Friday, July 8, 2011

யாழ் மாநகரசபை மற்றும் முதல்வருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குரிய வெள்ளவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மதில் சுவரை இடித்தமைக்கு எதிராக மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாநகரசபையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்குக் கிடைத்த முதல் தோல்வியாக இது அமைந்திருப்பதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாக மாநகரசபை அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-

யாழ். மாநகரசபைக்கு எதிரான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபைக்குரிய வெள்ளவாய்க்கால் மீது அங்கீகாரமில்லாது கட்டப்பட்ட மதில் சுவர்களை இடித்து அகற்றியமைக்கு எதிராக சட்டத்தரணி திருமதி பவானி சற்குணராசாவால் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர் திரு.மு.செ.சரவணபவன் ஆகியோர் மீது யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட எழுத்தாணை மனு வழக்கு இந்த நீதிமன்றால் வழக்குச் செலவு தொகையில்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் மதில் சுவர்களை இடித்து அகற்ற மாநகரசபை எடுத்த முடிவு அதிகாரகமற்றது. அந்தத் தீர்மானத்தை உறுதி கேள் எழுத்தாணை மூலம் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், சுவர் அகற்றப்பட்டதால் பாதுகாப்பு அற்ற நிலை இருப்பதால் யாழ் மாநகரசபை இடித்து அகற்றிய சுவரை மீள மனுதாரர் கட்டுவதற்கும், அவ்வாறு சுவர் கட்டப்படும்பொழுது மாநகரசபையோ அதை நிறைவேற்று அலுவலகர்களோ, குறித்த செயலில் தலையீடு செய்யவோ, தடுக்கவோ கூடாது என்று தடுக்கும் வகையில் தடையீட்டு எழுத்தாணையும் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் வேண்டப்பட்டதுடன், இவர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் எந்தவொரு கட்டடத்தையும் கட்ட அங்கீகரிக்கும் அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உண்டு என்பதால், இடித்த மதில்சுவரை மீளக் கட்டுவதற்கான நிவாரணம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கறையைப் பாதிப்பதாக அமைவதால் நகர அபிவிருத்தி அதிகாரசபையை இவ் வழக்கில் முக்கிய கட்சிக்காரராக கண்டிப்பாகச் சேர்த்திருக்கவேண்டிய நிலையில் மனுவில் கட்சிக்காரராக சேராது தவிர்த்தமை மற்றும் மாநகரசபை கட்டளைச் சட்டம் 42ன் பிரகாரம் மாநகர சபைக்குச் சொந்தமான வாய்க்கால் மதகு மீது அங்கிகாரம் பெறாது கட்டப்பட்ட மதிற்சுவரை இடித்தகற்ற மாநகரசபைக்கு அதிகாரம் உண்டு என்ற காரணமும்,

அரசியல்யாப்பு 13ம், 16ம்திருத்தப்படி மனு தமிழில் தாக்கல் செய்யாமல் ஆங்கிலத்தில் தாக்கல் செய்தமை முக்கிய நிகழ்வுகளை மனுவில் வெளியிடாது மறைத்தமை மூலம் மிக்குயர் நல்லெண்ணம் மீறப்பட்டமை மாநகரசபை கட்டளைச் சட்ட விதியின் படி வழக்குத்தாக்கல் செய்வதற்கு ஒருமாதகால முன்னறிவுப்பு பிரதிவாதிகளுக்கு வழங்காது வழக்குத்தாக்கல் செய்தமை போன்ற சட்டம் சம்பந்தமான பூர்வாங்க ஆட்சேபனைகள், மாநகரசபை அதன் நிறைவேற்று அலுவலர்களான பிரதிவாதிகள் சார்பில் மனுவுக்கான ஆட்சேபனையாக யாழ் மாநகரசபை சட்டத்தரணியால் முன் வைக்கப்பட்டது.

மனுதார்கள் சார்பில் பதிவுபெற்ற சட்டத்தரணி திரு.பார்த்தீபனின் அனுசரணையுடன் திரு.எம்.எ.சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி ஆஜராகி வாதிட்டார் பிரதிவாதிகளின் சார்பில் மாநகரசபை சட்ட ஆலோசகரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான திரு.அ.இராஜரட்ணம் வாதிட்டார்.

குறித்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி திரு.அ.இராஜரட்ணத்தால் முன்வைக்கப்பட்ட சட்டப்பிரச்சனை ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com