Wednesday, December 29, 2010

சிட்னி ராணுவத் தளத்தைத் தாக்க முயற்சித்த மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு.

மெல்பர்ன் இஸ்லாம் மதத்தை முன்னிறுத்தி சிட்னி ராணுவத் தளத்தை சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்க முயற்சித்த மூவரின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் குற்றவாளிகள் என மெல்பர்ன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விஸ் ஸாம் மகமுத் ஃபட்டால், நாயஃப் எல் சாயத், சானி எடாவ் அவெய்ஸ், ஆகிய மூவரும் சென்ற 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1லிருந்து ஆகஸ்ட் 4க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள சதி செய்ததாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

இதில் முதல் இருவரும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாம் நபர் சோமாலிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு எதிரான தண்டனை எப்பொழுது என்பதை நீதிமன்றம் கூறவில்லை. ஆனால் இந்த மூவரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த மூவருடன் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய வேறு இருவர் குற்றவாளிகள் அல்லர் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்துர்ரஹ்மன் முகமது அகமது, யாக்கூப் கையிரே எனப் பெயர் கொண்ட மேலும் இருவர் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்விருவரும் சோமாலிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐவரும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர் என்று கூறிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் இவர்களில் ஒருவர் இஸ்லாமிய மத குருமார்களின் உத்தரவான ‘ஃபாத்வா’வைப் பெறுவதற்காக சோமாலியா சென்றதாக நீதிமன்றத்தில் கூறினார்.

இவர்கள் ஆப்கானிஸ்தான் போரில் ஆஸ்திரேலியா பங்கேற்றதைக் குறைகூறி அந்நாடு முஸ்லிம்களை ஆஸ்திரேலியா அடக்கி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினர். இஸ்லாம் மதம் பல்வேறு நாடுகளில் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இவர்கள் நம்பினர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com