Monday, May 18, 2020

யாப்பணயே தம்ம ரத்ன தேரரும் போர்தோ சுப்பீரியர் செந்த் எமில்லியோன் வைன் கிளாசும்..

பிரெஞ்சுப் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற வருடம் என்னைத் தொடர்புகொண்டு இலங்கை தொடர்பான ஒரு புலனாய்வு விடயத்தில் என் உதவியைக் கேட்டுக்கொண்டார். அவர் பெயர் ஏற்கனவே நான் அறிந்ததுதான்.

பிரான்ஸில் வதியும் தமிழர்களிடம் மாதாமாதம் வருமான வரி அறவிடும் ஒரு இயல்பான வழக்கத்தை இரண்டாவது வருமான வரி Le Deuxieme Impot என தலைப்புக் கொடுத்து செய்திவெளியிட்டது அவர்தான்.
அதன் பின்னரே சுமார் 20 பேரளவில் அந்த தமிழ் வருமான வரி உத்தியோகத்தர்களை கைது செய்திருந்தது பிரெஞ்சு அரசு.

வேலை ,அரச உதவிப்பணம் இவற்றின் கணக்கிற்கு மேல் சீட்டு ,தனியார்,மற்றும் கடைக்காரர்களிற்கு வட்டிக்குக் கொடுப்பது. இவற்றின் விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த வருமான வரி உத்தியோகத்தர்கள் ஊரிலுள்ள அவர்கள் விபரங்கள் அசையும் அசையாச் சொத்துக்கள் இவற்றின் விபரங்களையும் வைத்திருந்தார்கள்.

சிறையிலிருந்து வெளியே வந்தபின் புலிகளுக்கு வட்டிக்குக் கொடுத்தவர்கள் அதைக் கேட்கத் தொடங்கினார்கள். அதுவரை சேகரித்த பணத்தில் கொமிசன் அடிப்படையில் தமக்கான தசம பாகத்திற்கும் மேலாகப் பெற்ற அவர்கள் இப்போது பணம் கொடுத்தோரைக் கண்டு ஒளிக்கத் தொடங்கினார்கள்.

நீங்கள் தமிழீழம் எடுத்துத் தாறதெண்டுதான் எங்களிட்டை காசு வாங்கினனீங்கள், தமிழீழம் எடுத்துத் தரயில்லை, தந்த காசைத் தாங்கோ ! தமிழீழத்திற்குப்பிறகு வாங்கின காசைத் தாறோம் எண்ட கதை இனி வேண்டாம்! என எவ்வித மனக்கிலேசமுமற்றுக் கொடுத்த காசைக் கேட்கத் தொடங்கினார்கள்.

ஆனால் அவர் இப்போது என்னைத் தொடர்பு கொண்டது பிரபாகரன் உயிரோடு இருப்பது தொடர்பானது. உலகத்தில் எவரையும் ஏமாற்றலாம், பிரெஞ்சுக்காரர்களை ஏமாற்ற முடியாது என்பது ஒரு சமூக விஞ்ஞான அரசியல் பாலபாடம். Science PO . ஏதோ ஒரு நம்பிக்கையான தகவல் கிடைக்காவிடில் இப்படியொரு தலை ஆடாதே !என நானும் அவருக்கு உதவுவது என சம்மதித்தேன்.

நேரடியாகவே அவர் விடயத்திற்கு வந்தார்.

இலங்கைத் தூதுவராலயம் மற்றும் பல்வேறு வழிகள் இருக்க என்னைத் தொடர்புகொண்டதேன் ? என அவரிடம் முதலில் சம்பிரதாயமாக கேட்டேன்.

தான் அந்த வழிகளை விரும்பவில்லை , உங்களுக்கு கோத்தபாய வுடன் நேரடித் தொடர்பு இருக்கிறது தனக்குத் தெரியும் , என அவரும் சம்பிரதாயமாக பதில் தந்து உரையாடலைத் தொடர்ந்தார்.

