Monday, May 2, 2011

பில்லாடன் கொல்லப்பட்டார் : சபதத்தில் வென்ற ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா போட்டியிட்டபோது பின்லேடனின் தீவிரவாத சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். பின்லேடனை உயிருடன் பிடிக்கவோ அல்லது பிணமாக உடலை கைப்பற்றவோ அவர் சபதம் ஏற்றிருந்தார். இன்று ஒபாமாவின் சபதத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை இந்திய நேரடிப்படி இன்று காலை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அவரை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதவிர உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் ஒபாமாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியானபோது அமெரிக்காவில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவின் விடுமுறை தின கழிப்பில் இருந்தனர். தொலைக்காட்சிகளில் பின்லேடன் உடலை பார்த்ததும் அமெரிக்கர்கள் வீதிக்கு வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அமெரிக்கா முழுவதும் கோலாகலமாக உள்ளது. நியூயார்க், ஹிஸ்டன், சிகாகோ உள்பட பல நகரங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மக்கள் அமெரிக்க கொடிகளை அசைத்து கோஷமிட்டனர். பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதால் ஒபாமாவின் இமேஜ் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க பொருளாதாரம் சற்று திணறலை சந்தித்திருந்தது. இது மக்களிடம் ஒபாமா மீது வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்லேடனை கொன்றதன் மூலம் இழந்த மதிப்பை ஒபாமா சம்பாதித்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் ஆத்திரம் அடைந்துள்ளன. பின்லேடனின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணங்களில் உள்ள அமெரிக்கர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் இணையத் தளங்களில் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை என்று பல தடவை பாகிஸ்தான் சொன்னது. ஆனால் பாகிஸ்தானில் அதுவும் நகர் பகுதியில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். எனவே அவனுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக எல்லா உதவிகளும் செய்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்லேடனை சுற்றி வளைத்த தகவலை அமெரிக்க உளவுப் படை கடைசி வரை பாகிஸ்தானுக்கு கூட சொல்லாமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த அதிரடியால் பாகிஸ்தான் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் வெளியான பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து அவனது உடலை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்லேடனின் முகம் குளோஸ்-அப்பில் காட்டப்பட்டது.

அப்போது அவன் தலையில் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரிய வந்தது. அவன் நெற்றியில் ரத்தம் வழிந்தோடி இருந்தது. பின்லேடனின் வலது கண் மூடப்பட்டு காணப்பட்டது. வாய் கொஞ்சம் திறந்து பல் தெரிந்தது. பின்லேடனின் இந்த காட்சி இன்று காலை உலகில் எல்லா நாட்டு தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடம் பெற்றிருந்தது. பின்லேடன் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு உடனடியாக அவன் உடல் கைப்பற்றப்பட்டது. அவன் உடலில் சில சோதனைகளை அமெரிக்க படைகள் மேற்கொண்டன. அவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பின்லேடன் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டது என்றார்.

பின்லேடன் உடலை பாகிஸ்தானில் புதைப்பீர்களா? அல்லது அமெரிக்காவுக்கு எடுத்து சென்று விடுவீர்களா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிகாரி விரிவாக பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே பின்லேடனின் உடல் இறுதி சடங்கு செய்யப்பட்ட பிறகு கடலில் வீசப்பட்டதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியானது. பின்லேடனை பல தடவை அமெரிக்க படைகள் நெருங்கின. ஆனால் கடைசி நிமிடத்தில் அவன் தப்பிச் சென்று விடுவான். ஒரு தடவை பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு பயிற்சி முகாமில் பின்லேடன் பதுங்கி இருப்பதை அறிந்து அமெரிக்க சிறப்புப் படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஏவுகணை வந்து விழுவதற்கு 2 நிமிடத்துக்கு முன்பு பின்லேடன் வெளியேறியதால் அவன் உயிர் தப்பினான் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவனது மகன்கள், உறவினர்கள் சிலர் உடன் இருந்தனர். பின்லேடனுடன் அவனது மூத்த மகனும் பலியாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பின்லேடன் பாகிஸ்தானுக்குள் எங்கெங்கு நடமாடுகிறான் என்ற தகவல் அமெரிக்க சிறப்பு படை மூலம் அதிபர் ஒபாமாவுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பின்லேடனை சுட்டுக்கொல்ல ஒபாமா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை அவர் கடந்த மாதம் 29-ந்தேதி பிறப்பித்தார். அன்று காலை 8.20 மணிக்கு அவர் பின்லேடனை கொல்லும் உத்தரவில் கையெழுத்திட்டாக தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பின்லேடன் அபோதாபாத் நகரில் பின்லேடன் பதுங்கி இருக்கும் தகவலை அறிந்ததும் அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் 4 ஹெலிகாப்டரில் விரைந்தனர். பின்லேடன் மறைந்திருந்த இடம் அங்குள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமி அருகேதான் இருந்தது. என்றாலும் அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு எந்தவித தகவலையும் சொல்லவில்லை. கடைசி வரை தங்களது தாக்குதல் திட்டத்தை ரகசியமாக வைத்திருந்தனர். அமெரிக்காவின் நட்பு நாடான இங்கிலாந்து நாட்டு படைகளிடம் கூட அமெரிக்கா பின்லேடன் பற்றிய தகவலை கசிய விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




1 comments :

Tamil Baby Name May 2, 2011 at 6:08 PM  

Was a shocking news,

Hope every thing get settled now! :)

Cheers
From the Tamil Baby Name Team

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com