Tuesday, April 5, 2011

பெருந்தோட்டங்களில் வறுமை 50 சதவீதத்தால் அதிகரிப்பு. ஆணைக்குழு முன் குமுறல்

கிராம வறுமை 5 விதிதத்தால் குறைந்துள்ள அதேவேளை பெருந்தோட்ட வறுமை 50 விகிதத்தால் உயர்ந்துள்ளதாக குறிப்பிடுவதன் மூலம் பெருந்தோட்டத்தை அவ்வறிக்கை நாட்டின் மிகவும் வறுமை நிறைந்த துறையாக இனங்கண்டுள்ளது. அதேவேளை தேசியளவில் வறியவர்களுக்கான அரச உதவிகள் 75லிருந்து 80 விகிதத்தினருக்கு வழங்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் சமூர்த்தி சமூகப் பாதுகாப்புத்திட்டம் அரிதாகவே பெருந்தோட்ட மக்களை அடைந்துள்ளது.

இவ்வாறு கற்றுக் கொண்டப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் என்ற அடிப்படையிலும் ஒரு சுதந்திர ஆய்வாளர் என்ற அடிப்படையிலும் சாட்சியமளித்த பி.பி.சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் சாட்சியமளிக்கையில்

இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும், அபிவிருத்தியையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதன் தேவையை மையமாக கொண்டு, கடந்த கால நிகழ்வுகளின் பின்புலங்களை ஆராய்ந்து அவற்றின் உண்மையை கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்டப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க (LLRC) ஆணைக்குழுவிற்கு இச்சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பெயர் பி.பி.சிவப்பிரகாசம். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, மனித அபிவிருத்தி தாபனத்தின் சார்பாக அதன் தலைவர் என்ற அடிப்படையிலும் ஒரு சுதந்திர
ஆய்வாளர் என்ற அடிப்படையிலும் என்னுடைய கருத்துக்களை உங்கள் கவனத்திற்கும் பரிந்துரைகளுக்குமாக சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கை பல்லின, பல மத, பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு என்ற அடிப்படையில் வரலாற்று காலமுதல் மக்கள் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் இந்த நாட்டை கட்டியெழுப்பி வந்திருந்த போதும், கடந்த இரு தசாப்பதங்களாக பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட இன முரண்பாடு கூர்மையடைந்து ஒரு யுத்தத்தையும் தோற்றுவித்திருந்தது.

இதனால் பல்வேறு இன, மத குழுக்களுக்கிடையே வன்முறைகள் மற்றும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு அவர்களின் வாழ்வியல் அம்சங்கள் சீர்குலைக்கப்பட்டன. இதனால் ஒரு புதிய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முற்றுமுழுதாக பாதித்துள்ளது.

அந்த பின்னணியில் இன வன்முறைக்கு இலங்கை தேசத்தின் வட கிழக்கு மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பாதிக்கப்பட்டன. அதேவேளை இந்த இன மோதலினால் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த மற்றைய இனத்தினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டனர். அந்த அடிப்படையில் இலங்கை சனத்தொகையில் ஏறக்குறைய 5.41 வீதத்தை கொண்ட, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்ற, வறுமைக்கோடின் அதி உச்சத்தை அனுபவித்து கொண்டிருக்கின்ற மலையக தோட்ட புற மக்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டே வந்துள்ளனர்.

யுத்தம், இன வன்முறை என்பவற்றினால் ஏற்பட்டுள்ள வடுக்கள் இன்றும் அவர்களின் மனதிலே பதிந்துள்ளதையும், அதனால் அவர்கள் அந்நியமாக்கப்பட்ட ஒரு நிலையில் வாழ்ந்து வருவதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த
அந்நியப்படுத்தலுக்கும் உரிமைகள் மீறப்பட்டிருத்தலுக்குமான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, நல்லிணக்க ஏற்பாடுகளினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமேயே ஒரு சுபீட்சமான இலங்கையின் பங்குதாரர்களாக அவர்களையும் இணைத்துக்கொள்ள முடியும் என நாம் கருதுகின்றோம்.

