Thursday, May 5, 2011

அல்கொய்தா இயக்கத்தில் சேர வேண்டாம் மகன்களுக்கு பின்லேடன் வேண்டுகோள்

அல்கொய்தா இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது மேலை நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களிலோ ஈடுபடக் கூடாது என தனது மகன்களுக்கு பின்லேடன் உயில் எழுதி வைத்துள்ளார். அல்கொய்தா இயக்கத் தலைவரும் சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் பின்லேடன் எழுதி வைத்த உயில் ஒன்றை குவைத் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.

2001-ம் ஆண்டு இறுதியில் நடந்த அந்த தாக்குதலில், அமெரிக்க ராணுவத்திடம் இருந்து பின்லேடன் தப்பினார். அதன் பிறகு, டிசம்பர் 14-ந் தேதி அன்று இந்த உயிலை பின்லேடன் எழுதியதாக குவைத் பத்திரிகை தெரிவித்துள்ளது. 4 பக்கங்களை கொண்ட அந்த உயிலில் பின்லேடன் கூறியுள்ளதாவது:-

அல்கொய்தா இயக்கத்தின் மூலமாக ஏராளமான தாக்குதல்கள் நடந்தன. 1983-ம் ஆண்டு லெபனானில் அமெரிக்க கப்பல்கள் தகர்க்கப்பட்டன. 1993-ம் ஆண்டு சோமாலியாவில் ஐ.நா. அமைதிப் படையில் இடம்பெற்ற அமெரிக்க கடற்படை மீது நடத்திய தாக்குதலில் 19 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 1998-ம் ஆண்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

எனது தலைமையிலான அல்கொய்தா நடத்திய தாக்குதல்களிலேயே மிகப் பெரியதாக 2001-ம் ஆண்டு நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு விளங்குகிறது. புனிதப் போரில் எனது செயல்களில் பெரிய சாதனையாக நிïயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதலை கருதுகிறேன்.

என்னுடைய குழந்தைகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது நேரத்தில் சிறிய பகுதியை கூட அவர்களுக்காக என்னால் செலவிட முடியவில்லை.

புனிதப் போரில் (ஜிகாத்) என்னுடைய பங்கு அவசியம் என்பதால் குழந்தைகளுடன் நேரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன்.

எனது குழந்தைகள் யாரும் அல்கொய்தா இயக்கத்தில் சேரவோ அல்லது மேலை நாடுகளுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடவோ கூடாது.

அதுபோல, எனது மரணத்துக்கு பிறகு எனது மனைவிகள் அனைவரும் மறு திருமணம் செய்யக் கூடாது. என்னை சுற்றி சூழும் நம்பிக்கை துரோகத்தாலேயே எனக்கு மரணம் நேரிடும் என கருதுகிறேன்.

இவ்வாறு பின்லேடன் தெரிவித்துள்ளார்.

இந்த 4 பக்க உயிலின் அடியில், `உங்களுடைய சகோதரன் அபு அப்துல்லா ஒசாமா முகமது பின்லேடன்' என எழுதப்பட்டுள்ளது. பின்லேடனுக்கு 4 மனைவிகளும் 24 பிள்ளைகளும் இருக்கின்றனர். உயிலில், தனது சொத்துகளைப் பற்றி எதையும் பின்லேடன் தெரிவிக்கவில்லை.

கடந்த 2002-ம் ஆண்டிலேயே இந்த உயிலைப் பற்றி `வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஆனால், அந்த உயில் பொய்யானது என அல்கொய்தா இயக்கம் மறுப்பு தெரிவித்தது. எனினும், அந்த உயில் உண்மையானது என அமெரிக்க உளவுத் துறை உறுதி செய்தது.

யார் இந்த ஒசாமா பின்லேடன்?

ஆள்வதற்கு ஒரு சாம்ராஜ்யம் இல்லாத தனி மனிதரான பின்லேடன், பல சாம்ராஜ்யங்களிலும் தன் ஆதரவாளர்கள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தார்.

அமெரிக்கா அவரை பிடிப்பதற்காக பல நூறு கோடிகளை செலவழித்தது. அவரை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட வேட்டையில் பல நூறு பேர் பலியானார்கள். அவர் தலைக்கு ரூ.12 கோடியை விலையாக அமெரிக்கா நிர்ணயம் செய்து இருந்தது. இந்த பணத்துக்காக அவரை காட்டிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை.

