Tuesday, May 3, 2011

பீடுநடை போடும் கியூபாவின் புரட்சி.

(துக்காராம் கோபால்ராவ் | இதழ் 48 ,அச்சிடு) கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் வெளியீடான தீக்கதிர் இதழில் கியூபாவில் அமெரிக்க அரசாங்கம் செய்ய முயன்ற எதிர்ப்புரட்சியின் தோல்வியை (Bay of Pigs) கியூபா கொண்டாடுவதைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. (18.4.2011)

“1961 அமெரிக்க எதிர்ப்பு போரில் மறைந்த வீரர்களுக்கு கியூபா அஞ்சலி” என்ற தலைப்பிட்ட கட்டுரை இப்படிச் சொல்கிறது.
“மக்களும், ராணுவமும் இணைந்து பங்கேற்ற அணி வகுப்பில் பே ஆப் பிக்ஸ் போரில் பங்கேற்ற வீரர்களில் உயிருடன் இருப்பவர்களும் இன்றைய இளைஞர்களும் இணைந்து பீடுநடை போட்டு வந்தனர். காஸ்ட்ரோ தொடங்கி வைத்த புரட்சியின் பாதையில் இவர்கள் தங்களை மீண்டும் அர்ப்பணித்துக்கொண்டனர்.”
அந்தக் கட்டுரை முடியும்போது இவ்வாறு முடிகிறது:

“கியூபாவின் புதிய தலைமுறையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இப்பேரணி, அவர்கள் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையேற்ற புரட்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர் என்பதைப் பறைசாற்றியது.”
ஒரு அந்நியநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராடுவதும், சொந்த நாட்டை சுதந்திரமாக வைத்துகொள்ள விரும்புவதும் ஆச்சரியமானதல்ல. ஆனால் அத்தோடு கூடவே ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக்கு அர்ப்பணித்துக் கொள்வதெல்லாம்?



ஆனால், கியூபாவில் நடப்பது என்ன என்று ஆங்கிலச் செய்திகளைப் புரட்டிப் பார்த்தால் வேறொரு சித்திரம் கிடைக்கிறது.

2006-இல் ஃபிடல் காஸ்ட்ரோ (வயது 84) உடல் நலம் குன்றிய பின்னால், ஆட்சிக்கு வந்த ரவுல் காஸ்ட்ரோ, (ஃபிடல் காஸ்ட்ரோவின் சொந்தத் தம்பி, வயது 79) ஆட்சிக்கு வந்த உடனேயே பழங்காலத்திய கம்யூனிஸ முறையை வைத்துகொண்டு இன்னும் காலம் தள்ளமுடியாது என்று கண்டுகொண்டார். கியூபாவின் படு மோசமான கம்யூனிஸ முறையில் அனைவருக்கும் சாப்பாடு போட வேண்டுமென்றால், வெளியிலிருந்து காட் ஃபாதர் யாரேனும் வேண்டும். சோவியத் ரஷ்யா இந்தச் சின்ன கியூபா நாட்டை அமெரிக்காவின் அருகாமையில் இருக்கும் காரணத்துக்காக போஷித்து வைத்திருந்தது. 1991 இல் சோவியத் ரஷ்யா விழுந்ததும், மிகவும் மோசமான நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டது. இந்தக் காலத்தை கியூபாவின் கம்யூனிஸ்டு வரலாற்றாசிரியர்களே ‘special period’ என்று அழைக்கிறார்கள். இந்தக் காலத்தில் பசி, பட்டினி, பஞ்சம் என்று தலைவிரித்தாடியதால், நாட்டில் இருந்த எல்லா மிருகங்களும் கொன்று தின்னப்பட்டன. இறக்குமதி 80 சதவீதம் குறைந்தது. உள்நாட்டு உற்பத்தி 34 சதவீதம் குறைந்தது. வேறுவழியின்றி, சில பொருளாதாரப் பகுதிகளில் தனியார் வர்த்தகம் அனுமதிக்கப் பட்டது. எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு மாடுகள் இருந்தன என்று 1959க்கு முன்னால் சொல்லப்பட்ட கியூபாவில் மாடுகள் அரிதாகும் சூழ்நிலை வந்தது. அதனால், பசுவதை தடுப்பு சட்டம் கியூபாவில் இயற்றப்பட்டது. கியூபாவில் மனிதரைக் கொன்றால் கிடைக்கும் தண்டனையை விட மாட்டைக் கொன்றால் அதிக தண்டனை.