மேற்படி ஆணைக்குழுவின் அடிப்படை நோக்கத்தின் படி (Mandate)இவ்வாணைக்குழு 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற சம்பவங்களை முதற்கொண்டு தன்னுடைய விசாரணைகளை மேற்கொண்டாலும் கூட, இன பிரச்சினை அல்லது சமூக பிரச்சினையின் ஆரம்பத்தை அதற்கு பின்நோக்கி பார்க்க வேண்டி இருக்கின்றது. அவ்வடிப்படையில் மலையக மக்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் அல்லது மலையக தமிழர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றார்கள். இம்மக்களின் வரலாறு இலங்கையில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட 18202 ஆம் ஆண்டுகளிலிருந்தே ஆரம்பமாகின்றது. தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இம்மக்கள், இந்தியாவிலிருந்து காலாகாலம் இலங்கைக்கு வந்த வந்தேறுகுடிகளில் இறுதியாக இலங்கைக்கு வந்தவர்கள் எனலாம். தமிழ்மொழியைத் தாய்மொழியாகவும், மத்திய மலைநாட்டை மையமாகவும் இந்து கலாசார பண்பாட்டை பின்னணியாகவும் கொண்ட ஒரு வரலாறுக்கு சொந்தக்காரர்களாவர்.

இந்த மலையக மக்களின் இன ரீதியான அல்லது சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு 1948 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் ஓர் அடிப்படை காரணமாக இருந்து வருகின்றது. 2003 ஆம் ஆண்டு 35ஆம் இலக்க பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் இப்பிரச்சினை கொள்கை அளவில் தீர்க்கப்பட்டாலும், கடந்த ஏறக்குறைய 50 வருட கால வரலாற்றில் இம்மக்களின் சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பலவற்றை அனுபவிக்க முடியாமல் போனதற்கும் இந்த நாட்டிலே அவர்கள் அபிவிருத்தியிலும் சமூக ஒருங்கிணைப்பிலும் ஓரங்கட்டப்பட்டதற்கும் இந்த பிரஜாவுரிமை சட்டமும் அதனுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளுமே காரணம் என நாம் நம்புகின்றோம்.

இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலாகாலம் முயற்சி செய்த அரசாங்கங்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்திலே நன்றி கூறுகின்ற அதேவேளை, இப்பிராஜாவுரிமை பிரச்சினையின் பின் விளைவுகள் சில இன்றும் தொடர்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதாவது இன்றும் பெருந்தொகையான மக்கள் வாக்காளர் அட்டையில் பதியப்படாதவர்களாகவும், தங்களின் தனித்துவத்தை நிரூபித்துக் கொள்ளக்கூடிய பிறந்த குறிப்பு, தேசிய அடையாள அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் இல்லாத அந்நியர்களாகவும் நாட்டின் தேசிய அபிவிருத்தியில்
பங்காளர்களாக இணைய முடியாதவர்களாகவும் கல்வி தராதரத்திலே பின்னடைந்தவர்களாகவும் நிலம் - வீட்டுரிமைகளில் இருந்து அந்நியப் படுத்தப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 50 வருட காலமாக இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நாடற்றவர் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்துள்ளன. இவ்விடயத்தில் இந்திய அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன. எவ்வாறெனினும் இப்பிரச்சினை ஓர் மனிதாபிமான, மனித உரிமை பிரச்சினையாக அல்லாமல், ஓர் அரசியல் விடயமாகவே இவ்விரு நாடுகளாலும் காய் நகர்த்தப்பட்டன. என்றாலும் 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சட்ட ஏற்பாடானது இலங்கை அரசாங்கத்தின் நன்முயற்சிக்கு உதாரணமாக திகழ்கின்றது.

இச்சந்தர்ப்பத்திலே பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த அனைத்து கட்சிகளுமே இச்சட்ட மூலத்தை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் கடந்த கால அரசுகளின் பின்னடிப்புகளை இச்சந்தர்ப்பத்தில் விமர்சிக்காமல் இருக்க முடியாது. இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையம் (UNHCR) ஆற்றிய பங்கு மிக முக்கியமானதாகும்.

