Monday, March 15, 2010

இஸ்ரேலைக் கண்டித்தார் கிளின்டன்

கிழக்கு ஜருசலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் எடுத்த தீர்மானத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அமெரிக்க-இஸ்ரேலிய உறவைப் பொறுத்தவரை இது “மிகவும் எதிர்மறையான” செயல் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடம் 43 நிமிட தொலைபேசி அழைப்பின்போது கிளின்டன் கூறினார்.

அமெரிக்கா இஸ்ரேலை இவ்வளவு கடுமையாகக் கண்டிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்று பிபிசி செய்தி நிறுவனத்தின் வாஷிங்டன் செய்தியாளர் குறிப்பிட்டார். அமைதிப் பேச்சை மீண்டும் தொடரச் செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்ட வருகையின்போது, இஸ்ரேல் தனது தீர்மானத்தை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ளும்வரை பேச்சு வார்த்தைக்குத் திரும்பப் போவதில்லை என்று பாலஸ்தீனர்கள் கூறிவிட்டனர்.

திரு பைடன் ஜருசலத்தில் பேச்சு நடத்தியபோது புதிய குடியேற்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்ததற்காக திரு நெட்டன்யாஹு முன்னதாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ஔராண்டுக்கும் மேலாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சு வார்த்தையை “நேரடியற்ற முறையில்” நடத்த இஸ்ரேலியத் தலைவர்களும் பாலஸ்தீனத் தலைவர்களும் இணக்கம் அளித்திருந்தனர்.

ஆனால், இஸ்ரேலின் அறிவிப்பைத் தொடர்ந்து, குடியேற்றம் அமைக்கும் திட்டம் கைவிடப்படாவிட்டால் பேச்சு வார்த்தை நடத்துவது “மிகவும் சிரமமாக” இருக்கும் என்று பாலஸ்தீன் கூறிவிட்டது.

மேற்குக் கரையையும் கிழக்கு ëஜருசலத்தையும் 1967ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்தபிறகு, இதுவரை 100க்கும் மேற்பட்ட குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 500,000 யூதர்கள் வாழ்கிறார்கள். அனைத்துலகச் சட்டத்தின்கீழ் இந்தக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை. ஆனால் இஸ்ரேல் இதை மறுக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com