Friday, February 12, 2010

பொன்சேகா சார்பான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து அவரது மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசு சார்பாக ஆஜராகியிருந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிஸ்ரர் ஜெனரல் சஞ்சீவ ராஜரத்தினம், குறிப்பிட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என எதிர்பை தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட நபராலோ அன்றில் சட்டத்தரணி ஒருவராலேயே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட முடியும் என்ற வாதத்தை முன்வைத்திருந்தார். ஜெனரல் சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளில் ஒருவரான ஸிப்லி அசீஸ், மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டிய அதிமுக்கிய காரணங்களை கருத்தில் கொண்டுமன்று மனுவினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தனது வாதத்தை முன்வைத்தார்.

இவ்வாதத்தினை ஏற்றுக்கொண்ட பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா, சிராணி திலகவர்த்தன, சந்திரா எக்கநாயக்க ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழு மனுவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதுடன், அரச தரப்பினர் தமது வாதங்கள் தொடர்பான சகல ஆவனங்களையும் எதிவரும் 19ம் திகதிக்கு முன்னர் மன்றுக்கு சமர்பிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மன்றில் அனோமா பொன்சேகா, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜெயசூரிய, ஜயலத் ஜெயவர்த்தன, ரவி கருணாநாயக்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் யோகராஜன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

அதேவேளை, ஆளும் கட்சி சார்பில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறும்போது உச்சநீதிமன்றுக்கு வெளியே கூடியிருந்த ஜெனரல் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டுக் அவர்களை கேலி செய்ததைக் காணமுடிந்தது.
மனு விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த தருணத்தில் உயர்நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்,

அதே நேரம் நீதிமன்றவளாகத்திற்கு வெளியே சட்டத்தரணிகள் குழுவொன்று ஜெனரல் பொன்சேகாவின் கைதினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com