54 வயதான பின்லேடன் கோடீசுவர தந்தைக்கு மகனாக சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் பிறந்தார். இவர் தந்தை முகமது பின்லேடனுக்கு 22 மனைவிகள் அவர்களில் 11-வது மனைவியான அமிதியா அல் அட்டாஸ்க்கு பிறந்தவர் தான் பின்லேடன். இவரது தந்தைக்கு இவர் 17-வது குழந்தையாக பிறந்தார். இவர் தந்தைக்கு குழந்தைகள் பிறந்தனர். பின்லேடன் பிறந்தது 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி ஆகும்.

ஏமனில் வசித்த போது பின்லேடனின் தந்தை முகமது வறுமையில் திளைத்தார். குடும்பம் நடத்துவதற்கு போதிய அளவு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார். பின்லேடன் பிறந்த பிறகு தான் அவர் பிழைப்புக்காக சவுதிஅரேபியாவில் குடியேறினார். அங்கு அவர் கட்டிடம் கட்டும் காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று கோடிகளை குவித்தார். சவுதி அரேபிய மன்னருக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார்.

படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டிய பின்லேடன் சவுதி அரேபியாவில் உள்ள மதீனா, ஜித்தா போன்ற இடங்களில் பள்ளிக்கூட படிப்பை முடித்தார். பின்பு ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய படிப்பில் சேர்ந்தார்.

தொடக்கத்தில் மேற்கத்திய நாட்டு பண்பாட்டில் திளைத்த ஒசாமா வாழ்க்கையை அனுபவிப்பதற்காக லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தார்.

அந்த கால கட்டத்தில் தான் அவர் தந்தை சவுதி அரேபியாவில் மதீனா, மக்கா நகரங்களில் உள்ள மசூதிகளை புதுப்பிக்கும் பணிகளை ஏற்றார். இறை நம்பிக்கையோடு அவர் அதை செய்ததால் பக்தி மார்க்கத்திலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அப்போது தான் பின்லேடனின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவர் இஸ்லாமிய புனித நூல்களை படிக்க தொடங்கினார். பெய்ரூட்டுக்கு போவதை கைவிட்டார்.

பல்கலைக்கழகத்தில் படித்தபோதே துப்பாக்கியை தூக்கி விட்டார் பின்லேடன். அப்போது அவருக்கு வயது 22. மேற்கத்திய கலாசாரம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்களை தொடாமல் தடுப்பதற்கு புனிதப்போரும், துப்பாக்கியும் அவசியம் என்பதை படிக்கும்போதே உணர்ந்தார்.

1979-ம் ஆண்டு ரஷிய ராணுவம் ஆப்கானிஸ்தானில் உள்ள கம்ïனிஸ்டு ஆட்சியை காப்பாற்றுவதற்காக அந்த நாட்டுக்குள் நுழைந்தது. உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாடு முஸ்லிம் நாட்டை அடிமைப்படுத்தியது முஸ்லிம்களை கலவரப்படுத்தியது. எனவே, ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக புறப்பட்ட புனிதப்போராளிகளுள் ஒருவராக பின்லேடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அங்கு தீவிரவாதிகளை உருவாக்குவதற்காக ஒரு பயிற்சி முகாமை தொடங்கினார்.

இந்த அமைப்புக்கு அல்கொய்தா என்று பெயரிடப்பட்டது. அல்கொய்தா என்றால் அடித்தளம் என்று அர்த்தம். இதன் தலைமை நிதி ஆலோசகராக பின்லேடன் பணியாற்றினார்.

தீவிரவாதிகளை உலகம் முழுக்க தேடிப்பிடித்து கொண்டு வர ஒரே ஆண்டில் 90 நாடுகளில் பின்லேடனின் கிளைகள் தொடங்கப்பட்டன. பயிற்சி முகாமுக்கும், பயிற்சி பெறும் தீவிரவாதிகளுக்கும் உணவு, விமானக்கட்டண செலவு என அனைத்துக்கும் பின்லேடன் தன் பணத்தை கோடி, கோடியாக செலவழித்தார்.

ஆப்கானிஸ்தான் நிலைமையை பயன்படுத்தி பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து கோடி, கோடியாக பணம், பயிற்சி, ஆயுதம் என்று வாங்கி குவித்தது. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கின் போக்கு பிடிக்காமல் பின்லேடன் சவுதிஅரேபியா திரும்பினார்.

ரஷிய படைகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தலைதூக்கி கொரில்லா முறையில் போர் செய்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் ரஷிய ராணுவம் திணறுகிறது என்ற தகவல் கிடைத்ததும் பின்லேடன் ஆப்கானிஸ்தான் திரும்பினார். நேரடியாக யுத்தத்தில் இறங்கினார். ஜலலாபாத் போரில் துப்பாக்கி தூக்கி போரிட்டார். இந்த போரில் அவரது படையே வென்றது.

