Sunday, April 10, 2011

கழிவறை அகற்றுவதற்குள்ள தகமையேனும் அரசியல்வாதிகளுக்கு வேண்டும்: அமைச்சர்

இலங்கை அரசசேவையில், கழிவறை சுத்தமாக்கும் ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான அடிப்படைக் கல்வித்தகமையாக க.பொ.த. சாதாரணத் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதேநேரம் நாட்டினை வழிநடத்திச் செல்லும் அமைச்சரவையின் அமைச்சராகுவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை என போக்குவரத்து அமைச்சர் குமார் வேல்கம கூறியுள்ளார்.

அரசியல் வாதிகள் நிச்சயம் கல்வித் தகமையையும் மக்கள் மத்தியிலும் நற்பிரஜைகளாகவும் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் 53 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கல்வித் தகைமை அவசியமானதாக்கப்பட்டிருந்தால் பெரும்பாலான அமைச்சர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் இக்கூற்றினை எழுந்தமானதாக கூறவில்லை என கருதும் ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பொதுத்தேர்தல் என்பவற்றில் கலந்து கொள்வதற்கென கல்வித்த கமைகள் நிர்ணயக்கப்படுவதற்கான முதற்படியென கூறப்படுகின்றது. அவ்வாறு கல்வித்தகமைகள் நிர்ணயிக்கப்பட்டால், அது நிச்சயமாக குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும் என அமையலாம் என நிர்ணயிக்கப்படலாம்.

அவ்வாறானதோர் நிலைமை உருவாகின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர்களில் பெரும்பாலானோரும், விமல்வீரவன்ச, டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் மூட்டையை கட்டவேண்டிய நிலைமை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அவர் பேசுகையில் 'ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு முறையான பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்பும் கிடைக்கவில்லை. புதிய ஆட்சேர்ப்பு இல்லாததால் பதவி உயர்வுகளை வழங்க முடியாது. முன்னர் தொழிலாளியொருவருக்கான அடிப்படை கல்வித் தகைமை 8 ஆம் வகுப்பாக இருந்தது. இப்போது அது க.பொ.த. சாதாரணத் தரமாக்கப்பட்டுள்ளது. அதனால் குறைந்த கல்வித் தரமுடைய இளைஞர்களுக்கு கிராமத்தில் தொழில் வாய்ப்பு வழங்குவது கடினமாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் குறைந்தபட்சம் 682 ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தேவைப்பட்ட போதிலும் 270 பேர் மாத்திரமே இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com