Monday, March 15, 2010

கொந்தளிக்கும் இலங்கையின் எதிர்காலம். -கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்-

சிறுபான்மை பெரும்பான்மை இனங்களுக்கு வெளியேயான வலை
இலங்கை நிலவரம் ஒரு கொந்தளிப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள்நாட்டிலும் குழப்பமான நிலை. வெளியேயும் மேற்குலகின் அதிகரித்து வரும் நெருக்கடிகள்ளூ அழுத்தங்கள். அத்துடன் இந்தியாவா சீனாவா அமெரிக்காவா தங்கள் கால்களை பலமாக ஊன்றிக் கொள்வது என்ற போட்டிகள். இந்தப் போட்டிகள் உள் நாட்டில் உருவாக்கும் குழப்பங்கள். அரசியல் கட்சிகளின் அணிப் பெருக்கம். வெளியே புலம் பெயர்ந்த தமிழர்களைக் கையாள முற்படும் மேற்கின் போக்கு என ஒரு வெப்ப வளையம்.

இதில் யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் எங்கே, எப்படி நிற்பது என்று தெரியாது தடுமாறிக் கொண்டும் போட்டியிட்டுக் கொண்டுமிருக்கும் நிலைமை. இதற்காக சுருக்குக் கயிறுகளோடு சில நாடுகளும் கத்தி, பொல்லு, குண்டாந்தடிகளோடு சிலநாடுகளும் சவக்குழி, பொறிக் கிடங்குகளோடு சில நாடுகளும் என்று ஒரு மாபெரும் பொறிவெளியில் இலங்கை இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

போர் முடிந்து விட்டது என்று யாரும் ஆறுதலடைய முடியாதபடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எல்லாமே எதிர் மறை நிகழ்ச்சிகள். 'மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா விடாது' என்பது உலகப் பொதுக்கூற்றல்லவா!

முன்னர், நிலைமைகளை சமநிலையில் வைத்திருப்பதற்கு போர் இருந்தது. புலிகள் இருந்தார்கள். இலங்கை அரசாங்கம் கொஞ்சம் விலகினால் புலிகளுக்கு நெருக்கமாக வந்து (இந்த நெருக்கம் இரகசிய வழிகளிலானது) அரசாங்கத்தைப் பணியவைக்கும் உத்தியை இந்த நாடுகள் பயன்படுத்தின. அல்லது ஆட்சியிலிருக்கும் தரப்புக்கு எதிராக இருக்கும் தரப்பைப் பலப்படுத்திப் பணிய வைக்க முயற்சித்தன. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதங்களிருக்கவில்லை. எது வாய்ப்பான தரப்பு என்பதே கவனிக்கப்பட்டது. புலிகள் இல்லாத வெளியில் உருவாகியிருக்கும் புதிய சூழலில் இலங்கையின் மீதான ஆதிக்கப் போட்டிகள் மும்முரமாகி விட்டன. இந்தியா புலிகளில்லாத இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை முழுமையாக்க முயற்சிக்கிறது.

இதில் அது ஏறக்குறைய பாதி வெற்றியை அடைந்துமிருக்கிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒரு வித இணைநிலை உறவைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவுக்கு இனிப்பான முறையிலேயே அது கூடுதலாக நடந்து கொள்கிறது. இதேவேளை நீண்ட காலத்துக்குப் பின்னர் (புலிகள் இல்லாத சூழலில்) தமிழ் - சிங்கள அதிகார வர்க்கங்களோடு ஒரு இணைநிலை உறவை இந்தியா இப்போது கொண்டுள்ளது. (இந்த நிலை ஒரு அமைதித் தீர்வுக்கு இலங்கையைக் கொண்டு செல்ல உதவும். அதற்கான சூழலையே இந்தியா உருவாக்குகின்றது என்று சொல்வோர் உள்ளனர். இது வேடிக்கையானது. இலங்கையில் அமைதி நிலவ ஒரு போதுமே இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. அதற்கான காரணங்கள் பலவுண்டு. அதை
இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

இப்போது இந்தியாவுக்கு மகிந்த அரசோடும் உறவு. தமிழ்க் கூட்டமைப்போடும் உறவு என்ற ஒரு புதிய சூழல். இது இந்தியாவைப் பொறுத்து வெற்றியே. ஆனால் ஒரு எல்லைவரையான வெற்றிதான் இது. இதற்கு எதிரில் பொறிகளோடும் அதிக முனைப்புகளோடும் மேற்குலகம் இருக்கிறது. திரை மறைவிலான முயற்சிகளோடு சீனா உள்ளது.

