Tuesday, March 30, 2010

யாழ் மாவட்ட பெருமக்களே! உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!

எமதினிய பாசமிகு யாழ் மாவட்ட பெருமக்களே!உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!
எமது அன்பின் தோழரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான தோழர் சிறீதரன் அவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் அரிய வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மெழுகுதிரி சின்னத்துக்கு நேரே உங்கள் புள்ளடிகளை இடுவதோடு தோழர் சிறிதரன் அவர்களின் இலக்கமான 6 க்கு மேலேயும் உங்கள் புள்ளடிகளை இடுங்கள் என வேண்டிக் கொள்கிறோம்.

தோழர் சிறிதரன்(சுகு) அவர்கள் தமது மாணவபிராயத்திலிருந்தே தமிழர்களின் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் உழைத்து வருபவர். இதனால் அவரது உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்ததுடன், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நான்கு ஆண்டுகாலமாக இராணுவக் கொத்தளங்களிலும் வெலிக்கடையிலும் சிறைவாசம் அனுபவித்தார். இராணுவத்தின் சித்திரவதைகளுக்கும் சிறைவாசக் கொடூரங்களுக்கும் உள்ளானார்.

தாம் கொண்ட கொள்கையில் உறுதியான தோழர் சிறிதரன் அவர்கள் மரணத்தின் வாயில்களைக் கண்டபோதிலும் தாம் தொடங்கிய இலட்சியப்பாதையில் பேராபத்துக்களின் மத்தியிலும் கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கட்சித் தோழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய அணிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் எப்போதும் கண்ணியமாகவும் கனவானாகவும் நடந்து வந்துள்ள பண்பாளர். பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகாத உறுதியான நெஞ்சமும் நேர்மையான நடத்தையும் கொண்ட போராளி அவர்.

1970களின் நடுப்பகுதியிலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தத் தொடங்கிய சிறிதரன் அவர்கள் “ஈழ மாணவர் குரல்” என்னும் எழுச்சிப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். மேலும் ஈழமுழக்கம், செந்தளம் மற்றும் செந்தணல் ஆகிய வெளியீடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கண்ணோட்டம் பத்திகையின் ஆசிரியராகவும் அரசியல் எழுத்துப் பணியாற்றி வருகிறார். அவர் அயராத அபாரமான எழுத்தாளர். கட்சித் தோழர்கள் மத்தியில் உதாரண புருஷனாகவும் ஆற்றல் மிக்க ஆசானாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை வழி நடத்தும் ஒரு புரட்சிகரத் தலைவனாக அவர் செயற்பட்டு வருகிறார்.

ஈழத் தமிழர்கள் சுயாட்சி கொண்ட அதிகாரப் பகிர்வைப் பெறவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும், தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஜனநாயக ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவும் அனைத்து தளங்களிலும் அயராது அஞ்சாது உழைத்து வருபவர்.

அரசியல் உரிமைக்கான போராட்டமும் சமூகத்தில் நிலவும் சாதிகள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிப்பதற்கான போராட்டமும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான பற்றுறிதி கொண்டு செயற்பட்டு வருபவர். 1980களில் “தட்டுகளில் உணவும் சிரட்டைகளில் தேனீரும் வேண்டாம்” என்ற கோஷங்களுடன் நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முக்கிய செயற்பாட்டாளாராக விளங்கியவர்.

தமிழர்கள் மத்தியில் சாதிகளின் பேரிலுள்ள கொடூரங்களை ஒழிப்பதற்கு சிறுப்பிட்டி மத்தாள் ஓடை போன்ற இடங்களில் மக்கள் முன்னணிகளை அமைத்து நில உரிமைப் போராட்டங்கள் மற்றும் கூலிப்போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அதற்காக கிராமங்கள் தோறும் ஓய்வு உழைச்சலின்றி உழைத்தவர், அவ்வாறு உழைத்துக் கொண்டிருந்த கிராமிய முன்னணிகளோடு சேர்ந்து நின்றும் செயற்பட்டவர்.

இப் போராட்டத்தின் ஒரு அங்கமாக கூலிவிவசாயிகளும் மாணவர்களும் இணைந்து ‘ஜனசக்தி’ எனப் பெயரிடப்பட்ட சவர்க்காரங்களைத் தயாரித்து விற்பனை செய்து கூலிவிவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார்.

தோழர் சிறிதரன் அவர்கள் தமிழர்கள் மத்தியிலுள்ள சக்திகள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியிலும் இந்தியத் தலைவர்கள் மத்தியிலும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கும் முன்னேற்றங்களுக்கும் தோழர் சிறிதரன் அவர்கள் மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாகவும் பொறுப்பான தலைவனாகவும் சந்தர்ப்பவாதங்களுக்கு இடமளிக்காது தொடர்ந்து போராடும் சிறந்த போராளியாகவும், காலம் சூழல் அறிந்து அதற்குத் தக்கபடி மக்களின் நலன்கனை முன்னிறுத்தி உரியமுறைகளிற் செயற்படும் செயல்வீரனாகவும் இருப்பார் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

யாழ்ப்பாண வாக்காளப் பெருமக்களாகிய நீங்களும் இந்த நம்பிக்கைகளோடு நல்ல தலைவனான, சிறந்த தோழனான, அறிவார்ந்த சிந்தனையாளனான, உறுதியான போராளியான தோழர் சிறிதரன் (சுகு) அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்களின் பாராளுமன்றப் பிரதிநிதி ஆக்குமாறு உங்களை நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முதலில் மெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடி : அதே வாக்குச் சீட்டில் கீழேயுள்ளதோழர் சிறிதரனின் இலக்கம் 6 க்கும் உங்கள் புள்ளடி.

வேண்டுவோர்:ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள்,அத்துடன் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் சர்வதேசக் கிளைகளின் அன்புத் தோழர்கள் நண்பர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com