Friday, January 29, 2010

தற்காலிக அரசியல் தஞ்சம் கோரவுள்ளேன் : அரசு தடுத்து நிறுத்துகின்றது. பொன்சேகா.

முன்னாள் இராணுவத் தளபதியும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு உயிராபத்து அதிகரித்து வருவதாகவும் வெளிநாடொன்றில் தற்காலிக அரசியல் தஞ்சம்கோர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அவர் அமெரிக்கா , பிரித்தானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு நாட்டம் உண்டா என பத்திரிகையாளர் வினவியபோது அவுஸ்திரேலியா வாழ்வதற்கு சிறந்ததோர் இடம் எனவும் அந்நாட்டுக்கான உயரிஸ்தானிகரை தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் கூறியதுடன் அவர்கள் தனக்கு வீசா வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உண்டு, ஆனால் தன்மீது எவ்வித குற்றஞ்சாட்டுக்களும் பதிவு செய்யப்படாத நிலையில் அரசாங்கம் தன்னை நாட்டை விட்டு வெளியேறாதவாறு தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பொன்சேகாவின் அரசியல் தஞ்சம் தொடர்பாக அந்நாட்டின் வெளிவிகார அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, அப்படி ஒரு கோரிக்கை இதுவரை உரிய முறைப்படி தமக்கு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர், இரண்டு விஷயங்கள் முக்கியமானவை ஒன்று பொன்சேகா சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவது அவருக்குரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா கைது செய்யப்படுவது தொடர்பாக முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் அரசின் உயர் மட்டத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி ராஜபக்ச வை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட பொன்சேகா முயன்றதாக அரசினால் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சேயையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்துள்ளது. இவ்விடயம் ஜெனரல் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டல் முன் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து தப்பியோடிய 9 பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிலிருந்து வெளிவந்துள்ளதாகவும், அவர்கள் ஜனாதிபதியை கொழும்பு-காலி வீதியில் அல்லது லேக்கவுஸ் சுற்று வட்டத்தில் வைத்து கொல்ல திட்டமிட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளதுடன் இச்சதியில் பொன்சேகாவும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகா மீதான மேற்படி குற்றச்சாட்டுக்கள் அரசினால் முன்வைக்கப்பட்ட மறுபுறத்தில் அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 20 கொமாண்டோக்கள் அடங்கிய 70 இராணுவ வீரர்களும் குண்டு துளைக்காத வாகனங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புக் குறித்து நாட்டின் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'பொன்சேகா எனது முன்னாள் இராணுவத் தளபதி அவருக்கு என்ன பிரச்சினை?, பாதுகாப்பு தொடர்பான என்ன பிரச்சினை என்றாலும் அவர் எப்போதும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம்'' என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் , இலங்கையில் சட்டம்-ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது. நாட்டை விட்டு வெளியே செல்ல எனக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்னையும், எனது பாதுகாவலர்களையும் கைது செய்யவும், பின்னர் என்னை கொலை செய்யவும் திட்டமிட்டு உள்ளனர் என பொன்சேகா தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக ஜனாதிபதியின் சகோதரரும் அவரது சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச விடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, பொன்சேகா மீது ஏராளமான புகார்கள் இருப்பதாகவும், அதற்கு அவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றும், எனவே இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த புகார்கள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது எப்படி? என்பது பற்றியும் அரசு ஆய்வு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நான் நாட்டை விட்டு வெளியேறப்போகிறேன். நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர்வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டி இருக்கிறது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. எனினும், இலங்கை மக்களுடன் தொடர்பில் இருப்பேன் எனவும் எதிர்வரும் பொது தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவேன் எனவும் ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட எவரும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு படையினர் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக நபர்கள் சிலர் பற்றிய தகவல்கள் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கப்பட்டு உள்ளன.

தேர்தலில் ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கை முன்னாள் ராணுவ அதிகாரிகள் இந்த சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகவும் அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

தேர்தல் முடிவடைந்து மூன்று நாட்களில் ஜெனரலுடன் நெருங்கியிருந்த சுமார் 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி உயர் மட்டத்தினரின் கருத்துக்களின் அடிப்படையில் ஜெனரல் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. பௌத்த விகாரை ஒன்றில் வைத்து மீட்க்கப்பட்ட ஆயுதங்களுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக அன்றில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினரின் வாக்குமூலங்களை கொண்டு இவர் கைது செய்யப்படலாம் என்றே பெரிதும் நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com