Wednesday, March 31, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! – கிறேசியன்! (பாகம் -23)

இரண்டாவது நாள் பூசை (அடி) முடிந்ததும், நடராஜ் அவர்களை அழைத்தேன். எனது அறையின் கதவருகில் வந்த அவரை ஓரமாக அமரும்படி கூற அவரும் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தார். அண்ணே, உங்களை எதற்காக இவர்கள் பிடித்து வந்தார்கள்? என்று ஆரம்பித்தேன் அவரிடத்தில்.

அவர் சொன்னார், தம்பி என்ர ஊர் புங்குடுதீவு, இவர்கள் அங்க ஒரு முகாம் வைத்திருந்தாங்கள், அந்த முகாமுக்கு போனகிழம பொம்பர் (Bomber) வந்து குண்டு போட்டது. பொம்பர் வரேக்க இவங்கட ஒழுங்கேக்கால நான் போய்க் கொண்டு இருந்தனான். பொம்பரைக் கண்டோடன நானும் பக்கத்தில் இருக்கிற முள்ளுக் கம்பிக்கால பூந்து ஒரு பத்தேக்கிள்ள ஒழிச்சன், பொம்பர் குண்டு போட்டிட்டு போனாப் பிறகு வெளியில் வந்து வேலிக்கிள்ளால பூந்து ஒழுங்கேக்க வந்தன்.

பொம்பர் அடிச்சதால இவங்கட காம்பில இருந்த 2, 3 பேர் செத்துப் போய்ரினம். நானும் வெளியில் நிண்டு பார்த்திட்டு போனநான். அது புலனாய்வுக் காரர்ர காம்பாம்.

பார்த்திட்டு கொஞ்சத் தூரம்வரை ஒழுங்கேக்கால போய்கொண்டு இருக்கேக்க ரெண்டு தடியங்கள் வந்து என்ன இழுத்துக் கொண்டு போய் அவங்கட காம்பில போட்டு அடிச்சாங்கள். ஏன்றா அடிக்கிறீங்கள் என்று கேட்டதற்கு, நீதான் பொம்பர்காரனுக்கு எங்கட காம்பக் காட்டிக் கொடுத்தது என்று சொல்லி சொல்லி அடிச்சாங்கள்.

நான் வேலிக்கால பூந்து போய் பத்தேக்கிள்ள இருந்து காட்டிக் குடுத்தனான் என்று சொன்னாங்கள். அறிவு கெட்ட சனியன்கள்! பத்தேக்கிள்ள இருந்து கையால காட்ட பொம்பர்காரன் அடிச்சான் என்று சொல்லிறாங்கள்! நான் நடக்கிறதே அடிபம்புல தணணியடிக்கிற மாதிரி! இதுக்கிள்ள பொம்பருக்கு எப்படி கைகாட்டுறது! வாக்கி ரோக்கி வச்சிருந்தனானாம்! அதை எறிஞ்சு போட்டன் என்று சொல்லிறாங்கள்! எனக்கு இங்கிலீசும் தெரியாது, சிங்களமும் தெரியாது! பொம்பற ஓடிவாறவன் என்ன தமிழனா நான் தமிழில் கதைக்கிறத்துக்கு. அலுக்கோசு சனியன்களுக்கு அறிவே இல்லை!

தம்பி இந்தக் காலைப் பாரும், என்று கூறி தனது சறத்தை வலது காலின் தொடவரைக்கும் இழுத்துக் காண்பித்தார். உரிக்காத இரண்டு பணங்கிழங்குகளைப் பொருத்திவிட்டது போன்று இருந்தது அவரது கால்கள்.

நடராஜ் அவர்களது வறுமை அவரது முகத்திலும் உடலிலும் அப்பட்டமாக தெரிந்தது. அவரால் தன்னையே பராமரிக்க முடியாத நிலையில் இருந்தார். பல குடும்பங்கள் சந்தேகத்தால் அழிந்துபோன வரலாறுகள் உண்டு. சந்தேகத்தால் சில நாடுகள் மோதிக்கொண்டு அழிந்த வரலாறுகளும் உண்டு! விடுதலைப் புலிகளும் சந்தேகத்தால் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று பின்னர் இவர்களையே உலகநாடுகள் நம்பாமல் கைவிட்ட வரலாறும் எங்கள் கண்முன்னே நடந்தது.

சந்தேகத்துக்கான அடிப்படையே இல்லாத இந்த நடராஜ் அவர்களை இவர்கள் பிடித்து வந்து படுத்திய கொடுமை இந்தப் புலிவிலங்குகள் இயக்கத்துக்கு மட்டுமல்ல, தமிழர் விடுதலைக்கே பெருத்த அவமானமாகும். புலி விலங்குகளது இரக்கமற்ற கொலைகளால் தமிழ் இனம் விடுதலையை இழந்து நிற்கிறது!

நடராஜ் அவர்களைப் பொறுத்தவரை இவர்களது தாக்குதல்களை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, “நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்” இவர்கள் அடிக்கேக்க ஏனடா அடிக்கிறாய் எண்டு கேக்கிறனான்” இவங்களால எந்தப்பதிலையும் சொல்ல முடியாது! என்று கூறினார்.

நடராஜ் அவர்களின் மனம் ஏற்கனவே பலதரப்பட்ட வலிகளைத் தாங்கியுள்ளது. அதனால் இந்தப் புலி விலங்குகளின் அடிகள் அவரை வருத்தவில்லை.

தொடரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com