பின் அவரும் நானும் சென்றவருடம் புரட்டாதி மாதத்தில் இலங்கை சென்று கோத்தாவைச் சந்தித்தோம். தம்மம் சரணம். கோத்தாபாய பிரபாகரனைச் சந்தித்து நேர்காணல் செய்வதற்கு பிரெஞ்சுப் பத்திரிகையாளருக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவர்களுக்கான சந்திப்பில் நான் ஆர்வம் காட்டாது வட்டுக்கோட்டைக்குப் போய் கோயில் வயல் என இயல்பாக இருந்தேன். பின்னர் யாழில் உள்ள பத்திரிகையாளர் விடுதியில் அவருக்கு ஒரு விருந்துபசாரத்தை வழங்கினேன்.

மிகச் சுருக்கமாக அவர் பிரபாகரனுடன் நடந்த உரையாடலின் சாரம்சத்தைக் கூறினார்.

"" சரணடையும் முடிவை எப்போது எடுத்தீர்கள்? ""

" நாங்கள் எதற்கும் தயார் என சூசை அறிவித்தபோது, அன்று காலை நான்தான் சமைத்துக்கொண்டிருந்தேன், நல்ல சமையல்காரன் தான் நல்ல போராளியாக இருக்கமுடியும் , உடன் அரிசி ஊறவிட்டு உரலில் இடித்து அவித்த இடியப்பம் , அம்மியில் அரைத்த கருவேப்பிலைச் சம்பல், பழம்மிளகாயிலை அரைத்தால் இன்னும் தூக்கும், அந்தப் பழம்மிளகாயில இருக்கிற லேசான இனிப்பு , சம்பலோடையே தனியச் சாப்பிடலாம்., நந்திக்கடல் இறால் பொரியல், மற்றும் திரளிச் சொதி""

"" வெள்ளைக்கொடியோடு நீங்களும் போனீர்களா ?""

"வெள்ளைகொடிக்கு பெரும் தட்டுப்பாடாக இருந்தது, கடைசியில் பொட்டம்மான் தன்னிடமிருந்த வெள்ளைத் துணியைப் பாதியாகக் கிழித்து எனக்கும் தந்தார் , தமிழீழத்தைப் பிரிச்சு எடுக்கிறதிலும்பார்க்க அந்த வெள்ளைத் துணியைக் கிழிக்கிறது மிகக் கஸ்ரமாக இருந்தது , ஏனெனில் இதற்கு முன்னர் நாங்கள் வெள்ளைக்கொடி பற்றி அறிந்திருக்கவில்லை !""

""சரணடைதலில் எத்தகைய டிசிப்பிளினைக் கைக்கொண்டீர்கள் ""


"" மக்களோடு சரணடைவதை நாங்கள் விரும்பவில்லை, எம்மிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லையென மக்கள் நேரில் பார்த்தால் எம்மைத் தாக்கிக் கொன்று போட்டு எங்களிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அவர்கள் தயாராகஇருந்தார்கள், அந்த மக்களை நம்பமுடியாது ,மக்களை நம்பிறதைவிட இராணுவத்தை நம்பலாம், ஏற்கனவே மக்கள் எம்மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியிருந்தார்கள், அவர்களைச் சுட்டு எம்மை அவர்களிடமிருந்து தற்காத்துக் கொண்டோம்.

அந்த நேரத்தில் எனது பாதுகாப்பில் நின்றவர்களையும் நான் நம்பவில்லை, மக்களிடமிருந்து எம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது. சூழ இருந்த ஒரு சில வயதானவர்களைச் சேர்த்து என்பாதுகாப்புக் கடமையில் இருந்த பொடிக்காட்டுகள் அனைவரையும் துரத்திவிட்டு நடேசன் மூலம் கருணாவுடன் தொடர்பேற்படுத்திக்கொண்டேன், கருணா எம்மைப் பொறுப்பேற்றுக்கொண்டார் "'

""நீங்கள் சரணடைந்த ஆரம்பத்தில் சித்திரவதைகளை அனுபவித்ததாக சொல்லப்படுகிறதே ?""

""இல்லை, மிக இயல்பாகவே இராணுவத்தினர் எம்மை எதிர்கொண்டார்கள். எப்படி எம்மை எதிர்கொள்ளவேண்டும் என்பதில் அவர்கள் மிகத் திட்டமிடலுடன் இருந்தார்கள்.

