Monday, May 24, 2010

புலிகள் மற்றும் ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து: மத்திய அரசு

இந்தியாவின் பெரும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் இலக்கு வைக்கப்படலாம்.
புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர் எ‌ன்று‌ம் அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று‌ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்விவகாரத் துறை இணை செயலர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், 'நம்பிக்கை துரோகிகள்' (இந்திய அரசு) மற்றும் 'எதிரிகளை' (இலங்கை அரசு) பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் போராளிகள், அந்த அமைப்பை விட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், LTTE இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது.

தடையாணை செயலில் இருந்தும், இந்தியாவில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து விடுதலைப்புலிகள் தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படவேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும், இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3ஆம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com