Monday, May 16, 2011

தேநீர் விருந்துக்கு வரும்படிஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு

தேநீர் விருந்துக்கு வரும்படி இன்று முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 160 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 தொகுதிகளில் அதிக அளவு கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்கிறார். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளதையொட்டி ஜெயலலிதாவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும் தேநீர் விருந்துக்கு வரும்படியும் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார். சோனியா காந்தியின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் டைம்ஸ் நவ் பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கையில் சோனியா காந்தி அழைத்ததாக வெளியாகியுள்ள செய்தியில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் சோனியா காந்தி பேசினார். இது மரியாதை நிமித்தமானது என்றார். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தேர்தலில் ஒரு கட்சி அமோக வெற்றிபெற்றதற்காக அந்த கட்சியின் தலைவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான மரியாதை நிமித்தம்தான். இது ஒரு ஆரோக்கியமான நிலைப்பாடாகும் என்றும் ஜெயந்தி நடராஜன் கூறினார்.
கொள்கை கோட்பாடு அடிப்படையில் ஒரு கட்சியுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். அதுவும் அந்த முடிவை கட்சியின் தலைமை எடுக்கும் என்று தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளிக்கையில் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com