உலக அரங்கில் நிகழும் அதிகரித்த வர்த்தகப் போட்டிக்கு இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம். இதனால் அந்தத்தரப்புகள் தமக்கு வாய்ப்பான இடங்களின் வழியாகக் காய்களை நகர்த்துகின்றன. கைகளை வைக்கின்றன. கால்களை ஊன்ற முயற்சிக்கின்றன.

போர் முடிந்த நிலையில் நிச்சயமாக ஒரு அமைதி இலங்கையில் இதுவரையில் எட்டப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம், அகதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருதல், போர் நிகழ்ந்த பகுதிகளை அவற்றின் பாதிப்புகளிலிருந்து மீளக் கட்டியெழுப்புதல், சனங்களுக்குப்; புனர்வாழ்வழித்தல், அரசியல் தீர்வு நோக்கி முன்னேறுதல் என்று நிலைமைகள் மேம்பாடடைந்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அப்படி எதுவும் எளிதில் நடந்து
விடப்போவதுமில்லை. அதற்கு இந்த நாடுகள் அனுமதிக்கப் போவதுமில்லை. போர் மனித உரிமை மீறல்களுடன்தான் நடந்தது என்று இந்த நாடுகள் அனைத்துக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் போரின்போது இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா நாடுகளும் எந்தப் பேதங்களுமில்லாமல் தாராளமாக உதவின.

ஆனால், போருக்குப் பின்னர் அகதிகளுக்கு உதவவும் மீள் கட்டுமானம், புனரமைப்புப் போன்றவற்றுக்கு உதவவும் இவை தயாரில்லை. இது எப்படியிருக்கிறது? தமக்கு சார்பாக நடந்து கொண்டால் தாராள உதவி என்ற கொள்கை அன்றி வேறென்ன? இதற்குத் தனியே மகிந்த ராஜபக்ஸ மட்டும் காரணமல்ல. அவருக்கு இந்தக் குறைபாடுகளில் பெரும் பங்கிருந்தாலும் அவருக்கு அப்பால் ஏனைய அரசியல் தரப்பிருக்கும் சகலருக்கும் இவற்றில் பொறுப்பும் பங்குமுண்டு.

போர் முடிந்த பின்னர் இரண்டு பெரும் தேர்தல்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்தத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால், போர் முடிவுற்றதைத் தவிர நாட்டில் நிலவும் வேறு எந்தப் பிரச்சினைகளும் தீர்ந்ததாக இல்லை. பதிலாக இன்னும் பிரச்சினைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

அப்படியென்றால், என்னதான் நடக்கிறது? இனி என்னதான் நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இதுதான் சுவாரஷ்யமான பகுதி. கொலனி ஆதிக்கத்தின் போது இலங்கை போன்ற நாடுகளை பிரித்தானியா பிரித்தாளும் தந்திரோபாயத்தின் மூலம் கையாண்டது. அங்குள்ள மக்களை இன, மத, மொழி அடிப்படைகளில் வெவ்வேறு சமூகங்களாகப் பிரித்தாண்டது. இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயம் மேற்குலகின் கைவந்த கலை.

இதைப் பின்னர் இந்தியா கையாளத் தொடங்கியது. இதன் வெவ்வேறு வடிவங்கள்தான், ஐ.தே.க ஆட்சியிலிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தமக்குச் சார்பாகக் கையாள்வது. அது சாத்தியப்படாதபோது ஜே.வி. பி.யைக் கையாள்வது. சிறிலங்கா
சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தால் அதை வளைத்துப் போடுவது. முடியா விட்டால் எதிர்த்தரப்பைக் கையாள்வது. (சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1980 களின் நடுப்பகுதியில் ஜே. ஆரால் சிதைக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பி யை இந்தியா கையாண்டதை இங்கே நினைவு கூரவேண்டும்). அல்லது தமிழ்க்கட்சிகளை, இயக்கங்களைக் கையாள்வது.

இது இந்தியாவின் நடவடிக்கைகள் என்றால், போரின்போது நிகழ்ந்து கொண்டிருந்த சிதைவுகளை மையமாக வைத்துக் கொண்டு மேற்குலகம் ஒரு பக்கத்தாலும் சீனா இன்னொரு பக்கத்தாலும் ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இன்னொரு பக்கத்தாலும் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தின. அதாவது போர் எப்போதும் எதிர் எதிரான இரண்டு தரப்புகளைக் கொண்டது என்பதால் இவை இப்படித் தமது காரியங்களை இடையில் நின்று மேற்கொள்ள முடிந்தது.