இப்பிரச்சினை குறுங்காலத்தில் தீர்க்கப்பட்டதற்கு இலங்கை ஓர் உதாரணம் என இவ்வாணையம் குறிப்பிட்டது. ஆனால் இப்பிரச்சினையில் பின் விழைவுகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. இன்றுவரையும் ஆயிரக்கணக்கானவர்கள் பிரஜாவுரிமை சான்று சமர்ப்பிக்க கோரி அரசாங்க காரியாலயங்களில் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். 2003 ஆம் ஆண்டு அடையாளங் காணப்பட்ட 300,000 பேர்களில் 190,000 பேர்களே பிரஜாவுரிமைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்3. இது சம்பந்தமாக கீழ்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

* 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சட்டத்தின் பின்புல ஏற்பாடுகள் தொடர்பாக அரச நிர்வாக நிறுவனங்கள் முழுமையாக அறிவுறுத்தப்படவில்லை. நடைமுறையில், அரச அதிகாரிகள் அவர்களை அணுகும் இந்திய வம்சாவளி மக்களிடம் பிரஜாவுரிமை சான்றிதழை கோருகின்றனர். எனினும் மேற்படி சட்ட விதிகளுக்கு அமைய ஒருவர் தான் பிரஜை என்பதை சத்திய கடிதம் ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தினால் அது இறுதியான ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

* அதேவேளை பிரஜாவுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காத ஒருவரின் வாக்காளர் பதிவிற்கான கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது.

எனவே பெருந்தோட்ட மக்களின் நாடற்ற நிலைமையை அர்த்தபூர்வமாக ஒழிப்பதற்கு மேற்கூறிய பிரச்சினைகள் இனங்காணப்படுவதுடன் மட்டுமன்றி தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதில் முக்கியமாக அனைத்து பாதிக்கப்பட்ட மக்களினதும் சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் உறுதி செய்வதற்கு முதற்படியாக அனைத்துமட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் சட்ட, நடைமுறை ஏற்பாடுகள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். பொதுச்சேவைகள் வாய்ப்புக்கள் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கை மொத்த சனத்தொகையின் 5.4% ஆவர். அரச தகவல் ஒன்றின் படி இவர்களில் 0.1% அரச சேவைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். மாகாண சபை சேவைகளில் 0.2மூ ஈடுபட்டள்ளனர். பெருந்தோட்ட தொழில் வாய்ப்புகளிலும் கூட வெளியார்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. உதாரணமாக பிள்ளை பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்களுள் 80 வீதமானவர்களும் சமூக நல உத்தியோகத்தர்களும் கூட
ஏனைய சமூகங்களை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

பெருந்தோட்டத்துறை உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து வேறுபட்ட தனித்த அலகுகளாகக் கருதப்படுகின்றமையால், பெருந்தோட்ட மக்கள் அம்மன்றங்களின் நேரடிச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்ததாகவே காணப்படுகின்றன. பெருந்தோட்டங்கள் குறிப்பிட்ட கிராம சேவையாளர் பிரிவிற்குள் இருந்தாலும் கிராமத்தவர்களை போலன்றி அவர்களால் கிராம சேவையாளரின் நேரடி சேவையை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இம்மக்களை பொருத்தவரை கிராம சேவையாளர் அவரது சேவையை பெருந்தோட்ட நிர்வாகத்தின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

பெருந்தோட்ட எழுதுனர்களும் ஏனைய உத்தியோகத்தர்களுமே கிராம சேவையாளருக்கும் பெருந்தோட்ட மக்களுக்குமிடையிளான ஆவண பரிமாற்ற விடயங்களில் உதவுகின்றனர். அதன் விளைவாக பெருந்தோட்ட மக்களுக்கு உரிய முறையில் தமது சேவையை வழங்குவதற்கான வாய்ப்பு கிராம சேவையாளருக்கு குறைவாகவே இருக்கின்றது. இதில் பெருந்தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இன்றி, இன்று சிறியளவில் கிடைக்கும் சிவில்
சேவையை கூட பெருந்தோட்ட மக்களால் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கின்றது. மறுபுறம் கிராம சேவையாளர் பெருந்தோட்ட மக்களை நேரடியாக தெரிந்தவர் அல்லர். இந்நிலையில் அவரால் அம்மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்கோ, அதே வேளை அவர்களுள் அரசின் வேலைத்திட்ட பயன்களை அனுபவிக்க தகுதி பெற்றவர் யார் என்பதை இனங்காண்பதற்கு முடிவதில்லை. முழுமையாக கூறுவதெனின், இவ்வாறான
முட்டுக்கட்டைகள் அரச வளங்களை அடைவதற்கும் அல்லது அவைகளிலிருந்து பயன்பெறுவதற்கும் தடையாக இருக்கின்றன. பெருந்தோட்ட மக்களுக்கு, பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு அடுத்ததாக அடிப்படை மனித உரிமை சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனம் பிரதேச செயலகமே ஆகும். எனினும் இந்நிறுவனத்தின் அடிப்படை செயற்பாட்டு வரையறைகளை நோக்கும்போது இந்நிறுவனம் பெருந்தோட்ட மக்களுக்கு சமத்துவமான அரச சேவை வாய்ப்புக்களை வழங்குவதற்கான போதிய வழிவகைகளை கொண்டிராமை தெளிவாகின்றது.

