Friday, February 12, 2010

தலாய் லாமாவை 18 ல் சந்திக்கிறார் ஒபாமா : கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி .

அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவை அதிபர் பராக் ஒபாமா, வருகிற 18 ஆம் தேதியன்று சந்தித்துப் பேச உள்ளார். தலாய் லாமாவை சந்திக்கக்கூடாது என்று சீனா தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா ஏற்கனவே நிராகரித்து விட்டது. தலாய் லாமா அமெரிக்கா வந்தால் அவரை நிச்சயம் அதிபர் பராக் ஒபாமா சந்தித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ள தலாய் லாமா, பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை வாஷிங்டனில் தங்க உள்ளார். அப்போது தலாய் லாமாவை பராக் ஒபாமா சந்தித்துப் பேசுவார் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பில்கிளிண்டன் (63), பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி தீவின் மறு சீரமைப்பு பணிக்குழுவின் ஐ.நா.தூதராக உள்ளார். இதன் காரணமாக அவர் கடந்த பல நாட்களாக போதுமான ஓய்வு இல்லாமல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கிளிண்டனுக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, கொலம்பியா வளாகத்தில் உள்ள நியூயார்க் பிரஸ்பைடேரியன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை இருதய சிகிச்சை நிபுணர்கள் பரிசோதித்தனர். அப்போது இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.

இதை தொடர்ந்து அவருக்கு உடனடியாக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com