இந்தப் பிரித்தாளும் தந்திரமானது நேரடியான கொலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்து அறுபது ஆண்டுகளான பின்னரும் தொடர்கிறது. அதுதான் கவலைக்குரியது. இப்போது இலங்கை அரசாங்கம் மேற்குலகுடன் வெளிப்படையான முரண் நிலைக்கு வந்துள்ளது. மேற்குலகமும் இலங்கையை வெளிப்படையாகவே மிரட்டவும் அதற்கு அழுத்தம் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடுதான், புலம் பெயர் தமிழர்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பிரித்தானியப் பிரதானிகள் கலந்து கொள்வதும் இவை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் முக்கிய கவனமெடுத்துக் கருத்துரைப்பதுமாகும்.

இன்னும் தங்கள் தேவைகளுக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாள முயற்சிக்கின்றது இந்த உலகம். எல்லாமே அவரவர் நலன்களுக்காக மட்டுமெ நடக்கின்றன. இல்லையென்றால், வன்னிப் போரின்போது ஈழத்தமிழர்கள் கொட்டும் பனியில் நின்று போரை நிறுத்தும் படியும் அங்கே கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றும் படியும் வேண்டிய போது அதையெல்லாம் கண்டு கொள்ளாத மேற்குலகம் இப்பொழுது நடக்கும் இந்தச் சிறு கூட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறதே. இது சிரிப்பாக இல்லையா?

மேற்குலகின் இந்த திடீர் மாற்றம் சில தமிழருக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் இப்போது தரலாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. பொதுவாகவே தமிழ் சிங்கள மக்களிடம் ஒரு குறைபாடிருக்கிறது. தமிழர்கள் வெளிச்சக்திகளால் நெருக்குவாரப்படும் போது சிங்களர்கள் சந்தோசப் படுவார்கள்.

அதாவது தமிழர்களின் மூக்குகள் உடைபடும் போது சிங்களவர்கள் சிரிப்பார்கள். சிங்களவர்களின் மூக்கு உடைபடும் போ தமிழர்கள் சிரிப்பார்கள். ஆனால், இரண்டு தரப்பினரும் தலைகளும் உடைபடுகின்றன என்பதை இவர்களில் பலரும் கண்டு கொள்வதில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.

இந்திய நெருக்கடி அல்லது அழுத்தம் என்பது இப்போது மறைமுகமானது. சிநேக ரீதியானது போல தோற்றம் காட்டுவது. காரணம் மகிந்த ராஜபக்ஸ ஒரு சுதேசியாகத் தோற்றம் தருபவர். அத்துடன் பிராந்திய நாடுகளுடனான உறவில் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திரோபாயத்தைக் கொண்டவர். மேலும் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்குலக நெருக்கம் என்பது புலம் பெயர் தமிழர்களின் மூலமாக இலங்கைத் தமிழர்களை அனுசரிக்க வேண்டி வரலாம் என்ற எச்சரிக்கையுணர்வை உடையவர். மட்டுமல்ல, வருகின்ற காலத்தில் மேற்குலகத்துக்குச் சவாலாக பொருளாதார ரீதியில் சீனாவும் இந்தியாவும் எழுச்சிபெற்று வருவதையும் சரியாக விளங்கிக் கொண்டு காரியமாற்றுபவர் மகிந்த ராஜபக்ஸ.

எனவே அவர் மேற்குலகத்தை விடவும் இந்தப் பிராந்தியத்துடனான உறவையே அதிகம் விரும்புகின்றார். இதை மேற்குலகம் விரும்பவில்லை. அதனால் அவரை அது நெருக்குகிறது. பழிவாங்கத்துடிக்கிறது. இந்த நெருக்கடியை தனியே நின்று அவரால் ஒரு போதுமே சமாளிக்க முடியாது. அதற்கு தமிழ் சிங்கள உறவுக்கான அடிப்படைகளை அவர் சீராக்க வேணும். இல்லை என்றால் இந்தியாவிடமோ சீனாவிடமோ சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்போதும் மேற்குலகம் இலங்கையைச் சும்மா விட்டு விடாது. ஆகவே கொந்தளிக்கும் நிலைமைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டுச் சூழலைப் பிறர் கையாள்வதற்கு எவரும் இடமளிக்கக் கூடாது. இதில் அரசாங்கத்துக்குக் கூடுதல் பொறுப்புண்டு. இதற்கு மேன்மையான குணங்களும் விரிந்த அரசியற் பார்வையும் விட்டுக் கொடுப்புகள், ஏற்றுக் கொள்ளல்கள், சகித்துக் கொள்ளுதல்கள் என்ற ஜனநாயகப் பண்புகளும் அவசியம். இல்லையெனில் தொடரும் துயரம். கொந்தளித்துக் கொண்டேயிருக்கும் இலங்கை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com