இந்திய வம்சாவளி மக்கள் குறிப்பாக மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் போக்குவரத்து பாதைகளில் இருந்தும் நகர மையங்களிலிருந்தும் வெகு தூரத்திலேயே சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு சிறு சிறு குழுவினராக வாழ்கின்றனர். இதனால் பிரதேச செயலகத்தை அடைவதற்கும் அதன் மூலமாக அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்திகொள்வதற்குமான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன. இந்நிலைமை பிரதேச செயலகங்களை அணுகி அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்குமான வாய்ப்புக்களை குறைத்துள்ளது. அதேவேளை மலையக பெருந்தோட்ட மக்கள் போதியளவில் பிரதேச சபை அதிகார வரம்பிற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில்
பெருந்தோட்ட மக்களை இணைத்துக்கொள்ளும் வகையில் கிராம சேவையாளர் பிரிவுகள்
உருவாக்கப்பட்டன. எனினும், பல பிரதேசங்களில் பெருந்தோட்ட மக்கள் கிராமங்களில் அமைந்துள்ள கிராம சேவையாளர் அலுவலகங்களையே நாட வேண்டியவர்களாக உள்ளனர். சில பிரதேச செயலங்கள் புவியியல் ரீதியாக போக்குவரத்து வசதியற்ற அல்லது குறைந்த பிரதேசங்களிலேயே அமைந்துள்ளமை பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினையாகும்.

உதாரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பிரதேச மக்கள் கினிகத்தனை என்ற இடத்திற்கும், டயகம – அக்கரபத்தனை பிரதேச மக்கள் நுவரெலியாவிற்கும் செல்ல வேண்டியிருக்கின்றது. அதேவேளை குறைந்த எண்ணிக்கையில் 7,587 மக்களே வதியும் அம்பாரை லகுகல பிரதேசத்திற்கு இன விகிதாசார அடிப்படையில் பிரதேச செயலகங்கள் அமைந்துள்ளன.
அதேவேளை 755,000 மக்கள் வசிக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்கள் அமைந்துள்ள அதேவளை அம்பகமுவ பிரதேசத்தின் 211,852 மக்கள் எண்ணிக்கைக்கு ஒரு பிரதேச செயலகமே உள்ளது. இப்பிரதேச மக்கள் போதியளவில் பிரதேச செயலக அதிகார வரம்பிற்குள் உள்வாங்கப்படாமையினால் இப்பிரதேசங்களின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படுவது அவசியமாகின்றது.

நுவரெலியாவின் மக்கள் தொகை, புவியில் சமூக – கலாசார அம்சங்களுடன் போக்குவரத்து வசதிகளையும் கருத்திற்கொண்டு மொழி ரீதியான பிரதேச செயலகங்கள் அமைக்கப்படுவதுடன், பதுளை, இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களிலும் இன்னும் சில மாவட்டங்களிலும் மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