இதை தொடர்ந்து நடந்த போரில் தீவிரவாதிகள் கை ஓங்கியதால், 1989-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி ரஷியப்படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. அதன்பிறகு மீண்டும் சவுதி அரேபியா சென்றார். அங்கு அவர் தன் மனைவிகளோடும், குழந்தைகளோடும் வாழத்தொடங்கினார். அவருக்கு 4 மனைவிகள் மூலம் 16 குழந்தைகள் பிறந்தனர்.

ஈராக் போரின் போது அமெரிக்க படை சவுதி அரேபியாவில் முகாம் அமைத்து தங்கி இருந்தது. இது பின்லேடனுக்கு பிடிக்கவில்லை. அவர் சவுதி மன்னர் மீது கடும் கோபம் கொண்டார். அவரது கோபம் தங்கள் தொழிலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், அவரை குடும்பத்தினர் சூடானுக்கு மூட்டை கட்டி அனுப்பி விட்டனர். அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தீவிரவாதிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் சோமாலியாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அதை சமாளிக்க அமெரிக்கப்படை அங்கு இறங்கியது. முஸ்லிம் நாட்டில் அமெரிக்க படையா அதை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு பின்லேடன் சோமாலியா சென்றார்.

அப்போது அமெரிக்க கப்பல் சோமாலியாவில் நங்கூரம் பாய்ச்சி நின்றது. அதை பின்லேடன் படை தாக்கியது. இந்த தாக்குதல் 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி நடந்தது. இதில் 3 அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அந்த இடத்திலேயே இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் யுத்தத்துக்காக அமெரிக்கா கொடுத்த ஸ்டிங்கர் ஏவுகணைகளை சோமாலியாவில் அமெரிக்காவுக்கு எதிராக பின்லேடன் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகளை அவர் பாகிஸ்தான் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து தருவித்தார். இதில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து 1994-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி அமெரிக்க படைகள் சோமாலியாவில் இருந்து வெளியேறின. இதுதான் பின்லேடனின் புகழை உலகம் முழுவதும் பரவச்செய்தது.

அந்த நேரத்தில் சூடானில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. அப்போது அதிபராக இருந்த பின்லேடனின் ஆதரவாளர் தனக்கு எதிராக இருக்கும் கோஷ்டியை அடக்க பின்லேடனின் ஆதரவை கேட்டார். இதற்கு பின்லேடன் மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த அதிபர் அவரை நாட்டை விட்டே விரட்டிவிட்டார். அப்போது தான் அவர் பார்வை ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது.

தன் குடும்பத்துடன் அங்கு சென்று இறங்கிய பின்லேடன் தன் பணத்தையும், ஆதரவுப்படையையும் கொடுத்து தலீபான்கள் ஆட்சிக்கு வர உதவினார். அங்கு வலுவாக காலூன்றிய பின்லேடன், கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டு வீசி தாக்கினார். இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா பின்லேடனை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரியது. தலீபானும், பின்லேடனை பிடித்து வீட்டுக்காவலில் வைத்து இருக்கிறோம் என்று அறிவித்தது. ஆனால் அப்படி செய்யாமல் பின்லேடன் பல தீவிரவாத முகாம்களை தொடங்க அது ஒத்துழைப்பு கொடுத்தது.

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டைகோபுர கட்டிடத்தை தகர்க்க பின்லேடன் சதித்திட்டம் தீட்டினார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டபோது 3 ஆயிரம் பேர் பலியானார்கள். இதுதான் அவரை பழி தீர்க்க வேண்டும் என்ற தீராக்கோபத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தான் அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே அந்த நாட்டின் மீது அமெரிக்கா விமானத்தாக்குதல் நடத்தியது.

இதில் தலீபான்கள் ஆட்சியை இழந்தனர். பின்லேடனும் ஓடி ஒளிந்தார். அவர் பாகிஸ்தானில் பதுங்கிக்கொண்டார். இதை நன்கு அறிந்து இருந்த பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷரப், சண்டையில் பின்லேடன் இறந்து இருக்கலாம் என்றும், பாகிஸ்தானில் இல்லை என்றும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைகுன்றுகளில் அவர் பதுங்கி இருக்கலாம் என்று பொய்க்கதைகளை பரப்பினார். இப்போது அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த இடத்திலேயே பலியிடப்பட்டு இருக்கிறார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com