நாம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே எம்மை மரியாதையோடும் கௌரவத்தோடும் நடத்தினார்கள். இது ஒரு மிகச்சிறந்த புலனாய்வு அணுகுமுறை. அப்போது நாம் குழந்தைகள் போலாகிவிடுவோம் , எதைச் சொல்வது எதை தவிர்ப்பது என நாம் யோசிக்க வேண்டியிராது, பொதுவாக எம்மை ஏதாவது கேட்கமாட்டார்களா என தவிப்போம்.

மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியின் பொறுப்பில் நான் இருந்தேன். நான் இறைவணக்கம் செய்யவும் துதிப்பாடல்கள் கேட்கவும் எனக்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது,

ஒருநாள் அந்தப் புலனாய்வுப் பொறுப்பாளர் தனித்தனியே ஒழுங்குசெய்யப்பட்ட கோப்புகள் கொண்ட தொகுதி ஒன்றை என்முன்னே கொண்டுவந்து வைத்தார்.

சர்வதேச நாடுகளில் இயக்கத்தின்பேரால் சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் ,பண விடயங்கள் ,வங்கிகளின் விபரங்கள் , அவற்றை மேற்கொண்டவர்களின் தற்போதைய நிலை இப்படி தேவைக்கு அதிகமாகவே அதில் இருந்தது சில விபரங்கள் மிக நுட்பமானவை, சில அனுமானிக்கமுடியாத நபர்களிடமானவை. சில அதிர்ச்சிகரமானவை.

அவற்றை ஆறுதலாகப் படித்துப் பார்க்கச் சொன்னார் அந்தப் புலனாய்வுப் பொறுப்பாளர் . நான் தேவையில்லையென்றேன்.

இவற்றை நீங்கள் மீளப்பெற விரும்பினால் தன்னால் முழு அளவில் உதவமுடியும் என்றார். அதற்கும் நான் தேவையில்லை என்றேன்.

இவற்றை நீங்கள் மீட்கும்போதில் ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட தமிழீழம் குறித்த பூர்வாங்கப் பேச்சுவார்த்தைக்கு வரமுடியுமென்றார் . அதற்கும் நான் தேவையில்லையென்றேன்.

எரிக் ஸொல்ஹெய்ம், விதார் ஹெல்கிஸன், யசூசி அகாசி ,ஹக்றூப் ஹோக்லெண்ட் இவர்களை மீண்டும் அனுசரணையாளர்களாக ஒழுங்குபடுத்தமுடியுமென்றார். அதற்கும் தேவையில்லையென்று மறுத்து அவர்களுக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டியதற்காக முதன்முறையாக உளப்பூர்வமாக நன்றி தெரிவித்தேன்.

நான் தமிழீழ அரசியலைத் துறந்து புத்த பிக்குவாக மாற விரும்புவதாக சொன்னேன்.

சில புத்த பிக்குகளுடன் இணைந்து சிங்களக் கிராமங்களுக்கும் சென்றேன் . அப்போது என் பெயர் யாப்பனயே தம்ம ரத்தின தேரர். இப்போதும் நான் புத்த துறவியாகத்தான் இருக்கிறேன். நீங்கள் சந்திக்கக் கேட்டுக்கொண்டதன் பேரில் இங்கு வந்தேன் "" என்றார் யாப்பணயே தம்ம ரத்ன தேரர்.

பெருமூச்சு ஒன்றையே நான் அந்தப் பிரெஞ்சு பத்திரியாளருக்கு வழங்கி அவர் ஊற்றிவைத்திருந்த போர்தோ சுப்பீரியர் செந்த் எமில்லியோன் வைனை உங்கள் ஆரோக்கியத்திற்காக ! என அவர் கிளாசில் மிக மென்மையாகத் தட்டியபின் உதட்டில் பொருத்திக்கொண்டேன். அவர் கண்ணைப்பார்த்துச் சிரிக்கவும் நான் தவறவில்லை

பரீஸ் சுகனின் டயரியிலிருந்து..


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com