அடிப்படை ஆவணங்கள் கடந்த காலங்களில் பெருந்தோட்ட இளைஞர்கள் பெண்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமைக்கு பிரதானமாக அவர்கள் தேசிய அடையாள அட்டைகள் இன்றி தங்களை அடையாளம் காட்ட தவறியமை காரணமாக முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை அவர்கள் பெருந்தோட்டங்களில் முறையான ஒரு பொறிமுறையை கொண்டிராமையிலிருந்து ஆரம்பமாகின்றது. இன்றும் கூட
இந்நிலைமையைத் தோட்டங்களுக்கு வெளியே தொழில்களை பெற்றுக்கொள்வதற்காகவும்,
நடமாடுவதற்கும் கூட அவர்களுக்கு பெறும் தடையாக உள்ளது. உலக வங்கி அறிக்கை வறுமைக்கும் அடையாள அட்டைகள் இன்மைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு
இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. இதன்படி சொத்து புள்ளி வறுமை தேசிய அடையாள அட்டைகள் வைத்திருப்போர் மத்தியிலான வறுமை அளவிலும் குறைவானது என
குறிப்பிடுகின்றது

16 – 19 வயதுகளுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் தேசிய அடையாள அட்டைகள் வைத்திருப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் இது அவர்களின் நகர்புறங்களுக்கு செல்லும் வாய்ப்பை கல்விபெறும் வாய்ப்பை குறைப்பதுடன் பெருந்தோட்ட குடும்பங்கள் ஒரங்கட்டப்படுவதற்கு காரணியாகவும் அமைகின்றது. அரசயந்திரத்தின் நிர்வாக குறைப்பாடுகள் பெருந்தோட்ட மக்கள் தேசிய நீரோட்டத்திற்குள்
உள்வாங்கப்படாமைக்கும் முறுகல் நிலை உருவாவதற்கும் காரணிகளாகும். இவைகளிலிருந்து பாடங்களை கற்று அவைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.


மொழி உரிமை

தகவல்களை வழங்குதலில் கருத்துக்களை முன்வைப்பதில் பரிமாறிக்கொள்வதில் மொழியின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டமையின் பயன்பாடாக இலங்கை 1987 இல் தமிழை அரச கரும மொழியாக அங்கீகரித்தது. எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பதிவு மொழியாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கையில் தமிழ் மக்கள் பெருபான்மையினராக வாழும் (வடக்கு கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த) ஏனைய மாகாணங்களில் சிங்களமே நிர்வாக மொழியாக இருக்கின்றது. ஒவ்வொருவரும் தனது சிங்கள, தமிழ் அல்லது ஆங்கில மொழியில் அரசுடன் தொடர்பு கொள்ளும் உரிமையுடையவராவர் என அரசியல் யாப்பு கூறுகின்றது. எனினும்
பொதுவாக இது மதிக்கப்படாததுடன் இவ்வுரிமை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே விரிவாக்கல் செய்வதற்கு அர்த்த ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. பெருந்தோட்ட தமிழ் மக்கள் மொழி அடிப்படையில், பிரதேச செயலகங்களில், மாவட்ட செயலகங்களில், பொலிஸ் நிலையங்களில், அஞ்சலகங்களில் மருத்துவமனைகளில், பிறப்பு, இறப்பு, திருமண பதிவாளர் அலுவலகங்களில் பல்வேறு சிரமங்களுக்கு நாளாந்தமும் முகங் கொடுக்கின்றனர்.

பொதுப்போக்குவரத்து சாதனங்களிலும் ஏன் நீதிமன்றங்களும், தொழில் நீதிமன்றங்களும் வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பு வழங்குவதும் சிங்கள மொழியிலேயே. எனவே நீதித்துறையிலும் இவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். சிங்கள மொழியை மட்டுமே தெரிந்த பதிவக அலுவலர்கள் பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகளில் தமிழ் பெயர்களை சரியாக் தெரிந்து கொள்ள முடியாதவர்களாக தவறாக எழுதுவதனால் ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதியங்களுக்கு மனு செய்யும் போது இம்மக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இது அனைத்துக்கும் மேல் அவர்களின் மொழி உரிமைக்கு
தரப்படும் மதிப்பையும் கேள்விக்குள்ளாகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கிய காரணிகளுள் ஒன்றாக மொழிப் பிரச்சினை இனங்காணப்பட்டு. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர், முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாகும். எனவே மொழி அடிப்படையில் இடம்பெற்றுள்ள பாகுபாடுகளுடன் அவற்றின் விளைவுகளிலிருந்தும் பாடங்களைக் கற்று பிரச்சனைக்கும் நிரந்தரதமான தீர்வொன்றை காண்பதன் ஊடாக நாம் எமது வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை இணைப்போமாக.

