Monday, January 25, 2010

வட மாகாண டிஐஜீ யின் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரியது PAFFREL.

தேர்தல் ஆணையாளர் உடன் நடவடிக்கை.
வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் லெவ்கே மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமன் சிகேரா ஆகியோருக்கு உடனடியா அமுலுக்கு வரும்படியாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு பொலிஸ்மா அதிபரினால் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் வட பிராந்தியத்தில் தேர்தல் மோசடிகளுக்கான முன் ஏற்பாடாக நிகழ்ந்துள்ளதாக எதிர்கட்சிகள் பலவற்றாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பவ்ரல் (PAFFREL) அமைப்பு மேற்படி இடமாற்றங்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரை எழுத்து மூலம் கேட்டுள்ளது.

அக்கடிதத்தில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமன் சிகேரா ஆகியோர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் கட்டளையின் படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அமைய தேர்தல் காலங்களில் இடமாற்றங்கள், புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள் சட்டத்திற்கு முரணானதாகும். எனவே குறிப்பிட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்துச் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு உங்களை வேண்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஒன்று இடம்பெறுகின்ற தருணத்தில் இவ்வாறான விடயங்களில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அதி விசேட அதிகாரங்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாககும்.

தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார். இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளிவரவில்லை.

எது எவ்வாறாயினும் டிஐஜி இடமாற்றம் செய்யப்படவில்லை எனவும் அவரது கடமைகளை கொழும்பிலிருந்து மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் பேச்சாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com