிய நேர விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலளித்து கூறியபோதே இவ்வாறு
கூறினார்.

இலங்கை அரசின் முடிவை இந்தியா வரவேற்பதாக கூறியுள்ள அவர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆனால் அது நம்ப வைப்பதற்கான ஒன்றாக அமையக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சரத் பொன்சேகா
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தமே காரணம் .சரத் பொண்சேகா தெரிவிப்பு. சர்வதேச நாடுகளின் அழுத்தம்களின் பின்னணியிலேயே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருப்பதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொண்சேகா தெரிவித்துள்ளார்

சிறைவாசம் அனுபவித்துவரும் சரத் பொண்சேகா தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெறுமுகமாக நேற்று வெள்ளிக்கிழமை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் கடந்த இரண்டு வருடகாலமாக அவசரகாலச் சட்டம் னெக்கெதிராக பாவிக்கப்பட்டிருக்கின்றது, அதனூடாக என்மீது வழக்குகளும் தொடரப்பட்டன தற்போது அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருக்கின்றது எனினும் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் இது நீக்கப்படவில்லை மாறாக சர்வதேச நாடுகளின் அழுத்தம்களின் காரணமாகவே இது நீக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com