பெருந்தோட்ட சமூகத்தினர் மத்தியில் வறுமை அரசின் வறுமை அளவிடு பெருந்தோட்ட சமூகம் வறுமையின் அடிமட்டத்தில் இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்களிலும் பார்க்க வறுமைக்கோட்டின் கீழே இருப்பதாக குறிப்பிட்டுள்ள அதே வேளை, இம்மக்களின் வறுமைக்கு அவர்கள் மத்தியில் காணப்படும் மது
பாவனையை காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் 'இலங்கையை மீளெழுப்புவோம்' ஆவணமும் பெருந்தோட்ட வறுமை மதுபாவனையின் விளைவாகும் எனக் குறிப்பிடுகின்றது. எனினும் தமிழ் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் மது பாவனை விகிதம் 10 ஆக இருக்கையில் மொனறாகலை மாவட்டத்தின் விகிதம் 17 ஆக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மனித அபிவிருத்தி மக்களின் அடிப்படைத் தேவைகள் திருப்திகரமாக நிறைவு செய்யப்படுவதிலேயே தங்கியுள்ளது. உலக வங்கியின் 1999ஃ2000 ஆம் ஆண்டு அறிக்கை நகர்புற தனி நபர் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.2009ஃ- எனவும் பெருந்தோட்ட தனிநபர் நுகர்வுச் செலவு ரூ.1449ஃ- எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை இலங்கையை மீளெழுப்புவோம் ஆவணத்தின் கொள்கைத்திட்டமிடல் பெருந்தோட்ட சமூகத்தினர் மத்தியில் வறுமையும் குறை அபிவிருத்தியும் நிலவுவதாகவும் ஏற்றுக்கொண்டிருந்தாலும் இப்பின்தங்கிய – குறை அபிவிருத்தி நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான வழிவகைகளை முன்னெடுக்காது, கல்வியில் பின்தங்கிய இச்சமூகத்தினர் மத்தியில்
மதுபழக்கமும் கடன் சுமையும் நிலவுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

2007 உலக வங்கி அறிக்கை 2002 ஆம் ஆண்டுகளில் பெருந்தோட்டத்துறையே மிகவும் வறுமை நிறைந்ததெனவும் இத்துறையின் வறுமை அளவு தேசிய மட்டத்திலும் பாhக்க 7 மடங்காகும் எனவும் நாட்டு மக்கள் தொகையில் 5 விகதமான அவர்கள் மத்தியில் வறுமை 8 விகிதமாகவுள்ளது எனவும் குறிப்பிட்டது. ஏனைய துறையினரை விட வறுமை அதிகம் காணப்படும் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் வறுமை அளவு பயங்கரமாக உயர்ந்து செல்கின்றது. அவர்களின் அபிவிருத்தி தேக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் சமூக நலன் நெடுநாட்களாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. (2.21.2007)6 இச்சமூகத்தின் 30 விகிதமானவர்கள் வறுமை நிலையிலிருந்தாலும் அவர்களுள் 13 விகிதமானவர்களே அரச சமூக நல உதவிகளைப் பெறுகின்றனர். இலங்கை மில்லேனியம் அபிவிருத்தி இலக்கின் வறுமை ஒழிப்புத்திட்டதின் பங்காளர் ஆகும். எனவே இது தொடர்பாக, அனைத்துத்
துறைகளையும் உள்வாங்கும் வெளிப்படையான திட்டம் ஒன்று அவசியமாகும்.

மில்லேனியம் அபிவிருத்தி இலக்கின் கீழ் மலையக மக்களின் பொதுநிறுவனக் கட்டமைப்பு அபிவிருத்தி மறுக்கப்படமுடியாததொன்றாகும். கிராம வறுமை 5 விதிதத்தால் குறைந்துள்ள அதேவேளை பெருந்தோட்ட வறுமை 50 விகிதத்தால் உயர்ந்துள்ளதாக குறிப்பிடுவதன் மூலம் பெருந்தோட்டத்தை அவ்வறிக்கை நாட்டின் மிகவும் வறுமை நிறைந்த துறையாக இனங்கண்டுள்ளது. அதேவேளை தேசியளவில் வறியவர்களுக்கான அரச உதவிகள் 75லிருந்து 80 விகிதத்தினருக்கு வழங்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் சமூர்த்தி சமூகப் பாதுகாப்புத்திட்டம் அரிதாகவே பெருந்தோட்ட மக்களை அடைந்துள்ளது.

