Friday, February 12, 2010

பிரபாகரன் மரணச் சான்றிதழை வழங்குவதில் சட்டச் சிக்கல்: அரசு.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. அவரது மரணச் சான்றிதழை வழங்குவதற்கு பல நடைமுறைகளும், கால அவகாசமும் தேவைப்படும் என்று இலங்கை கூறியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடந்த மோதலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை கூறியது. பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்றால் அதற்கான இறப்புச் சான்றிதழை வழங்குமாறு இலங்கையிடம் கோரியது இந்தியாவின் சி.பி.ஐ. மத்திய அரசும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தது. இருப்பினும் இதுவரை இறப்புச் சான்றிதழை இலங்கை வழங்கவில்லை. மாறாக மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளை மட்டுமே இந்தியாவிடம் வழங்கியுள்ளது.

ஆனால் இந்திய ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ளி‌ல் மரணச் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் ஒருவர் மீதான வழக்கை மூட முடியும். இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்குகளை மூட முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ.யிடம் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைத்து விட்டதா என்று கேட்டதற்கு இல்லை என்று சி.பி.ஐ பதிலளித்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை இலங்கை சி.பி.ஐ.யிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சி.பி.ஐ இயக்குநர் அஸ்வினி குமார், பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை என்றார். இதனால் குழப்பம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் மரணச் சான்றிதழக்கு சமமான கடிதத்தை இந்தியாவிடம் கொடுத்துள்ளதாக இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இலங்கை நீதிமன்றத்தால் பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கடிதத்தை இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கி விட்டது.

பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. அவரது மரணச் சான்றிதழை வழங்குவதற்கு பல நடைமுறைகளும், கால அவகாசமும் தேவைப்படும். எனவேதான், அதற்கு சமமான நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ ஆவணத்தை இந்தியாவிடம் வழங்கி உள்ளோம் என்றார்.

ஆக, மரணச் சான்றிதழ் என்று ஒன்றை இலங்கை இப்போதைக்கு இந்தியாவிடம் வழங்காது என்றே தெரிகிறது. அது கிடைக்கும் வரை பிரபாகரன் குறித்த சர்ச்சைகளும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com