Monday, May 24, 2010

இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கை கவலைதரும் விடயம்: ஐஎம்எப்

இலங்கை மீதான ஐ.நா. வின் போர்க்குற்ற அறிக்கை விடயம் கவலை தருவதாகவும், கவனத்தை ஈர்க்கும் விடயமாகவும் அமைந்துள்ளதென்று சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எப்) பேச்சாளர் கரோலின் அட்கின்ஸன் கூறியுள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா.வைத் தளமாகக் கொண்டியங்கும் இன்னர் சிட்டி பிரஸ்- க்கு அளித்த பேட்டியிலேயே ஐஎம்எப் பேச்சாளர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்னர் சிட்டி பிரஸின் நிருபர் மத்யூ ரஸல்லீ குறிப்பிட்டிருப்பதாவது:

வட இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தற்போது மேற்கொண்ட விஜயம் குறித்து இன்னர் சிட்டி பிரஸ் கேட்டது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் மூன்றாவது தொகுதி தாமதமாகியிருப்பதன் நிலைமை குறித்தும் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நெருக்கடிக்குழு இந்த வாரம் வெளியிட்ட அறிக்கை குறித்தும் கேட்கப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளால் மூன்றாவது தொகுதிக்கடனை வழங்குதல் விரைவாக இடம்பெறாதென்று எதிர்வுகூறப்படுகின்ற நிலையில், "களத்தில் தூதுக்குழுவை நாங்கள் அனுப்பி வைத்திருக்கின்றோம். அந்த தூதுக்குழுவானது விரைவில் தீர்மானத்தை மேற்கொள்ளும். வார இறுதியில் அதாவது நாளை (நேற்று) தூதுக்குழு தீர்மானத்தை எடுக்கும் என்று அட்கின்ஸன் குறிப்பிட்டிருந்தார்.

நட்பு ரீதியான நிருபர்களுக்கு கேள்விகள்,பதில்களை வழங்குவது தொடர்பாக நாணய நிதியம் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கையை கடைப்பிடிக்கின்றதா என்பது ஆச்சரியப்படும் விடயமென இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டிருக்கிறது.

வட பகுதிக்கான பயணம் எமது வழமையான நடைமுறையின் ஓர் அங்கமாகும். தலைநகருக்கு வெளியே சென்று மக்களைச் சந்திப்பது வழமையான நடைமுறையாகும் என்று அட்கின்ஸன் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்கியிருக்கும் முகாமுக்குச் சென்று மக்களை சர்வதேச நாணய நிதியம் சந்தித்திருந்தால் அது ஆச்சரியமானதொன்றாக விளங்கும்.

அரசாங்க அதிகாரிகளுடன் அதாவது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாண மாவட்ட ஆட்சித் தலைவர் கே.கணேஷ் ஆகியோரை நாணய நிதியப் பிரதிநிதிகள் சந்தித்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையை நாணய நிதியம் படித்திருந்தால் முகாம்களுக்கு ஐ.நா. வின் ஆதரவு தொடர்பான சர்வதேச விசாரணைக்கு அது அழைப்பு விடுத்திருக்கும் என்று இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com