சிறுபான்மையினருக்கெதிரான தாக்குதல்கள் சுதந்திரத்துக்கு பிந்திய காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன ரீதியான பாகுபாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றி வந்தமை யாரும்
மறுப்பதற்கில்லை. 1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் மத்திய மற்றும் தென்பகுதி பெருந்தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாளித் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் பெருமளவிலான இந்திய வம்சாவளித் தமிழர்கள் வட கிழக்கையும் இந்தியாவை நோக்கியும் இடம்பெயர்ந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. உடமைகள் தீக்கிரையாகப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் வடக்கிழக்கில் இடம் பெற்ற யுத்தத்தின் வெளிப்பாடு மலையகத்திலே வாழும் மக்களின் முதுகிலே விழுந்தது என பலரால் எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் தமிழர்களாயிருந்தமையும் தாக்குதலுக்கு பிரதான பின்புலமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக மெற்கொள்ளப்பட்ட சில வன்முறைகளை உதாரணங்களாக உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

1. 1998 ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தின் வேவல்வத்த தோட்டக் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன.

2. 2000 ஆம் ஆண்டு பண்டாரவளை பிந்துவௌ புனர்வாழ்வு முகாமில் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை,

3. 2005 ஆம் ஆண்டு தெற்கில் களுத்தறை மாவட்டத்தின் மில்லகந்த தோட்டத்து மக்கள் தாக்கப்பட்டமை, தெற்கில் தோட்ட மக்கள் தாக்கப்பட்டு, அவ்வடுக்கள் மாறுவதற்கு முன்னர் அதே வருடம், நுவரெலியா மாவட்டத்தின் கந்தபொல பிரதேசத்தில் சிங்களத்தமிழர் கலவரத்தில் இரு தமிழர்கள் கொலை செய்யப்பட்டு 29 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கும் காயங்களுக்கும் இழக்காகினர்.

4. 2006 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேசத்தின் பம்பேகம
தோட்டத்துக்குள் சிங்கள – தமிழர் கலவரம் வெடித்தது. இதனால் ஏறத்தாழ 50 குடும்பங்கள் தோட்டத்திலிருந்து வெளியேறி புஸ்ஸல்லாவ பகுதியிலுள்ள தோட்டங்களுக்கு மீள் குடியேற்றப்பட்டனர்.

5. 2008 ஆம் ஆண்டு மீண்டும் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல செஸ்டர் போர்ட் தோட்ட மக்கள் தாக்கப்பட்டனர்.

6. 2010 ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை பகுதியில் குகுல்கம தோட்ட மக்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இவ்வாறு பெருந்தோட்ட மக்களுக்கெதிராக இடம்பெற்ற சிறு சிறு இன வன்முறைகள் பாரிய இன வன்முறைகளுக்கு வித்திடலாம். எவ்வாறாயினும், 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன வன்முறையின் பின்னர் உருவாக்கப்பட்ட சன்சோனி ஆணைக்குழு முதல் பல்வேறு ஆணைக்குழுக்குள் உருவாக்கப்பட்டாலும் கூட இன வன்முறைகள் அவ்வப்போது எழுகின்ற வன்முறைகள் இந்நாட்டில் மீண்டுமொரு சம்பவத்திற்கு வழிகோலலாம்.

ஆகவே இவ்வாணைக்குழுவிடம் கேட்டுக்கொள்வதென்னவென்றால், இத்தகைய வன்முறைச்
சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பரிந்துரைகள்

1. மலையக பெருந்தோட்ட மக்கள் பிரஜாவுரிமைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு எத்தகைய பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படாதிருப்பதை யாப்புத் திருத்தத்தினூடாகவும் நிர்வாக சேவை சீர்திருத்தத்தினூடாகவும் உறுதி செய்தல் வாக்காளர்கள் தொடர்பான சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதற்கான அவசியமான அறிவுறுத்தல்களை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுத்தலோடு, அர்த்தமுள்ள வகையில் மலையக பெருந்தோட்ட மக்கள் அரச நிர்வாக சேவைக்கு உள்வாங்கப்படுதல் வேண்டும்.