பிறகுதான் அவர்கள் விருந்தினர் வருகை மூலம் சம்பாதிக்கலாம் என்று பொழுதுபோக்கு சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்ற இரண்டு விஷயங்களை அறிமுகப்படுத்தினார்கள். முக்கிய நோக்கம் அமெரிக்க டாலர்தான் என்பது தெளிவு. தற்போது பொழுதுபோக்கு சுற்றுலா என்ற பெயரில் அதிகமாக நடப்பது விபச்சாரமே. அதில் வரும் பணமே தற்போது கியூபாவின் கம்யூனிஸ அமைப்பை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.இதில் முரண்நகை என்னவென்றால் அப்படி சுற்றுலாப் பயணிகள், விபச்சாரம், மதுக்கடைகள், இரவு விடுதிகள், சூதாட்டம் ஆகியன கியூபாவில் இருக்கின்றன, அவை சீரழிவு என்று புரட்சியாளர்கள் சொன்னார்கள். இருந்தன. ஆனால், அவை கியூபாவின் பொருளாதாரத்தின் அச்சாணி வேராக இல்லை. கியூபாவின் பொருளாதார அச்சாணி வேராக இருந்தது கரும்பு மற்றும் இதர பொருட்களின் விவசாயம்தான். விபச்சாரம் போன்றவற்றை ஒழிக்க முன்வந்ததாகத்தான் காஸ்ட்ரோவின் ‘புரட்சி’ கூறிகொண்டது. இன்று கியூபாவின் பொருளாதாரத்துக்கே அச்சாணியாக அதே சீரழ்வும், விபச்சாரமும் ஆகியிருக்கிறது! இன்று சக்கரம் மறுபடியும் ஒரு முழுச்சுற்று சுற்றித் துவக்கத்தில் வந்து நிற்பதை என்னவென்று சொல்ல?

இப்போது சீனா, வெனிசூவெலா ஆகிய நாடுகளின் உதவித்தொகையில்தான் கியூபாவின் கம்யூனிஸ அமைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

1959-க்கு முன்னால், கியூபா உலத்திலேயே மிக அதிக அளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யும் விவசாய நாடாக இருந்தது. ஆனால், தற்போது 80 சதவீத உணவு இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தனைக்கும் கியூபாவில் 30 சதவீத நிலங்கள் விவசாய நிலங்கள். நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு குடிமக்கள் விவசாயத்திலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இருப்பினும் விளைச்சல் போதுமானதாக இல்லை. அனைத்து அரசாங்க நிலங்களில் வேலை செய்யும் மக்கள் உல்லாசமாகப் பொழுதுபோக்குவதால் விளைச்சல் எப்படி இருக்கும்? கியூபாவில் தனியார் நிலங்களும் இருக்கின்றன. ஆனால் அவை கடுமையாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் அங்கு விளைச்சல் அதிகம். ஆகையால், ஏராளமான நிலங்களை இப்படிப்பட்ட “லாபம் சம்பாதிக்கும்” தனியார் நிலங்களுக்குக் கொடுக்கப்போவதாக கியூபாவின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ 2006இல் அறிவித்தார்.


கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர் என்ற பத்திரிகையில் 2010 ஆம் வருடம் செப்டம்பர் 14 ஆம் தேதி வந்த செய்தியின்படி 2011-ஆம் ஆண்டு மத்திக்குள்ளாக, கியூபா அரசாங்கம் 5,00,000 அரசாங்க வேலைகளை வெட்டப்போவதாக அறிவித்தது.[1] கியூபாவின் அரசாங்கத்துக்கு சுமார் 51 லட்சம் மக்கள் வேலை செய்கிறார்கள். அதாவது பத்து சதவீத வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கப்போகிறார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாட்டில் உள்ள எல்லோருக்கும் முதலாளி அரசாங்கமே. அவர்களுக்குக் கூலி கொடுப்பது அரசாங்கமே. கம்யூனிஸ முறையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதெல்லாம் சும்மா வார்த்தைகள்தான். நடப்பது என்னவோ, நாடே ஒரு கம்பெனி, ஜனாதிபதி முதலாளி, குடிமக்கள் அனைவரும் தொழிலாளி என்ற ஒற்றை கம்பெனி முதலாளித்துவம்தான். இதனை நாம் ‘உச்சகட்ட மோனோபாலி கேப்பிடலிஸம்’ என்று வரையறுக்கலாம். இவர்களை வேலையிலிருந்து நீக்கினால் என்ன செய்வார்கள்? ஆகவே இவர்களுக்கு மறுபயிற்சி, தனி வியாபாரம் நடத்த லைசன்ஸ் எல்லாம் கொடுக்கப்போகிறார்களாம்.

கியூபாவின் அரசாங்கம் 178 விதமான தொழில்களைத் தனியார் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறது. குடிமக்கள் இந்த 178 தொழில்களில் ஏதாவது ஒன்றுக்கு லைசன்ஸ் வாங்கிகொண்டு செய்யலாம். இப்போதும் தெருவில் காய்கறி விற்க வேண்டுமென்றாலும், சோப்பு விற்கவேண்டுமென்றாலும் அரசாங்கத்திடம் லைசன்ஸ் வாங்கித்தான் செய்ய வேண்டும். இந்த லைசன்ஸ் ஆனைவிலை குதிரை விலை. இப்படி லைசன்ஸ் வாங்கினாலும் மாதாமாதம் லைசன்ஸை வைத்திருப்பதற்கு அரசாங்கத்துக்கு பணம் கட்டவேண்டும். தவிர விற்பனையில் நாற்பது சதவீதத்தை வரியாக அரசாங்கத்திடம் கட்டவேண்டும். வியாபாரம் லைசன்ஸ் கொடுக்கிறார்கள் என்று ஆர்வத்துடம் வாங்கிய பலர் இப்போது இந்த கட்டுப்பாடுகளைப் பார்த்துப் பயந்து போய் லைசன்ஸே வேண்டாம் என்று லைசன்ஸ்களை திருப்பி கொடுக்க கியூவில் நிற்கிறார்கள்.

இந்த ஏப்ரல் 18ஆம் தேதி கியூபாவில் ஆறாவது கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் நடக்கிறது. ஆமாம். கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்ற பின்னால் இதுவரை ஐந்து முறைதான் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூடியிருக்கிறது. இது ஆறாவது தடவை. பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூடுகிறது. இந்த முறை ரவுல் காஸ்ட்ரோ பழைய தலைவர்களின் தவறுகளை எல்லாம் பட்டியல் போட்டுவிட்டு, இனிமேல் அந்தக்கால நேரு மாதிரி கலப்புப் பொருளாதாரம்தான் என்று அறிவித்திருக்கிறார். அதாவது நிறைய அரசாங்கம் நடத்தும் தொழில்கள். கொஞ்சம் தனியார் கையில்.[2]

ஆனால், எதுவும் தடாலடியாக மாறாது என்றும் அறிவித்துவிட்டார். இந்த மாதிரியான மாறுதல்கள் மெதுவாக ஐந்து ஆண்டுகாலத்தில் நடக்குமாம். லைசன்ஸ், வரி ஆகியவை இதே மாதிரியாக இருந்தால், கம்யூனிஸ முறைதான் தொடர்ந்து இருக்கும். ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சியில் தொடர்ந்து இளைஞர்கள் இணைந்து பீடு நடைபோட்டு பறைசாற்றுவார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com