Sunday, April 10, 2011

இலங்கையை இந்தியா உதைபந்தாக்குவதற்கு தமிழ் , சிங்கள அரசியல்வாதிகளே காரணம்.

இந்திய அரசியல்வாதிகள் இலங்கையை உதைப்பந்தாக பயன்படுத்துகின்றார்கள் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தியா இலங்கையை தனது உதைபந்தாக பயன்படுத்தியதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் அவ்வாறு இந்திய இலங்கையை பயன்படுத்தியமைக்கு இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளின் நரித்தனமே காரணம் எனக் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், இந்திய மற்றும் தமிழக அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக இலங்கையை கால்பந்தாக பயன்படுத்தினார்கள் என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு இலங்கையை மாறி மாறி ஆண்டு வந்த அரசாங்கங்களும், பெரும்பான்மை அரசியல்வாதிகளும் தமிழர் பிரச்சினையை தமது அரசியல் தேவைகளுக்காக கால்பந்தாக பயன்படுத்தினார்கள் என்பது மகா உண்மையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1984 முதல் 1989 வரையிலான காலப்பகுதியில் இந்திய அரசியல் தலைமைத்துவம் இலங்கையை உதைப்பந்தாக பயன்படுத்தியது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மலையகத் தமிழர்களையும், பிற்காலத்தில் வடகிழக்கின் ஈழத்தமிழர்களையும் தமது அரசியல் தேவைகளுக்காக கால்பந்தாக பயன்படுத்தியது என்பது உண்மைத்தான். இந்த கால்பந்து விளையாட்டிற்கு இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளும் துணைபோனர்கள் என்பதும் உண்மைத்தான்.

ஆனால் இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தியது, இலங்கையின் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள்தான் என்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிந்துகொள்ள வேண்டும். இது இலங்கை தொடர்பில் நடுநிலைமையாக சிந்திக்கும் அனைவருக்கும் புரியும் உண்மையாகும்.

சுதந்திரம் பெற்ற உடனேயே முதற்காரியமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மலையக தமிழர்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது. பிறகு பண்டாரநாயக்கவின் அரசாங்கம் சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டுவந்தது. இவற்றில் இருந்துதான் அனைத்து பிரச்சினைகளும் ஆரம்பித்தன.

இனப்பிரச்சினைக்கு ஒரு பெரும்பான்மை கட்சி தீர்வு கொண்டுவரும் பொழுது, அடுத்த கட்சி அதை எதிர்த்து ஊர்வலம் நடத்தியது அல்லது பாராளுமன்றத்தில் தீர்வு பொதியை எரித்தது அல்லது யாழ் நூலகம் உட்பட தமிழர் சொத்துக்களை எரித்து காடைத்தனம் செய்தது. இத்தகைய இனவாத வரலாறுதான் இந்நாட்டிலே சிங்கள பேரினவாத கட்சிகள் நடத்திய அரசியல் கால்பந்தாட்டமாகும்.

இதிலே உலகப்கோப்பையை இரண்டு பிரதான கட்சிகளுமே மாறி மாறி வாங்கியுள்ளன. இந்த பரம்பரையில்தான் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் வந்துள்ளார். இந்நிலைமையைத்தான் இந்திய மத்திய அரசாங்கத்தி;னதும், தமிழகத்தினதும் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள். எனவே அவர்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு, இன்று ஒப்பாரி வைப்பதில் பிரயோசனம் இல்லை. அதுமாத்திரம் அல்லாமல் தங்களை திருத்திக்கொள்ளாமல் அதே அரசியல் விளையாட்டை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கட்சியும், அரசாங்கமும் கொண்டு நடத்துகின்றன.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கு அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தயாராக இருக்கின்றன. எனவே முழு இலங்கையும் சிங்களவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என கருதி செயற்படும் கொள்கையை சம்பிக்க ரணவக்கவின் கட்சியும், இதுபோன்ற பெரும்பான்மை கட்சிகளும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு நாடுகள் இலங்கையை கால்பந்தாக பயன்படுத்தும் காலம் வெகு வேகமாக வரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com