2. மலையக மக்கள் உள்ளிட்ட தமிழ்பேசும் உத்தியோகத்தர்களைக் கொண்ட, சிறுபான்மையினருக்கான தனியான சிறுபான்மையினர் உரிமைகள் ஆணைக்குழு ஒன்றினை
உருவாக்குதல் அல்லது மலையகப் பிரதேசங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கவுமம் அவற்றைத்தீர்த்து வைக்கவும் தமிழ் உத்தியோகத்தர்களைக் கொண்ட மனித ஆணைக்குழுவினை தனியான அலகுகளை உருவாக்குதல்.

3. தமிழை நிர்வாக மொழியாக அமுலாக்குதல், அரச அமைப்புக்களிலும் ஏனைய பொது
இடங்களில் தமிழ்மொழியினை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்புக்களை வலியுறுத்தல்.

4. இலங்கை அரசாங்கம் மிலேனியம் அபிவிருத்தி இலக்கினூடாக அமைப்பினை உருவாக்கி மலையக மக்களின் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதில் உடனடிக் கவனம் செலுத்துதல் வேண்டும். மலையக பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபையினூடாகவும், தேசிய வரவுசெலவுத்திட்டதினூடாகவும் சர்வதேச அபிவிருத்தி நிதி வழங்குனர் மற்றும் வேறு வளங்களுடனும் மலையகத்துக்கான விரைவான அபிவிருத்தி திட்டத்தினை அமுலாக்குதல்.

5. பெருந்தோட்ட மற்றும் தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவு முறை அல்லது வாழ்க்கைச் செலவுப்புள்ளிக்கேற்ற கொடுப்பனவு முறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

6. பெருந்தோட்டங்களின் வினைத்திறனையும் செயற்பாட்டினையும் கண்காணிக்கக்கூடிய அமைப்பொன்றினை அறிமுகஞ்செய்தலோடு, பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்திக்கு உரமூட்டும் தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கினை வழங்குதல்.

7. வினைத்திறனுடைய வகையில் பெருந்தோட்ட சுகாதார சேவை தேசிய நீரோட்டத்துடன் உள்ளீர்க்கப்படல் வேண்டும்.

8. பெருந்தோட்ட கல்வித் துறைக்கு தேவையான மனித மற்றும் பௌதிக வளங்களை அவர்களின் தேவை அடிப்படையில் சாதகமான முறையில் மேம்படுத்துதல்.

9. பெரும்பான்மையான பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் சனத்தொகை, புவியியல், சமூக கலாசார மற்றும் மொழி அடிப்படையில் உள்ளுராட்சி அமைப்புக்கள் பின்வருமாறு பிரிக்கப்படுதல் வேண்டும்.

மாவட்டங்கள் தற்போதுள்ள பிரதேச செயலகங்கள் புதிதாக முன்மொழியப்பட்ட

பிரதேச செயலகங்கள் மொத்தம்
1. நுவரெலியா 05 1. அட்டன்
2. நோர்வுட்
3. தலவாக்கலை
4. நானுஓயா
5. ராகலை
6. திஸ்பனை
7. மத்துரட்ட 12
2. கண்டி 20 1. ரங்கல
2. ரஜவெல
3. புஸ்ஸல்லாவ 23
3. பதுளை 14 1. நமுனுகுல
2. வெல்லன்விட்ட 16
4. இரத்தினபுரி 17 1. மாறத்தென்ன
2. ரக்வானை 19

10. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பான அனைத்து கட்சி மகாநாட்டு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்படுத்தப்படுதல் வேண்டும்.

11. 13 ஆவது திருத்தச்சட்டம் அர்த்தமுள்ளதும் வினைத்திறன் மிக்கதுமான வகையில் அமுல்படுத்தப்படுதல் வேண்டும்.

12. மலையக பிரதேசங்களில் பொலீஸ் திணைக்களங்களுக்கான ஆளணிகள் இன விகிதாசார
அடிப்படையில் நியமிக்கப்படுதல், பெண் பொலீஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படுதல் வேண்டும்.

காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com